16.08.20- சக்தி - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

16.08.20- சக்தி

 





"சக்திஅருளானந்தம்


16.08.20


வீட்டிற்குத்  திருடன் வந்தால் அலாரம் ஒலிக்கும் கருவி...ரயில்களில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் பயோ டாய்லெட்.. அரக்குசீல் வைக்கும் கருவி..இப்படி 14 கண்டுபிடிப்புகளைத் தந்த இளம் பெண் விஞ்ஞானி மாஷா நசீம்!


தேசிய இளைஞர் விருதினை குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி திருமதி மாஷா நசீம் பெற்றிருக்கிறார். விஞ்ஞானம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்களுக்குப் புதிய கண்டுபிடிப்புகளை கற்பிக்கும் சேவையைப் பாராட்டி 2018 ஜனவரியில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய இளைஞர் விழாவில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.


தன்னுடைய பள்ளி பருவத்திலே தன் அறிவியல் ஆக்கத் திறனால் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார். .


இரவிபுதூர்கடையை சேர்ந்த அரசினர் கருவூலத்துறையில் பணியாற்றும் காஜா நசீம் – சுமையா பேகம் தம்பதியரின் மகளான மாஷா ஆரம்ப கல்வியை பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியிலும், இடைநிலை கல்வியை பாளையங்கோட்டை புனித இக்னேஷியஸ் கான்வென்டிலும், உயர்நிலை கல்வியை நாகர்கோவிலில் புனித ஜோசப் கான்வென்டிலும் படித்து திருச்செங்கோடு வித்யாவிகாஸ் மேல்நிலைபள்ளியில் மேல்நிலைக்கல்வியை பயின்றவர்..


சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் பிஇ முடித்த தாய்நாட்டிலேயே படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் எஸ் ஆர் எம் பல்கலைகழகத்தில் எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்..


சிங்கப்பூர் நான்யாங் டெக்னிக்கல் பல்கலைக்கழகம் இவரை பட்டமேற்படிப்பு

படிக்க கல்வி உதவித்தொகையுடன் படிக்க அழைத்தது.அந்த அழைப்பை நிராகரித்து "தமிழ் நாட்டில் தான் என் படிப்பு.ஆராய்ச்சி எல்லாம்.என் அறிவு தாய்நாட்டுக்கே பயன்பட வேண்டும்" என்றவர் இவர்!

 

8 ம் வகுப்பில் பயிலும் போது 13 வயதில் ஆரம்பித்த அறிவியல் ஆர்வத்தினால் சுமார் 14 வியத்தகு கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கிய பெருமை மாஷா நசீமுக்கு உண்டு. இவரது கண்டுபிடிப்புகள் பல்வேறு அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசுக்கு தேர்வும் செய்யப்பட்டுள்ளது


தான் பெற்ற அறிவியல் ஆர்வத்தை பிறருக்கும் தூண்டும் வகையில் நாகர்கோவில் அருகில் பார்வதிபுரம் என்னுமிடத்தில் ”மாஷா ஆக்கத்திறன் மையம்” என்னும் புத்தாக்க மையம் மூலம் பிற மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார்.


கடந்த 12 வருடங்களில் சுமார் இரண்டு லட்சம் கி. மீ. தூரம் பயணித்துள்ள மாஷா நசீம் 11 லட்சம் மாணவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்து அறிவியல் ஆர்வத்தை தூண்டியுள்ளார்.


"நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டம், பள்ளிப் படிப்பை அங்கேயே முடித்தேன். சிறுவயதில் இருந்தே புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. 


நான் பள்ளியில் படிக்கும் காலகட்டங்களில் சக மாணவர்கள் விளையாட்டு, நடனம், இசை இப்படியாக பல்வேறு திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் எனக்கு புதிய கண்டுபிடிப்புகள் மீதே ஆர்வம் அதிகமாக இருந்தது. எனக்கு 9 வயது இருக்கும்போது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், வீட்டிற்குத் திருடன் வந்தால் எப்படித் தெரிந்து கொள்வது என்பதற்கான அலாரம் ஒன்றைக் கண்டுபிடித்து வைத்தேன். என்னுடைய இந்த முதல் கண்டுபிடிப்புக்கு நண்பர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 


அனைவருடைய பாராட்டும் நான் தனித்துவமாக இருப்பதாக உணர்த்தியது. அவர்களின் பாராட்டுகள்தான்  மேலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை எனக்குள் விதைத்தது. அதன் பின் அதிநவீன ரயில் கழிவறை மற்றும் அரக்கு சீல் வைக்கும் கருவி, விஐபி பாதுகாப்பு சிஸ்டம், எரிபொருள் வழங்கும் எளிய முறை என 14 புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினேன். 


என்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு 2 சர்வதேச விருதுகளும் 5 தேசிய விருதுகளும் பெற்றிருக்கிறேன். கடந்த 2011இல் நடந்த சட்டசபை தேர்தலின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனை முறையில் என்னுடைய அரக்கு சீல் வைக்கும் கருவியை தேர்தல் ஆணையம் பரிந்துரைப்படி பயன்படுத்தப்பட்டது. தமிழக அரசு எனக்கு ‘மாநில இளைஞர் விருது’ வழங்கியது.அதனை முதல்வர் ஜெயலலிதா அம்மா கரங்களால் பெற்றது பெரும் பேறு. 


என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தவர் என்னுடைய தந்தை காதர் நஷீம் முதீன்தான். கணவரும் இப்போது உற்சாகப்படுத்தி வருகிறார். எங்களுடைய சமுதாயத்தில் பெண்கள் அவ்வளவாக வெளியில் வருவதே கிடையாது.


சொந்தங்களும் என்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சிலரும் அப்பாவிடம் எதற்கு இந்த வேலையெல்லாம் என்று அறிவுரை கூறி னார்கள். அவற்றை எல்லாம் உடைத்து என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த பெருமை என் அப்பாவையே சேரும். அன்று அறிவுரை கூறிய அனைவரும் இன்று என்னைப் பாராட்டுகிறார்கள். 


அறிவியல் துறையில் என்னுடைய முன்மாதிரி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அய்யா அவர்கள்தான். என்னுடைய கண்டு பிடிப்புகள் மூலம் நான் அப்துல் கலாம் அய்யாவை சந்திக்கும் வாய்ப்பு 14 வயதில் எனக்குக் கிடைத்தது. என்னுடைய கண்டுபிடிப்புகளைப் பார்த்துப் பாராட்டினார். 


என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள் அவை. நான் எம்.டெக் வரை படித்தி ருக்கிறேன். படிப்பு முடிந்ததும் ஆக்கத் திறன் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடு பட்டேன். மாணவர்கள் பல பேர் அறிவியல் ஆக்கத் திறனில் ஆர்வமாக இருந்தனர். அவர்களுக்காக நாகர் கோயிலில் மாஷா அறிவியல் ஆக்கத் திறன் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறேன். 


இங்கு பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்ய மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறேன். மாணவர்களுக்குத் தோன்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய யோசனைகளை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி கற்றுத் தரப்படுகிறது. பொதுவாக இது போன்ற புதிய கண்டுபிடிப்புகளை அறிவியல் விஞ்ஞானிகள்தான் செய்வார்கள் என்று சிலர் தவறாக நினைத்து விடுகிறார்கள். 


பெற்றோர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. ‘தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்று சொல்வார்கள். அது போலவே படித்தவர்களாக இருந்தாலும், படிக்காதவர்களாக இருந்தாலும் அவர்களுக்குத் தோன்றும் வித்தியாசமான எண்ணம்தான் ஒருவரை ஆக்கபூர்வ விஞ்ஞானியாக்கும் என்பது என்னுடைய கருத்து. 


எங்களுடைய மாஷா அறிவியல் ஆக்கத் திறன் பயிற்சிப் பள்ளியில் பயின்ற பள்ளி மாணவர்கள் 7 பேரின் புதிய கண்டு பிடிப்புக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. கண்டுபிடிப்பு என்பது மிகவும் எளிமையானது. அதற்கு வயது தேவையில்லை. ஆண், பெண் பாலின பாகுபாடு தேவையில்லை. 


யார் வேண்டுமானாலும் கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம். அன்றாட வாழ்வில் மக்களுக்குத் தேவைப்படுகின்ற அறிவியல் கண்டு பிடிப்புகளே நமக்குத் தேவைப்படுகிறது. அப்படியான அறிவியல் கண்டுபிடிப்புகளை பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆய்வறிக்கையாகக் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது கல்லூரிகளில் கொடுக்கப்படும் ஆய்வறிக்கைகள் மதிப்பெண் அடிப்படையில் வழங்கப் படுவதால் ஏற்கனவே செய்து வைத்திருப்பதை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். மதிப்பெண் மட்டும் மாணவர்களை உருவாக்காது. 


திறமைதான் மாணவர்களை உருவாக்கும். தற்போது என்னுடைய பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறேன். இந்தப் பயிற்சிப் பள்ளியை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். 


அறிவியல் ஆக்கத்திறன் குறித்து தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இது குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவேன். மாணவர்கள் ‘மாஷாவை போல் விஞ்ஞானியாக வேண்டும்’ என்று சொல்லும்போது கிடைக்கின்ற மகிழ்ச்சி எந்த விருதுக்கும் இணையாகாது” என்கிறார்!

நன்றி

பாண்டியன் சுந்தரம்

#பெண்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages