17.08.20 : ரேவா-பீமவர்மனின் வாரிசுகள் 03 - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

17.08.20 : ரேவா-பீமவர்மனின் வாரிசுகள் 03



கவிஞர் அனுராஜ்



#ரேவா


#பீமவர்மனின்_வாரிசுகள்_03


பல்லவ தேசத்தின் வேந்தன் பரமேஸ்வரவர்மன் விலந்து எனுமிடத்தில் நடைபெற்றப்  போரினில் கங்கமன்னன் சிறீபுருசனால் கொல்லப் பட்டதும், கங்கனுக்குத்  துணையாக நின்ற சாளுக்கிய இளவரசன் விக்கிரமாதித்தன்  காஞ்சியை முற்றுகையிட தன் படைகளுடன் விரைந்தான்..அதே வேளையில் பரமேஸ்வரவர்மனது உடலைக் கைப்பற்றி கொண்டு வந்த தளபதி பல்லவடி அரையனும், உபதளபதி உதயச்சந்திரனும் திருவத்திபுர அரண்மனையில் மன்னனது உடலை அடக்கம் செய்விக்கிறார்கள்..அத்தோடு பல்லவ அரசின் முதல் நிலை ஆலோசகர் அனைவரும் ஒன்றிணைந்து பல்லவ தேசத்திற்கான அடுத்த மன்னனை தேர்ந்தெடுக்க முனைகிறார்கள். பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனுக்கு சித்ரமாயன் என்ற மகனிருந்தும் அவனது துர்நடத்தையின் காரணமாகவும், அவனது தாய்மாமன் வீரமல்லனின் ஆலோசனையின் பேரில் சாளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு கைப்பாவையாக சித்ரமாயன் மாறி விட்ட காரணத்தாலும், பல்லவ அரசியலில் முதன்மை பொறுப்பில் இருந்த இராஜ விசுவாசிகளுக்கு சித்ரமாயன் மேல் ஏற்பட்ட வெறுப்பாலும், மதுவின் போதையிலும் மங்கைகளின் சகவாசத்தாலும் சீரழிந்து போயிருக்கும் சித்ரமாயனை பல்லவ அரசபீடத்தில் ஏற்றுவது நாட்டிற்கு ஆபத்தையே விளைவிக்கும் என்பதனாலும், சித்ரமாயனை அரசுக் கட்டிலில் இருந்து அகற்றுவதற்கும், அவ்விடத்திற்கு பொருத்தமான ஒரு வேந்தனை நியமிப்பதற்கும் ஆலோசனைக் கூட்டமொன்று திருவத்திபுர அரண்மனையில் நடக்க, அதில் பங்கேற்ற  பல்லவ தேசத்தின் முதலமைச்சர் பிரம்மஸ்ரீராஜன் , "எனக்கு ஒரு எண்ணம் எழுகிறது..!  அதை செயல்படுத்தினால் என்ன..? " என்றார் பூர்வாங்க யோசனையோடு.


" ம்..சொல்லுங்கள் கேட்போம்.." என்றார் மூலப்பிரகிருதியார்.


" உங்கள் அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்..நமது பல்லவ தேசத்தின் தனிப்பெரும் சிம்மம், சிம்மவிஷ்ணு  மகாராஜாவின் தம்பி பீமவர்மன்  *புனான்  தேசத்தின் மருமகனாகி, இன்று அவரது வம்சாவளியினரே அரசு புரிகின்றனர் என்பது, நாம் அனைவரும் அறிந்தது தானே.." என்று கூறியபடி சிறிது பேச்சினை நிறுத்தினார்.


" ஆம்..அதனை தான் அனைவரும் அறிவோமே..! அதற்கென்ன இப்போது.." என்றார் ஒன்றும் புரியாமல் தளபதி பல்லவடி அரையன்.


பல்லவடி அரையனது முகத்தை கூர்ந்து கவனித்தவாறே.." பீமவர்மனின் வாரிசு தான் இப்போது புனான்  தேசத்தின் மன்னர் கடவேச ஹரிவர்மா என்றழைக்கப்படும் ஹிரண்யவர்மன்..அவருக்கு நான்கு மகன்கள் இருப்பதாக கேள்வி..நாம் ஏன் அவரிடம் சென்று நமது நிலையை எடுத்துரைத்து பல்லவ தேசத்திற்கு இப்போது நேர்ந்திருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடாது.." என்றார் பிரம்மஸ்ரீராஜன்.


" புனான் தேசத்தை சென்லா அரசவம்சம் அல்லவா அரசாள்கிறது..பல்லவரது தேசத்திற்கு சென்லா அரச வம்சக் கிளை எவ்வாறு பொருந்திப் போகும்..? " என்றான் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் எண்ணத்தில் உதயசந்திரன்.


சட்டென அவனை நோக்கித் திரும்பிய முதலமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன் " உதயச் சந்திரா..உனக்கு புனான் தேசத்தின் வரலாற்றினைச் சொன்னால் தான் புரியும்..சென்லா வம்சம் புனான் தேசத்தின் கடைசி புன்னன் அரசர் ஜெயவர்மனின் மருமகனான ருத்திரவர்மனால் நிறுவப்பட்டது..

புனான் தேசத்திற்கு அருகில் உள்ள சம்பல் தேசத்தினரால் அடிக்கடி போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.. வயது மூப்பின் காரணமாயும், தனக்கு வாரிசு இல்லாத காரணத்தாலும்  ஜெயவர்மன் அவனது மருமகன் சென்லா அரச வம்சத்தை சேர்ந்த ருத்ரவர்மனை அரியணையில் ஏற்றினான். ருத்ரவர்மனே சென்லா பரம்பரையை புனான் தேசத்தில் தோற்றுவித்தவன். ருத்ரவர்மனும்  தன் வாழ்நாளில் பலமுறை சம்பல் தேசத்துடன் நடந்தப் போரினிலேயே காலத்தைக் கடத்தினான்.சம்பல் தேசத்தினருடன் நடந்தப் போரில் ருத்ரவர்மனது மகன்கள் மரணமடைய, மனமுடைந்த ருத்ரவர்மன் தனது மகளைத் திருமணம் செய்திருந்த நம் பல்லவ சிம்ம விஷ்ணுவின் தம்பியான பீமவர்மனுக்கு முடிசூட்டி வைத்து விட்டு அரசியலை விட்டு ஒதுங்கி விட்டான்..எனவே நடந்து கொண்டிருப்பது சென்லா வம்ச ஆட்சி என்றே அழைக்கப் படுகிறது என்றாலும்..அங்கு நடந்து கொண்டிருப்பது பல்லவரது வம்சாவளி ஆட்சியே... இப்போது மன்னனான இருக்கும் கடவேச ஹரி என்ற ஹிரண்யவர்மனுக்கு முப்பாட்டன் பீமவர்மன் நம் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவன்..என்பதனால் தான் , அவனது உதவியை நாடலாம் என்கிறேன்.." என்றார் பிரம்மஸ்ரீராஜன்.


" நல்ல யோசனை தான்..நான் வரவேற்கிறேன் " என்றார் மூலப்பிரகிருதியார்.


" புனான் தேசத்தை இப்போது ஆள்வது பல்லவரது வம்சம் தான் என்பது நீங்கள் கூறிய விளக்கத்தில் இருந்து புரிந்து கொண்டேன்..தங்களது கருத்தும் வரவேற்கக் கூடியது தான்..இதை நானும் ஏற்கிறேன் " என்றான் தலையை அசைத்தபடி உதயச்சந்திரன்.


அனைவரும் பிரம்மஸ்ரீராஜனது கருத்தினை ஏகமாய் ஆமோதித்து ஏற்க, அடுத்ததாக காம்புஜ தேசத்திற்கு கடல் கடந்து செல்ல வேண்டுமே, யார் செல்வது..? எப்படி செல்வது..? என்ற ஆலோசனைகள் அங்கு அதன்பின் அரங்கேறத் துவங்கியது.


காடக முத்தரையரோ, 

" பல்லவ தேசத்தின் தளபதி பல்லவடி அரையன் செல்வதே சிறந்தது ", என்றார்.


மூலப்பிரகிருதியாரும், கடிகையாரும் முதலமைச்சர் பிரம்மஸ்ரீராஜன் செல்வதே நலம் பயக்கும் என்றனர்.


அந்தக்  கருத்துகளை இருவருமே மறுத்தனர்.." தவறாக எண்ண வேண்டாம்..நான் அகவை மிகுந்தவன் , கடற்பயணமாகவோ, தரை மார்க்கமாகவோ செல்லுமளவிற்கு உடலில் வலுவில்லை.. எனவே என்னால் இயலாது என்றார் பல்லவடி அரையன்.


" பல்லவ தேசத்து அபிமானிகளே..நான் செல்லுவதற்கு ஆவலாகத் தான் உள்ளேன்..ஆனாலும் இந்த பல்லவ நாட்டின் முதல் அமைச்சன் என்ற முறையில் நான் இங்கிருப்பது அவசியமாகிறது..என்னை இந்த தேசத்தில் காணவில்லை என்றால் பலரது கேள்விகளுக்கும், ஊகங்களுக்கும் நாமே இடந்தந்தது போலாகும்.. எனவே என்னாலும்  புனான் தேசம் செல்லவியலாது.." என்றார் கவலையுடன் பிரம்மஸ்ரீராஜன்.


" அப்படியெனில் யாரை அவ்வளவு தூரம் நம்பிக்கையோடு அனுப்புவது.." என்றனர் பலரும் முணுமுணுத்தவாறு.


" ஏன்..நமது உபதளபதியும், புரவிப்படைத் தளபதியுமான உதயச்சந்திரனை அனுப்பினால் என்ன..?" என்றார் பல்லவடி அரையன்.


" நல்ல யோசனை..வரவேற்கிறேன் " என்றார் முகத்தில் மகிழ்ச்சி ததும்பிய குரலில் பிரம்மஸ்ரீராஜன்.


முதலமைச்சரின் இந்த வார்த்தையைக் கேட்டதும், அனைவரது பார்வையும் ஏக காலத்தில் உதயச்சந்திரன் மீது பாய்ந்தது.


அனைவரது உள்ளத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்டவனாய், அவனும் , "நல்லது..நான் புனான் தேசம் செல்ல ஒத்துக் கொள்கிறேன் " என்றான் உதயச்சந்திரன்.


தரைமார்க்கமாகச் செல்ல வேண்டுமானால் வேங்கி, கலிங்கம், வழியாக மியான்மரைக் கடந்து லாவோஸ் வழியாக செல்ல வேண்டும் ..ஆனால் அது அடர்ந்த கானகத்தையும், உயரமான மலைகளையும், ஆபத்தான நதிகளையும் கடந்து செல்ல வேண்டிய பயணமாக அமையும் என்பதனாலும், காலவிரையம் அதிகமாகும் என்பதாலும்  கடல் மார்க்கமாக செல்வதே நல்லது என்று முடிவுக்கு வந்தார்கள்..பயணத்தை நாகையில் இருந்து துவக்குவது என்றும் முடிவு செய்யப் பட்டதும், ஆலோசனைக் கூட்டமானது நிறைவடைந்தது.


உதயச்சந்திரனோ  தான் செல்லவிருக்கும் பயணத்தில் ஏற்படப் போகும் ஆபத்தினை உணராதவனாய் கடல் பயணத்திற்கான வேலைகளில் முனைப்பினைக் காட்டினான்.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு :  * புனான் தேசம் என்பது , கம்போடியா, தாய்லாந்த், மற்றும் தென் வியட்நாம் இணைந்த பூமி..கம்போடியா முன்னர் காம்புஜ தேசம் எனவும் வழங்கப் பட்டது..இதையே பாரத தேசத்தவர் சொர்ணபூமி என்றும் அழைத்தனர்.


கண்ணுக்கு அழகான காட்சிகள் ( காமான்யம் ) உள்ளதால் காம்போஜம் எனவும் வழங்கப்பட்டது என்போரும், கம்பளங்கள் அதிகமாக விற்பனை செய்வதனால் காம்போஜம் என வழங்கப் பட்டதாகவும் கூறுவோரும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages