#ரேவா
#உதயச்சந்திரனின்_கடற்பயணம்_04
நாகை என்றும் நாகப்பட்டினம் என்றும் அந்நாளில் சிறப்புப் பெற்றிருந்த துறைமுகம் பல்லவர்களின் வாணிபத்திற்குப் பேருதவி புரிந்து கொண்டிருந்தது.
ரோமானியர்களும், பாரசீகர்களும், அரேபியர்களும் கீழ்திசை நாடுகளுக்குச் செல்லவும் , சீன தேசத்திற்குச் செல்லவும் பாரத தேசத்தின் குணபுலக் கடலின் துறைமுகங்களில் கொற்கையை பாண்டிய தேசத்தை அடையவும், நாகை, அரிக்கமேடு( பாண்டிச்சேரி), கடல் மல்லை போன்ற துறைமுகங்களை பல்லவரது தேசத்தினை அடையவும் பயன்படுத்திக் கொண்டார்கள்..அதேபோல் கீழ்திசை நாடுகளில் இருந்து மேல்திசை நாடுகளுக்குச் செல்லும் மரக்கலங்கள், தமிழகத்தின் இந்த முக்கிய துறைமுகங்களைத் தொடாமல் போவதில்லை..எனவே நாகை அந்த வகையில் என்றும் சுறுசுறுப்புடன் காணப்பட்ட ஒரு துறைமுக நகரமாய் பல்லவர் ஆட்சியில் விளங்கிக் கொண்டிருந்ததெனலாம்.
வானுயர்ந்து நிற்கின்ற சைவ, வைணவ ஆலயங்களும், புத்த விகாரைகளும், சமணப் பள்ளிகளும் பல்லவரது ஆட்சியில் மதவேற்றுமை என்பது இல்லை எனப் பறைசாட்டிக் கொண்டிருந்தது..அக்கடற்கரையில் சுற்றித் திரிந்த பல நாட்டு வணிகர்களும், பிரயாணிகளும் நாகையின் கைவினைக் கலைஞர்களால் உருவானப் பொருள்களை வாங்கிச் சென்றனர்..கடற்கரைத் தோப்புகளில் வளர்ந்திருந்த நாகலிங்க மரங்கள் அங்கு வரும் பயணிகளுக்கும் , பிறநாட்டவர்களுக்கும் தன் வசீகர மணத்தினை வாரி வழங்கிக் கொண்டிருந்ததோடு, அம்மரத்தின் பூவில் காணப்பட்ட கலைநயம் அனைவரையும் வியப்பிலும் ஆழ்த்தியது, லிங்க வடிவை நாகமொன்று படமெடுத்து காத்தது போல் காணப்பட்ட மஞ்சளும், சிவப்பும் கலந்து காணப்பட்ட மலர்களை கண்ணுற்ற அனைவரும் சைவர்களது தேசத்தில் மலரும் பூவானது சைவர்களது இறைவனையே சிருஷ்டிக்கிறதே என வியப்பில் ஆழ்ந்தனர்.
பரதவர்களின் கூச்சலும், கொண்டாட்டமும் கடற்கரையெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது..துறைமுகத்தில் கையாளப்படும் வணிகப் பொருட்களுக்கு தீர்வை கட்டியதும், பல்லவ இலட்சினையை பொறித்து நகரத்திற்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள் கடற்கரைச் சுங்கக் காவலர்கள்.
கம்பீரமாய் எழுந்து நின்ற கோட்டையின் மீது, பல்லவரின் ரிஷபக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. காஞ்சியைக் கைப்பற்றி இருந்தாலும் சாளுக்கிய விக்கிரமாதித்தன் பல்லவரது தேசத்தை பல்லவரது தேசமாகவே வைத்திருந்தான்..சாளுக்கியரது ஆட்சியின் சாயல் எங்கும் தென்படாமல் பார்த்துக் கொண்டான்..கொடிகளை மாற்றவோ, அரசு அதிகாரிகளை மாற்றவோ இல்லை.,அனைத்து இடங்களிலும் பரமேஸ்வரவர்மனின் ஆட்சியின் நடைமுறையே பின்பற்றப் பட்டது. சாளுக்கியரதுக் கட்டுப்பாட்டில் உள்ளது பல்லவரது தேசம் என்ற எண்ணமே , எவருக்கும் நேரா வண்ணம் பல விசயங்கள் தேசமெங்கும் அரங்கேறியிருந்தன. மக்கள் எப்போதும் போல் கோட்டைக்குள் செல்வதற்கும் , கூடிப் பேசுவதற்கும், அவரவர் நடைமுறைப் பணிகளைச் செய்வதற்கும் சாளுக்கிய வீரர்கள் எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை..
பொதுவில் மக்கள் மாற்றானின் பிடியில் பல்லவ தேசம் உள்ளது என்ற எண்ணமே எழாமல் வைத்திருந்தான் இரண்டாம் விக்கிரமாதித்தன்.
அதனால் தான் நாகையிலும் எந்தவொரு மாற்றத்தையும் உதயச் சந்திரனால் காண இயலவில்லை.
பல்லவரது ரிஷபக் கொடி தாங்கிய ஒரு மரக்கலம் உதயச் சந்திரன் மற்றும் அவனது மரக்கல மாலுமிகளோடு தயார் நிலையில் அலைபாயும் கடலின் மேல் கம்பீரமாய் அசைந்தாடிக் கொண்டிருந்தது.
நாகையிலிருந்து கிழக்கு திசை நோக்கி தனது பாய்களை விரித்தபடி, கடலின் நீரோட்டத்திற்கு இசைவாய் பல மாலுமிகள் துடுப்பினைச் செலுத்த கடல் நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தது மரக்கலம்.
மரக்கலம் நகரத் துவங்கியதும் அதன் பக்க வாட்டுப் பலகையில் நன்கு சாய்ந்து வசதியாக நின்று கொண்ட உதயச் சந்திரன், கிளம்பும் போது முதலமைச்சர் பிரம்மஸ்ரீராஜன் சொன்ன வார்த்தைகளை நினைவு படுத்திக் கொண்டான்.
"உதயச்சந்திரா..எப்படியாவது நம் பல்லவ தேசத்திற்கு ஹிரண்யவர்மனின் வாரிசு ஒருவனை நீ அழைத்துக் கொண்டு வந்து சேர்த்து விடு..ஏனெனில் அவன் மூலம் தான் இனி பல்லவ வம்சம் தழைக்க வேண்டும்..சித்ரமாயனை நம்புவதால் இனி பயனில்லை..ஹிரண்யவர்மன் தனது மகனை அனுப்ப மறுத்தாலும் , ஹிரண்யவர்மனது மனதை மாற்றி அவனது சம்மதத்தை பெறுவதும் உன் சாமார்த்தியத்தில் தான் அடங்கியுள்ளது..இதோ, நானும் இங்குள்ள விபரமனைத்தையும் தெளிவுபடுத்தி ஒரு ஓலையொன்றை ஹிரண்யவர்மனுக்கு தருகிறேன்..இதை சேர்ப்பித்து விடு.."என்றபடி ஒரு *விடேல் விடுகொன்றை தந்ததோடு, பல்லவரது சிம்ம இலட்சினை ஒன்றையும் உதயச்சந்திரனிடம் ஒப்படைத்தார்.."இந்த இலட்சினை பல்லவ வேந்தரின் நேரடி ஒப்புதல் பெற்றவர் மட்டுமே கையாளக் கூடியது என்பதை நீ அறிவாய்..நமது செயலின் முக்கியத்துவத்தை ஹிரண்யவர்மன் உணர இது வகை செய்யும் " என்று பிரம்மஸ்ரீராஜன் கூறிய வார்த்தைகளும் அவனது நினைவில் வந்து போயின.
கடலின் நீலநிறத்தையே கண்கொட்டாமல் பார்த்து ரசித்தவன், அவ்வப்போது கடலின் நீர்மட்டத்திற்கு மேல் துள்ளி எழுந்து விழும் மீன்களின் அழகும் , மாலைக் கதிரவனின் பொன்னொளியில் தகதக வென மின்னும் கடலின் மேற்பரப்பும் அவனது வியப்பை பன்மடங்காக்கியதோடு, அவனை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியும் இருந்தது. இதுநாள் வரை கடற் பயணம் செய்தறியாத அவனுக்கு கடல் பல பிரமிப்பை ஊட்டியதெனலாம்.
காற்றின் போக்கிற்கு தகுந்தபடி மாலுமிகள் பாய்களைத் திருப்புவதும், மாற்றிக் கட்டுவதும், திசை ஓட்டத்தை குறிவைத்து சுக்கானைச் செலுத்துவதும் மரக்கலத்தில் இவ்வளவு பணிகள் இருக்கின்றனவா என எண்ணத் தோன்றியது உதயச்சந்திரனுக்கு...அது மட்டுமல்ல சமயங்களில் மரக்கலத்தின் அடிபாகத்தில் துடுப்பினை துழாவுகின்றவர்களின் நேர்த்தியையும் கண்டு வியப்பில் ஆழ்ந்தான். உக்கிரமாய் கதிரவன் வானில் உலவும் வேளையில் மட்டும் மரக்கலத்தின் தளத்தில் நிற்பது விரும்பக் கூடியதாக இல்லையே தவிர, அதிகாலைப் பொழுதுகளும் அந்தி சாய்ந்தபின் மலரும் இரவுகளும் கடலின் அழகை பேரழகாக்கி உதயச்சந்திரனுக்கு வழங்கிக் கொண்டிருந்தது..இரவு வேளையில் வானில் தோன்றும் நிலவும், நட்சத்திர தாரகைகளும் , உடலை சில்லிடச் செய்யும் குளிரும் , கரிய நிறப் போர்வையைப் போர்த்தியது போல் காணப்பட்ட கடலும் அவனுக்குள் எண்ணற்ற பிரேமையை உண்டுபண்ணியிருந்தது.
நாகையை விட்டுக் கிளம்பி ஒரு வார காலத்திற்கு மேல் ஆயிற்று..முதலிரண்டு நாட்களில் கடற் பயணம் ஒத்துக் கொள்ளாமையால் சின்னச் சின்ன அவஸ்தைகளை அனுபவித்த உதயச்சந்திரன், அதன்பின் தெளிவடைந்தான்..இதுநாள் வரையில் குதூகலமாய் கழிந்து கொண்டிருந்த உதயச்சந்திரனது கடற்பயணம் ஒரு பெருத்த அபாயத்தையும் விரைவில் சந்திக்கவிருந்தது.
மரக்கலத்தின் மாலுமியொருவன் உதயச் சந்திரனை நெருங்கியவனாய்,
"படைத்தலைவரே , நாம் கவனமாக கடந்து செல்ல வேண்டிய கடற்பகுதி இது.." என்றான் குரலில் திகிலுடன்.
" ஏன்..இப்பகுதியில் ஆபத்து ஏதேனும் உள்ளதா..? " என்றான் ஒன்றும் அறியாதவனாய் உதயச் சந்திரன்.
" ஆம்..படைத்தலைவரே..சதாசர்வ காலமும் கடலில் வலம் வந்து எந்தவொரு தேசத்தின் மரக்கலத்தையும் சூறையாடிச் சென்றுவிடும் கடற்கொள்ளையர்கள் நிறைந்த கடற்பகுதி இது..அதோ பாருங்கள் தூரத்தில் கரும்பச்சையாய் தெரிவது தான் ஸ்ரீவிஜயத் தீவுக் கூட்டங்கள்..கடலில் எந்தவொரு மரக்கலம் பயணித்தாலும் அந்த தீவிலிருந்து கிளம்பி வரும் கொள்ளையர்கள் , தங்கள் கைவரிசையைக் காட்டாமல் செல்வதில்லை." என்றான் அந்த பகுதியில் பல காலமாய் கடலோடும் மாலுமி என்பதனால்.
" கொள்ளையர்களுக்கான இலக்கு என்ன மாலுமி..? "
" வேறென்ன..செல்வம் தான்..தங்கம், வைரம், நவரத்தினம், பதித்த ஆபரணங்கள் , உயரிய பட்டாடைகள், இவையெதுவும் கிடைக்க வில்லை எனில் மரக்கலத்தை தீக்கிரையாக்கி விட்டு சென்று விடுவார்கள்.
மிகமிக மோசமானவர்கள், அழகிய பெண்கள் இருந்தால் தூக்கிச் சென்று விடுவதும் உண்டு.." என்றான் அச்சம் சிறிதும் தணியாத குரலில் அந்த மாலுமி.
" இந்தப் பகுதி எவரது கட்டுப் பாட்டில் உள்ளது..?"
" ஸ்ரீவிஜய சாம்ராஜ்ய கட்டுப் பாட்டில்.."
" அவர்கள் இவர்களை கட்டுப் படுத்துவதில்லையா..?"
" அடிக்கின்ற கொள்ளையில் அவர்களுக்கும் ஒரு பங்கு போய்க் கொண்டிருப்பதனால், ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் இந்தக் கொள்ளையர்களை பெரிது படுத்துவதில்லை.."
" ம்..புரிந்தது..நீ எச்சரிக்கையுடன் மரக்கலத்தைச் செலுத்து..அவர்கள் வந்தால் எனக்குத் தெரியப் படுத்து..நாம் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டுச் செல்வோம்.."
" நான் உங்களுக்கு அவர்கள் வருவதை சொல்ல வேண்டியதே இல்லை..நீங்களே அறிந்து கொள்ளலாம்..அவர்களது வருகையில் எந்த ஒளிவுமறைவும் இருக்காது.." என்றான் மாலுமி குதர்க்கமாய்.
"சரி..நீ போய் உனது வேலையை கவனி..எதற்கும் எச்சரிக்கையாக இரு.."
ஆபத்தானது, மாலுமி எச்சரித்திருந்த மாலையில் இருந்து இரவின் இரண்டாம் ஜாமம் வரை நிகழவில்லை..ஒருவேளை நமது மரக்கலம் கொள்ளையர்களின் பார்வையில் படவில்லை போலிருக்கிறது என எண்ணிக் கொண்டான் உதயச்சந்திரன்.
ஆனால்..அவனே எதிர்பாராத விதமாய், இரவின் மூன்றாம் ஜாமம் துவங்கியதும் உதயச்சந்திரனது மரக்கலத்திற்கு பின்புறத்தில் வந்து கொண்டிருந்தது பெரும் ஆபத்து. வெகுதூரத்தில் இரண்டு சிறு புள்ளிகளாய் கொள்ளையர்களது மரக்கலம் , உதயச் சந்திரனது மரக்கலத்தை நோக்கி விரைவாய் வந்து கொண்டிருந்தன.
_ தொடரும்..
#அனுராஜ்..
குறிப்பு : விடேல் விடுகு என்பது பல்லவரது ரிஷபம் மற்றும் வேல் முத்திரை தாங்கிய ஓலைச் செய்தி.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக