18.08.20-சில நேரத்தில் சில மனிதர்கள் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

18.08.20-சில நேரத்தில் சில மனிதர்கள்


பரமேஷின் கார் அவரது ஈ .சி. ஆர் பங்களாவில் இருந்து வெளியேறிய 3 நிமிடங்களில் அவருக்கு ஒரு மர்ம மனிதன் போன் செய்தான்.


நம்பர் பார்த்தார். சென்னை லேண்ட்லைன் நம்பர்.எப்போதும் செய்வதைப் போல 4 ரிங் அடித்தபிறகு எடுத்தார்.


'' ஹலோ '' என்றார்.


'' மிஸ்டர் .பரமேஷ் , ஒரு பேட் நியூஸ் , உங்க மனசை திடப்படுத்திக்கோங்க. உங்க பொண்ணை கடத்திட்டோம்.''


''புரியல ,என்ன சொல்றீங்க ''


''கிட்னாப். உங்க டாட்டர். இன்னிக்கு சாயங்காலம் சரியா 5 மணிக்கு 20 லட்சம் கொடுக்கலேனா 6 மணிக்கு அப்புறம் உங்க பொண்ணு உயிரோட இருக்க மாட்டா. இப்போ புரியுதா? நீங்க வேற திட்டம் போட்டாலோ போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணாலோ உங்க பொண்ணு உங்களுக்கு கிடைக்கமாட்டா ?'' போன் துண்டிக்கப்பட்டது.


'' சிவநேசன் ,வண்டிய நிறுத்து. என் பொண்ணை கடத்திட்டதா சொல்றாங்க.''


''வாய்ப்பே இல்ல சார் . 10 நிமிஷம் முன்னாடி பாத்தேன் சார். உங்க பொண்ணும் என் பொண்ணும் தோட்டத்துல விளையாடிட்டு இருந்தாங்க. இனிக்கு லீவுங்கிறதால என் பொண்ணு விமலா அவங்க அம்மா கூட பங்களா வந்துச்சு. யாரோ உங்க கிட்ட போன் பண்ணி ஏமாத்தறாங்கனு சந்தேகமா இருக்கு ''


'' எனக்கு படபடப்பா இருக்கு. வண்டியை வீட்டுக்கு விடு ''


கார் அவர் வீட்டிற்கு சென்றது. கார்டனில் பரமேஷின் மகள் ரேஷ்மா விளையாடிக்கொண்டு இருந்தாள் .


பரமேஷ் பெருமூச்சு விட்டார்.


''என் பொண்ணு விமலா எங்கே பாப்பா?''


''கண்ணாமூச்சி விளையாடிட்டு இருந்தோம். அவ பாதில கோபப்பட்டு வீட்டை விட்டு போயிட்டா அங்கிள் ''


''எங்க வீடு பூட்டி இருக்கே. சாவி என்கிட்ட இருக்கு எப்படி அங்க போயிருக்க முடியும்''.


சிவநேசன் மனைவி பங்காளாவில் சமையல் வேலை செய்பவர். அங்கே வந்தார்.


''விமலா. இங்க இல்லீங்க. எங்க போனானு தெரியல ''


'' இரு , நான் வீட்டுக்கு போயி பாத்துட்டு வந்துடறேன். சார் நான் கார்ல போயி பாத்துட்டு வந்துடறேன்''


'' நானும் வரேன் சிவா . வண்டியை எடு ''


''செக்கியூரிட்டி, கியா ஆப்நே கோயி நயா ஆத்மினே தேகா ''


'' நஹி சாப் , ட்ரைவர் கீ பேட்டி தோடி தேர் பெஹ்லே அக்கேலி நிக்கல் கயி ''


'' உன் பொண்ணு தான் கொஞ்சம் முன்னாடி தனியா வெளிய போச்சுன்னு சொல்றான் சிவா ''


சிவநேசன் வீடு பூட்டி இருந்தது.பக்கத்து வீடுகளில் விசாரித்தார். யாருக்கும் தெரியவில்லை.


''ரேஷ்மாவை கடத்தறதுக்கு பதிலா, தப்பா உன் பொண்ண கடத்திட்டாங்கனு நினைக்கிறேன், சிவா ''


''ஐயோ சார். இப்போ என்ன பண்றதுனு தெரியலியே. ''


''போலீசுக்கு போகக் கூடாதுனு வேற சொல்லி இருக்காங்களே ''


''ஆமா சார் .நீங்க தான் எப்படியாவது என்னோட மகளை காப்பாத்திக் கொடுக்கணும் ''


மீண்டும் அவர் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தார். வேறு ஒரு சென்னை தொலைபேசி எண்.


'' ஹலோ ''


''பரமேஷ் , சொன்னது ஞாபகம் இருக்குல்ல. 20 லட்சம் ரெடி பண்ணி வையுங்க.பணத்தை எங்க கொடுக்கணும்னு அடுத்த அரைமணி நேரத்துல சொல்றோம் '' . அழைப்பு துண்டிக்கப்பட்டது.


'' இரு சிவா ,ஆபிஸ் கால் பண்ணி பாக்கறேன் ''


கால் செய்தார்.


'' அர்ஜென்ட் , அங்கே கேஸ் எவ்ளோ இருக்கு? .. 30 ஆயிரம் தான் இருக்கா ?...சரி அப்புறம் பேசறேன் ''


''ஆபிஸ் ல பணம் இல்லேனு சொல்றாங்களே ''


'' போன வாரம் . சுஷ்மா லண்டன்ல இருந்து அவசரமா 10 லட்சம் வேணும்னு கேட்டா . நேத்து தான் அனுப்பி இருக்காங்க. காலேஜ் படிக்கற பொண்ணுக்கு அப்படி என்ன தான் செலவோ ? ''


''இப்போ என்ன சார் பண்ணலாம் ''


''இன்னிக்கு . ரெண்டாவது சனிக்கிழமை ,பேங்க் லீவ் ஆச்சே . என்னோட ப்ரென்ட்ஸ் கிட்ட கேட்டு பாக்கறேன் ''


சில பேருக்கு கால் செய்து பேசினார்.


'' கிடைக்கல சிவா ''


சிவநேசனுக்கு கண்கள் கலங்கின .


'' உன்கிட்ட ப்ராக்டிகல்லா ரெண்டு கேள்வி கேக்கறேன் சிவா ''


'' இப்போ உன்னோட பொண்ணோட ரியல் வேல்யூ என்ன. இப்போ 20 லட்சம் கடன் வாங்கினா அதை திருப்பி கொடுக்க உனக்கு 40 வருஷம் ஆகும். உனக்கு சொந்த வீடு இருக்கா ?''


'' இல்ல ,வாடகை வீடு தான் சார் ''


'' ம்ம்ம் , 20 லட்சம் கொடுத்து காப்பாத்தினா உனக்கு என்ன லாபம் சாரி ,என்ன நன்மை .இப்போ 20 லட்சம் கொடுத்தாலும் அவங்க பொண்ணை உயிரோட திருப்பிக் கொடுப்பாங்கனு என்ன நிச்சயம் ?''


''எனக்கு அது எல்லாம் யோசிக்க முடியல சார் .எப்படியாவது என் மக எனக்கு கிடைச்சா போதும்னு இருக்கு சார். அவளை என்ன கொடுமைப்படுத்துறாங்களோ . சின்ன பொண்ணு சார் அவ. பயந்தா வலிப்பு வந்துடும் . நான் அவளை கோபமா பாத்தது கூட இல்ல சார். இப்போ என்ன கஷ்டப்படறாளோ ''


அப்போது அவருக்கு கால் வந்தது.


'' உன்னோட ஒய்ஃப் எனக்கு கால் பண்றாங்க சிவா.எடுத்து என்ன சொல்றது தெரியலியே. நீ பேசு ''


'' வேண்டாம் சார் , அழுதுடுவேன். ''


''உன்னோட போன் என்னாச்சு ''


''டிரைவிங் சமயம் போன் வச்சுக்க மாட்டேன் சார். சைலென்ட்ல போட்டு செக்கியூரிட்டி கிட்ட கொடுத்துட்டுதான் வண்டி எடுப்பேன் ''


''நாம இப்போ போலீஸ்க்கு கால் பண்ணா ட்ராக் பண்ணி கண்டுபிடிச்சிடுவாங்க , நான் வாட்சப் மெசேஜ் அனுப்பறேன். ஐஜி ஆபிஸ்ல எனக்கு வேண்டியவங்க இருக்காங்க . கண்டுபிடிச்சு குடுத்திடுவாங்க கவலைப் படாதே''


போன் எடுத்து டைப் செய்தார்.


அப்போது மர்ம போன் வந்தது.


'' பரமேஷ் . பணம் ரெடி பண்ணி இருப்பீங்க. உங்களுக்கு சின்ன அமௌன்ட் தான். சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஐஜி ஆபிஸ் பின் பக்கம் வந்து வெய்ட் பண்ணுங்க '' போன் கட் ஆனது .


'' வீட்டுக்கு போகலாம் சிவா. ஒரு போலீஸ் ஆபிஸர். மஃப்டில வீட்டுக்கு வந்து விசாரிப்பாருனு சொன்னாங்க ''


பங்களாவிற்கு சென்றார்கள் .


செக்கியூரிட்டி கதவு திறந்து விட்டார் .


'' சாப் . விமலா ஆ கயி ''


டிரைவரின் மகள் ஓடி வந்தாள்.


''உனக்கு ஒன்னும் ஆகலியே , நல்லா இருக்கியா விமலா. ?''


'' தாத்தா வீட்டுக்கு போகலாம்னு போனென்பா. போற வழில எனக்கு ஃபிட்ஸ் வந்துடுச்சு. அப்புறம் யாரோ பாத்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க .தாத்தா கூட வந்து பாத்தாங்க , உங்க போனுக்கு தாத்தா கால் பண்ணாரு . நீங்க ஏன் பா எடுக்கவே இல்ல ''


'' நீ திரும்ப கிடைச்சதே ரொம்ப சந்தோசம்டா. இனிமேல் எங்கயும் தனியா போகாத. இப்போ அம்மா கூட வீட்டுக்கு போ. ரெஸ்ட் எடு ''


அப்போது பரமேஷ் அழைத்தார்.


''என்ன நடக்குதுனே புரியல, அவங்க எதுக்கு மிரட்டுனான்ங்க ?, ஆபிஸ் போயிட்டே பேசலாமா. நீ வரமுடியுமா ? நானே ஓட்டிட்டு போகவா சிவா ''


'' இல்ல சார் ,நானே வரேன் ''


மீண்டும் கார் ஆபிஸ் நோக்கி கிளம்பியது .மீண்டும் மர்ம நபர் .


'' யார் நீ .எதுக்கு இப்படி விளையாடற ''


'' ஆட்டம் முடியல , பரமேஷ். நீ கேமை இன்னும் புரிஞ்சிக்கவே இல்ல. நீ இவ்வளவு முட்டாளா இருக்கியே. உனக்கு மொத்தம் எத்தனை பொண்ணுங்க ''


'' ரெண்டு பொண்ணுங்க ''


'' ஒரு பொண்ணு இங்க இருக்கா. இன்னொரு பொண்ணு ''


'' லண்டன்ல சேஃப்பா இருக்கா ''


'' அவ எங்க கிட்ட தான், சேஃப்பா இருக்கா. இன்னும் ஒரு மணி நேரம் இருப்பா. அப்புறம் இருக்க மாட்டா ''


''சுஷ்மா '' என்றார் பரமேஷ்


'' இப்போ தான் புரியுதா ? அவ எங்க கிட்ட இருக்கற போட்டோஸ் அனுப்பிவச்சிருக்கோம் பாரு ''


சுஷ்மா மயக்கமாக இருக்கும் போட்டோ அவருக்கு வந்தது. சில நொடிகளுக்கு பிறகு டெலீட் ஆனது .


'' நீங்க சென்னைல இருந்து பேசறீங்க,அதான் எனக்கு புரியல ''


''இங்க இருக்க எனக்கு பணம் கொடு , அவங்க லண்டன்ல உன்னோட பொண்ணை உடனே ரிலீஸ் பண்ணிடுவாங்க ''


'' 5 மணிக்கு ஐஜி ஆபிஸ் வரணுமா? 20 லட்சத்தோட ?''


''நீ போலீசுக்கு போகாம இருந்திருந்தா அதோட முடிஞ்சி இருக்கும். இப்போ உன்னால ரிஸ்க் அதிகம் ஆயிடுச்சு.


உன்னோட பொண்ணு வேணும்னா. 2 கோடி அரேஞ்சு பண்ணு. உனக்கு ஒன் ஹவர் டைம் ''


'' அவ்வளவு பெரிய அமௌன்ட் ஒன் ஹவர்ல கஷ்டம் ஆச்சே ''


''உன்னால முடியும். முடியாதுனா பொண்ண மறந்துடு.எங்களுக்கு போலீஸ் கிட்ட பயம் இல்லேனு சொல்லத்தான் ஐஜி ஆபிஸ்க்கு வர சொன்னோம். நீ அதையும் புரிஞ்சிக்காம இருக்கே. பணத்தை ரெடி பண்ணு '' போன் துண்டிக்கப்பட்டது .


''சிவா ,கொஞ்சம் தண்ணி கொடு ''


சிவா பின் சீட்டிற்கு சென்று பாட்டில் திறந்து நீர் கொடுத்தார்.


'' என் பொண்ணு சுஷ்மாவை லண்டன்ல வச்சு கடத்திட்டங்கங்களாம், இப்போ என்ன பண்றதுனு புரியலையே ''


''அடச்சே. போலீஸ் கிட்ட சொல்லலாமா சார் ''


'' இங்க சொல்லி ஒன்னும் ஆகப்போறது இல்ல. பொண்ணு லண்டன்ல மாட்டி இருக்கா.நம்ம நடவடிக்கை எல்லாம் கடத்தல்காரங்க கவனிச்சுட்டே இருக்காங்க ''


''இப்போ என்ன சார் பண்றது ''


''2 கோடி ,இன்னும் ஒருமணி நேரத்துக்குள்ள கொடுக்கணும்னு சொல்லி இருக்காங்க சிவா ''


''அது ரொம்ப பெரிய அமௌன்ட் ஆச்சே சார் ''


''என்னோட ஃபிரென்ட் ஒருத்தர் நகைக்கடை வச்சிருக்கார். கேட்டு பாக்கிறேன்''


பரமேஷ் போனில் மன்றாடினார்.


'' சிவா , 2 கோடி கடன் தரேன்னு சொல்லிட்டாரு. ஒரு கோடியை தாம்பரம் கடைலயும் , இன்னொரு கோடி பெரம்பூர் கடைலயும் வாங்கிக்க சொன்னாரு ''


'' ரெண்டு இடத்துக்கும் இப்போ போகறதுக்கு கூட நேரம் இல்லியே சார் ''


மீண்டும் மர்ம போன் ஒலித்தது.


'' 50 நிமிஷம் தான் இருக்கு. எப்படி பெரம்பூருக்கும் ,தம்பரத்துக்கும் போய்ட்டு திரும்ப மீனம்பாக்கம் வந்து எங்க கிட்ட பணம் கொடுக்க போறீங்க. ரொம்ப கஷ்டம் ஆச்சே ''


''அவசரப் படாதீங்க , 30 நிமிஷம் அதிகம் ஆனாலும் வெய்ட் பண்ணுங்க .ப்ளீஸ் ''


''முடியாது .49 நிமிஷம் இருக்கு . நீ ஒரு பக்கம் போ , ட்ரைவரை இன்னொரு பக்கம் அனுப்பு. சீக்கிரம் கிளம்புங்க. ஒரு செகண்ட் லேட் ஆனாலும் பொண்ணு கதை முடிஞ்சிடும். ''


''வேண்டாம் ,நான் சொல்றத கேளுங்க '' போன்கால் முன்பே துண்டிக்கப்பட்டிருந்தது.


''சிவா ,இப்போ டைம் இல்லை. பங்களால இறங்கி உன்னோட போன் எடுத்துக்கோ , வேற கார் எடுத்துக்கோ பெரம்பூர் நகை கடைக்கு போயி கால் பண்ணு. பணம் கொடுப்பாங்க.வாங்கிட்டு மீனம்பாக்கம் வந்துடு. நான் இதே கார்ல தாம்பரம் போயி பணம் வாங்கிட்டு மீனம்பாக்கம் வந்துடுறேன் ''


''சார் , இந்த கேள்வியை நான் கேக்க கூடாதுதான். இருந்தாலும் கேக்கறேன். 2 கோடி வாங்கிட்டு அவங்க பொண்ணை ரிலீஸ் பண்ணுவாங்கனு என்ன நிச்சயம். 2 கோடி கொடுத்து உங்க பொண்னை காப்பாத்தறதுல உங்களுக்கு என்ன நன்மை சாரி என்ன லாபம் ''


''இப்போ என்னால எதுவும் யோசிக்க முடியல சிவா. என் பொண்ணை எப்படியாவது காப்பாத்திட்டா போதும்னு இருக்கு. எனக்கு வேற எதுவுமே வேண்டாம் ''


''தெரியும் சார் , இதுக்கு பேர் தான் பாசம் ''


அவர்கள் திட்டமிட்டபடி சிவா பங்களாவில் இறங்கி போன் மற்றும் கார் எடுத்துக்கொண்டு பெரம்பூர் கிளம்பினார். பரமேஷ் தாம்பரம் சென்றார்.


சிவா பெரம்பூர் கடை சென்றார். பரமேஷ் உடன் போன் செய்து பேசவைத்து பணம் வாங்கிக்கொண்டு கிளம்பினார்.


அவர்கள் சொன்ன நேரத்திற்கு 10 நிமிடம் முன்பே பரமேஷ் மீனம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வந்து காத்திருந்தார்.


அப்போது சிவாவிடம் இருந்து போன் வந்தது.


'' சார் வந்துட்டு இருக்கேன். கார் பங்ச்சர். வேற டேக்ஸி புக் பண்ணி வரேன் சார் ''


'' சிவா , என்னோட பொண்ணு உயிர் உன்னோட கையில தான் இருக்கு. என்மேல இருக்கற கோபத்துல என்னோட பொண்ணை பழி வாங்கிடாதே ''


'' நிச்சயம் அந்த மாதிரி நடக்காது சார்.சுஷ்மா நான் பார்த்து வளர்ந்த குழந்தை சார். இந்த உயிருக்கு மதிப்பு அதிகம் ,அந்த உயிருக்கு மதிப்பு கம்மினு யோசிக்க எனக்கு தெரியாது . எப்படியாவது 5 நிமிசத்துல அங்கே வந்துடறேன் சார் ''


பரமேஷ் தன் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.


மர்ம போன் வந்தது. ''டைம் முடிஞ்சுது பணம் ரெடிபண்ணிட்டீங்களா''


அப்போது ஒரு பைக் வந்து நின்றது. அதில் லிப்ட் கேட்டு வந்த சிவா பையுடன் இறங்கினார்.


'' பணம் ரெடி ''


''குப்பைத் தொட்டி பக்கத்துல வச்சுட்டு வீட்டுக்கு கிளம்புங்க. 10 நிமிஷத்துல சுஷ்மாவை ரிலீஸ் பண்றோம். பணம் போச்சேன்னு கவலைப்படாதீங்க. இந்த பணம் நல்ல விஷயத்துக்கு தான் பயன்படப்போகுது ''


பணப்பைகளை வைத்தார்கள்.


சிவா கார் ஓட்ட ஈ சீ ஆர் பங்களாவிற்கு பயணம் தொடங்கியது.


10 நிமிடத்திற்கு பிறகு சுஷ்மா போன் பேசினாள். பரமேஷ் நிம்மதி அடைந்தார்.


'' பெரிய ஆபத்து இல்லாம முடிஞ்சுது சிவா . வெல்டன்.நான் நாளைக்கு லண்டன் போறேன் .காலைல சீக்கிரம் வந்துடு . ஏர்போர்ட் போகணும்.''


''நாளைல இருந்து நான் வரமாட்டடேன் சார்''.


''என்னாச்சு சிவா ''


''இதுக்கு மேல இங்க வேலை செய்ய இஷ்டம் இல்லை. ''


''நான் உன்கிட்ட விசுவாசத்தை எதிர்பார்த்தேன் சிவா ''


''விசுவாசம்னா என்ன சார். நம்பிக்கை தானே. நீங்க என்கிட்ட ஊதியம் கொடுத்து உழைப்பை வாங்கறீங்க. நான் உங்ககிட்ட உழைப்பை கொடுத்து ஊதியத்தை வாங்கறேன். இதுதான் நமக்கு நடுவுல இருக்கற உறவு.


கொடுக்கல் வாங்கல் அவ்வளவுதான். உழைக்கறது என்னோட கடமை.அதை சரியா தான் செஞ்சுட்டு இருக்கேன்


நான் உங்களை நம்பி இருக்கேனோ ,நீங்க எனக்கு தானம் பண்ணிட்டு இருக்கறதாவோ நினைக்காதீங்க.


நீங்க என்கிட்ட எதிர்பார்த்த விசுவாசத்தை நானும் உங்ககிட்ட எதிர்பார்த்தேன் சார் ''


அப்போது வண்டி பங்களாவை அடைந்து இருந்தது. காரை உள்ளே பார்க் செய்து விட்டு சிவநேசன் இறங்கினார்.


'' ரொம்ப நன்றி சார் '' என்று சொல்லிவிட்டு பங்களாவில் இருந்து வெளியேறி நடந்து சென்றார்.


[முற்றும் ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages