ரேவா-08-சிறைபட்டான்_உதயச்சந்திரன் - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 22 ஆகஸ்ட், 2020

ரேவா-08-சிறைபட்டான்_உதயச்சந்திரன்

 




22.8.20


#ரேவா


#சிறைபட்டான்_உதயச்சந்திரன்_08


காம்புஜத் தேசத்தில் உதயச்சந்திரன், தான் தங்கியிருந்த சத்திரம் அமைந்திருந்த நந்தவனத்தில் அன்றைய மயக்கம் தரும் இரவின் அழகிய பொழுதில் மயங்கியவனாய், வீசிய மென் தென்றலுக்குப்  பொய்கைக்  கரையோரம் சற்றுக் கண்ணயர்ந்தவன், தொடர்  பிரயாணக் களைப்பால் சற்று நேரத்திலேயே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து விட்டான்.


ஆழ்ந்த நித்திரையில் இருந்தவனை, கைகளில் வேல்களுடன் தட்டியெழுப்பிய காம்புஜத் தேசத்தின் வீரர்கள், " யார்..நீ..? இதற்கு முன் உன்னை இங்கு சந்தித்தது இல்லையே..?! " எனச்  சந்தேகத்துடன் வினவியதோடு, உதயச் சந்திரனை ஏற இறங்கப் பார்த்தனர்.


" நான் பாரத தேசத்து யாத்ரீகன், ஒரு அலுவல் விசயமாய் மன்னரைச் சந்திக்க வந்திருக்கிறேன் " என்றான் உதயச்சந்திரன்.


" மன்னரைச் சந்திக்க வந்த நீ, ஏன் இப்படி வீதியில் படுத்து உறங்குகிறாய்..? அரண்மனைக்கு அல்லவா வந்திருக்க வேண்டும்..? " என்றான் சந்தேகத்துடன் காவலர்களில் ஒருவன்.


" பயணக் களைப்பிலும், இங்கு காணப்பட்ட இயற்கையின் எழிலும் மனதைப்  பறிகொடுத்தவனாய், சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன்.."


"தவறு..இந்த தேசத்தில் பொழுது இறங்கிய பின் எவரும் வெளியில் நடமாடுவது குற்றமாகும்,  உன்னைச் சிறை செய்து அரசர் முன்னிலையில் நிறுத்த வேண்டியது எங்களது கடமை..மரியாதையாக எங்களுடன் வந்து விடு..இல்லையெனில் உன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல வேண்டியது வரும். " என்றான் அந்த காவலர்களில் தலைவனைப் போல் விளங்கியவன்.


"நகரில் இரவினில் கோட்டை வாயில்கள் அடைக்கப் படுவதோடு, மறுதின உதயத்திற்குப் பின் தான் கோட்டை வாயில்கள் மறுபடித் திறக்கப் படும்.. நாய்களும், குற்றவாளிகளும் கோட்டைக்குள் மற்றும் நகருக்குள் நுழைய அனுமதிக்கப் படுவதில்லை தெரியுமா உனக்கு..? " என்றான் காம்புஜ தேசத்துக்  காவலர் தலைவன்.


" இங்கு யார் குற்றவாளி..?" என்றான் கோபமாய் உதயச்சந்திரன்.


" நீ தான்.."


" நான் குற்றவாளி என்பதை எவ்வாறு முடிவெடுத்தாய்..? "


" மன்னரைக் காண வந்ததாகச் சொல்கிறாய்..ஆனால் அரண்மனைக்கு வராமல் நந்தவனங்களில் சுற்றியும், வெளியில் உறங்கவும் செய்திருக்கிறாய்..இந்த தேசத்தின் மன்னரது ஆணையை நீ மீறி விட்டாய்..இரவு வேளைகளில் அத்துமீறி உலவுவது இத்தேசத்தில் குற்றம்..அதற்கான தண்டனை இங்கு என்ன வழங்கப் படும் என்று தெரியுமா..?" என்றான் அதிகாரம் தொனித்த குரலில் காவலர் தலைவன்.


" சொல் தெரிந்து கொள்கிறேன்.." என்றான் இகழ்ச்சியுடன் உதயச்சந்திரன்.


" * குற்றவாளிகளின் கால் விரல்கள் துண்டிக்கப் படும்.. புரிந்ததா..? "


" இரவு வேளையில் நிலவின் ஒளியில் தனிமையில் அமர்ந்திருப்பது குற்றமா..? " என்றான் சீற்றத்துடன் உதயச்சந்திரன்.


" ஆம்..நீ ஏன் சம்பா தேசத்து ஒற்றனாய் இருக்க கூடாது..? "


" சம்பா தேசமா..? "


" ஆம்..எங்களின் பரம வைரிகள்.."


" காவலர் தலைவனே, ஏற்கனவே உன்னிடம் உண்மையை உரைத்து விட்டேன்.  நான் பாரத தேசத்தின் பல்லவ நாட்டினைச் சேர்ந்தவன் என்று. என்னைத் தவறாகப்  புரிந்து கொண்டிருக்கிறாய்.." என்றான் சீற்றம் சற்றும் தணியாத குரலில் உதயச்சந்திரன்.


" அதை நாளை மன்னரது விசாரணையில் தெரியப்படுத்து..இப்போது எங்களுடன் வாக்குவாதம் செய்யாமல் வந்து விடு, இல்லையெனில் விளைவுகள் விபரீதமாக இருக்கும்." என்றான் காவலர் தலைவன்.


சற்றே யோசித்தான் உதயச்சந்திரன்.." சரி..வா போகலாம்.." என்றதோடு அமைதியாய் அவர்களைப் பின் தொடர்ந்தான். 


நான்கைந்து வீதிகளைக் கடந்து , அழகிய கோட்டை வாசலொன்றை கடந்து சென்றவுடன் அரண்மனை யின் இறுதிப் பகுதியை அடைந்திருந்தார்கள்..அரண்மனைக்கு இதே போன்று வாசலொன்று முன்புறமும் இருக்க வேண்டுமென ஊகித்தான் உதயச்சந்திரன்.


அரண்மனையின் பின்பகுதியில் கட்டப்பட்டிருந்த பல அறைகளில் ஒன்றில் இவனை உள்ளே தள்ளி கதவினைத் தாழிட்ட காவலர் தலைவன் "நாளை மன்னர் முன்னிலையில் உனக்கு விசாரணை நடைபெறும் " என்றவனாய் , அவ்விடம் விட்டகன்றான்.


தன்னைக் காவலர் தலைவன்  சிறைபடுத்தி விட்டுப் போன அறையினைச் சற்று உன்னிப்பாக கவனித்தான் உதயச்சந்திரன். மிக மிக சாதாரணமான ஒரு அறையாக அது காணப்பட்டது..அரண்மனையின் ஒரு பகுதியில் கட்டப்பட்டு இருந்தும் அரண்மனைக்கான எவ்வித அடையாளங்களையும் சுமக்காமல் எளிமையாய் காணப்பட்டது அறை. மஞ்சங்களோ, ஆசனங்களோ ஏதுமின்றி சுத்தமாய் காணப்பட்ட அவ்வறையில் நீர் அருந்த மட்டும் மூலையில் ஒரு மண்குவளை வைக்கப் பட்டிருந்தது. சிறிது நேரம் அந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் உலவிய உதயச் சந்திரன் காவலன் , தான் யாரென அறியாமல் தன்னைச் சிறைபடுத்தி விட்டதை எண்ணி கவலை கொண்டாலும், நாளை மன்னரது விசாரணையில் நாம் தெளிவு படுத்தி இந்த அறையில் இருந்து வெளியேறி விடலாம் என எண்ணிக் கொண்டு சிறிது ஆறுதல் அடைந்தவனாய்..அந்த அறையின் தரையிலேயே படுத்துறங்க முற்பட்டான். ஆனால் நித்திரை தான் அவ்வளவு எளிதாய் வருவதாக இல்லை.


உதயச் சந்திரனது உடமைகள் அனைத்தும் அவன் தங்கியிருந்த சத்திரத்தில் இருந்தது அவனது நினைவுக்கு வந்தது. அது குறித்து அவன் கவலையும் கொள்ளவில்லை.


உதயச் சந்திரனது நினைவில் இரவின் முதலாம் ஜாமத்தில் சந்தித்த பியூஷா நினைவிற்கு வந்தாள். அவளது மெல்லிய கரங்களுக்குத் தான் எவ்வளவு வலிமை, தனது தலையை ஒரு கணம் அசையவொட்டாது தாழ்த்தி விட்டாளே..அவளை சரிவர கவனிக்க கூட வாய்ப்பில்லாது போயிற்று, எங்கிருந்தோ வந்த முதியவன் அவளது கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு போய் விட்டானே..அவளும் பாரத தேசத்தவள் என்றாளே..? எந்த தேசத்தை சேர்ந்தவளாய் இருப்பாள்..? இங்கு என்ன செய்கிறாள்..? அந்த முதியவன் யாராக இருக்கும்..? மறுபடியும் அவளை சந்திக்க நேர்ந்தால் இது குறித்து வினவ வேண்டும்..அவளிடம் பேச நிறைய விசயங்கள் இருக்கின்றன என மனதிற்குள் பல எண்ணங்கள் எழ, ஒவ்வொன்றாகச்  சிந்தித்தபடியே விழித்து இருந்தவனை விடிய சிறிது நாழிகை இருக்கும் பொழுது நித்திரை மெல்ல அவனது கண்களைத் தழுவியது.


உதயதாரைகள் முழங்கியதும் , புனான் தேசத்து ஆலயத்தின் மணியோசை அவனது செவிகளில் பலமாய் கேட்டது.

பட்சிகளின் ஓசைகளும், காலைப் பொழுதின் வெளிச்சக் கதிர்களும், அந்த சிறிய அறைக்குள் மெல்ல சாளரத்தின் வழி வந்து விழுந்தது.


அன்றைய நாளின் இரண்டாம் ஜாமத்தில் இரண்டு காவலர்கள் உதயச் சந்திரன் அடைபட்டிருந்த அறைக் கதவைத் திறந்து  உள்ளே நுழைந்ததோடு, " ம்..கிளம்பு.." என அதட்டவும் செய்தனர்.


அவர்களது அதட்டலுக்கு மறுபேச்சின்றி, எழுந்து அவர்களுடன் நடந்த உதயச் சத்திரனை அரண்மனையின் பலக் கட்டுக்களைக் கடந்து ஒரு பெரிய அறையின் முன் கொண்டு சென்று நிறுத்தினர்..அது ஒரு பெரிய விசாரணைக் கூடம் போல் காணப்பட்டது. மையத்தில் ஒரு பெரிய ஆசனமும், சுற்றி பல ஆசனங்களும் போடப் பட்டிருந்தன.

உதயச் சந்திரனை அழைத்துக் கொண்டு போன காவலர்கள் அவனை அந்த விசாரணைக் கூடத்தின் மையத்தில் நிறுத்தி விட்டு, அந்த அறையின் வாசலில் சென்று நின்று கொண்டனர்.


ஒரு நாழிகைப் பொழுதில், முரசொன்று அதிர காம்புஜத் தேசத்தின் மாமன்னர் கடவேச ஹரிவர்மா என்றழைக்கப் படும் ஹிரண்யவர்மர் அந்த விசாரணைக் கூடத்திற்குள் நுழைந்தார். தனது இருக்கையில் அமர்வதற்கு முன்னதாகவே உதயச் சந்திரனை ஏறெடுத்து நோக்கிய அவரது பெருவிழிகளில் வியப்பே மண்டிக் கிடந்தது.


அமர்ந்ததும் , அவர் கூறிய வார்த்தைகளும் உதயச் சந்திரனை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு போனது.


" உனது தலையைத் தாழ்த்த ஒரு பெண் உனக்கு உதவ வேண்டியிருக்கிறது..யார் நீ..? " என்றார் கம்பீரமாக காம்புஜத்தின் கடவேச ஹரிவர்மா.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : *கம்போடியாவிற்கு 12 ஆம் நூற்றாண்டில் சென்று வந்த சீன யாத்ரீகரும் தூதருமான சவ் தா குவான் எழுதி வைத்திருந்த பண்டைய கம்போடிய பழக்க வழக்கங்கள் என்ற சீன தேசத்து ஆவணம் இது போன்ற தண்டனைகளை விவரிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages