23.08.20-ரேவா- 09-தோப்பில்_ஒரு_குடிசை - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

23.08.20-ரேவா- 09-தோப்பில்_ஒரு_குடிசை

 




#ரேவா


#தோப்பில்_ஒரு_குடிசை_09


காம்புஜ தேசத்தின் காவலர்களால் இரவினில் நந்தவனத்தில் பிடிபட்ட உதயச்சந்திரன், காலையில் நடைபெற்ற விசாரணை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.


மன்னரின் வருகையைக் குறிக்கும் முரசு ஒலித்ததும், உள்ளே நுழைந்த காம்புஜ தேசத்து மன்னன் கடவேச ஹரிவர்மா, உதயச் சந்திரனை வியப்பு நிரம்பிய விழிகளால் ஏறெடுத்தவர், " யார் நீ..? உனது தலையைத் தாழ்த்த  ஒரு பெண்ணின் உதவி உனக்குத் தேவை போலிருக்கிறதே..? " என்றார் விஷமம் தொனித்த குரலில்.


சட்டென அதிர்ச்சிக் குள்ளான உதயச்சந்திரன், மன்னன் நகர்வலம் வருகையில் தன்னை கவனித்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டதோடு, பியூஷா உதயச் சந்திரனது தலையை தாழ்த்த அழுத்தியதையும் மன்னன் காணத் தவறவில்லை என்பது புரிய.." மன்னருக்கு எனது பணிவான வணக்கம், இத் தேசத்தின் நடைமுறைகள் எனக்கு புதிது. நான் பாரத தேசத்தின் பல்லவ நாட்டினைச் சேர்ந்தவன், எனது பெயர் உதயச்சந்திரன்.." என்றான்  துணிவுடன்.


" நீ இந்த தேசத்திற்குப் புதியவன் என்பதை நேற்றைய உனது செயலே நிரூபித்து விட்டது..பரவாயில்லை..பாரத தேசத்தின் பல்லவ நாட்டினைச் சேர்ந்தவனா நீ..இங்கு ஏன் வந்தாய்..? பல்லவ நாட்டினை சேர்ந்தவன் என்பதற்கு என்ன ஆதாரங்களை வைத்திருக்கிறாய்..?


" பல்லவ தேசத்தை சேர்ந்தவன் நான் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம்  இருக்கின்றன அரசே..இங்கு ஒரு முக்கிய அலுவல் காரணமாய் வந்தேன்.."


" பல்லவ தேசத்தை சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரங்களைக் காட்டு.." என்றார் கம்பீரமாக ஹிரண்யவர்மர்.


" ஆதாரங்கள் நான் தங்கியிருந்த சத்திரத்தில் இருக்கின்றன.."


" எங்கே தங்கியிருந்தாய்..?"


" தங்களது வீரர்கள் என்னைச் சிறை செய்து அழைத்து வந்தார்கள் அல்லவா..அந்த நந்தவனத்திற்குரிய சத்திரத்தில் தான் தங்கியிருந்தேன்..எனது புரவியும், உடமைகளும் அங்கு தான் இருக்கின்றன."


" நல்லது..யாரங்கே..?"


மன்னரின் குரலைக் கேட்டு இரு காவலர்கள் வர, " இவன் தங்கியிருந்த சத்திரத்திற்குச் சென்று, இவனது உடைமைகளை எடுத்து,  இங்கே கொண்டு வாருங்கள்..இவன் கூறுவதில் எவ்வளவு உண்மை கலந்திருக்கிறது எனப் பார்ப்போம்.." என்றார்.


விரைந்த காவலர், இரண்டு நாழிகைப் பொழுதினில்  போனவர்கள் திரும்பி வர, அவர்களது கையில் உதயச்சந்திரனது வாளும், ஒரு பட்டுப் பையும் காணப்பட்டது..இரண்டையும் மன்னரது வசம் ஒப்படைத்த அவர்கள், அவரது செவியில் ஏதோ சொல்லிச் சென்றனர்.


" வீரனே..இவ்வளவு  தானே உனது உடமைகள்..இன்னும் வேறேதும் இருக்கிறதா..? உனது புரவி நமது கொட்டடியில் கட்டப் பட்டிருக்கிறது.." என்றார் கடவேச ஹரிவர்மர்.


" இவ்வளவு தான் எனது பொருள்கள்..அந்த பையினுள் தான் இருக்கிறது, தங்களுக்கு நான் கொண்டு வந்த ஓலையும், பல்லவ தேசத்தின் இலச்சினையும்." என்றான் உதயச்சந்திரன் ஆர்வம் மேலிட.


பையினுள் இருந்த துணிகளை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வெளியில் வைத்த காவலர்கள், அப்பையில் வேறெதுவும் இல்லாததைக் கண்டு, " அரசே..இதில் இவைகளைத் தவிர வேறொன்றுமில்லை " என்றனர்.


காவலர்கள் பையினுள் கைகளை விட்டு ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைக்கப்படும் போதே திகைப்பில் ஆழ்ந்த உதயச்சந்திரன் பல்லவ தேசத்தின் சிம்ம இலச்சினையும், முதலமைச்சர்  பிரம்மஸ்ரீராஜன்  தந்தனுப்பிய ஓலை நறுக்கும் அப்பையில் காணாதது கண்டு திகைத்தான்.


" வீரனே..உன்னை அடையாளப்படுத்த உதவும் படி, நீ குறிப்பிட்ட ஒன்றும் இப்பையில் காணப்பட வில்லையே..? " என்றார் கடவேச ஹரிவர்மர்.


" அது தான் எனக்கும் ஒன்றும் புரியவில்லை..தங்களது நகர்வலத்தை காண ஆவல் கொண்டு, சத்திரத்தில் அனைத்தையும் பத்திரமாக இப்பையில் வைத்து விட்டுத் தான் வந்தேன்..ஆனால் அது எப்படி மாயமாய் மறைந்திருக்க முடியும் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.." என்றான் பூரணமாய் தொனித்த குழப்பத்துடன் உதயச்சந்திரன்.


" வீரனே..நீ இந்த தேசத்தை சேர்ந்தவனாய் இருந்திருந்தால், இந்த குற்றத்திற்கு உடனே தண்டனை வழங்கப் பட்டிருக்கும், ஆனால் உனது செயல்கள் நீ அயல் தேசத்தவன் என்பதை எனக்கு ஊர்ஜிதப்படுத்திய காரணத்தால், உனக்கு சிறிது அவகாசம் வழங்குகிறேன்.  நீ இன்னும் ஒரு வார காலத்திற்குள் , இந்த தேசத்திற்கு நீ வந்த காரணத்தையும், நீ யார் என்பதையும் ஆதாரத்தோடு விளக்க வேண்டும், தவறும் பட்சத்தில் சிரச்சேதம் செய்யப்படுவாய்.. " என்றபடி ஆசனத்தை விட்டு எழுந்த  கடவேச ஹரிவர்மர் அந்த விசாரணை கூடத்தை விட்டு அகன்றார்.


இரண்டு காவலர்கள் மீண்டும் உதயச் சந்திரனை சூழ்ந்து கொள்ள, மீண்டும்  அவன் ஏற்கனவே அடைபட்டு கிடந்த அந்த சின்ன அறைக்குள் அடைபட்டான்.


காம்புஜதேசத்தின் மன்னர் கடவேச ஹரிவர்மா் உதயச்சந்திரனது பட்டுப்பையை  ஆராய்ந்து கொண்டிருந்த  அவ்வேளையில் ..


டோன்லே சாப் நதியில் ஒரு படகானது வடக்கு நோக்கி , மெல்ல துடுப்புகளால் துழாவப்பட்டு நகர்ந்து கொண்டிருந்தது.

அதில் அமர்ந்திருந்த உருவம் சற்று பரபரப்புடன் காணப்பட்டது. சுற்றும் தன் பார்வையை கூர்மையாக்கி பார்த்துக் கொண்டதோடு, தன்னை எவரும் தொடரவில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டதும் ஓரிடத்தில் படகினை விட்டு இறங்கி , வேகமாக அந்த அடர்ந்த தோப்பிற்குள் நுழைந்ததோடு எங்கும் நிற்காமல் விடுவிடுவென நடந்து அந்த தோப்பில் கட்டப் பட்டிருந்த ஒரு ஓலைக் குடிசைக்குள் நுழைந்தது.


சின்ன குடிசையாக இருந்தாலும், அழகாய் மூங்கிலால் பக்கவாட்டில் கட்டப்பட்டு, தென்னை ஓலைகள் வேயப் பட்டிருந்தன. தோப்பின் அடர் நிழலில் குடிசையும், சற்று உன்னிப்பாக கவனித்தாலன்றி மற்றவருக்கு புலப்படாத வகையில் நிர்மாணிக்கப் பட்டிருந்தது. அவ்விடத்தில் ஒரு குடிசை இருப்பதையே சற்றுக் கூர்ந்து கவனித்தால் தான் தெரிந்து கொள்ள இயலும்..மரங்களின் இடைவெளியில் அதை அழகாய் நிர்மாணித்திருந்தார்கள்.


படகினை விட்டு இறங்கி தோப்பிற்குள் நுழைந்த அவ்வுருவம், சற்றும் தயங்காமல் அந்த குடிசைக்குள் நுழைந்ததோடு, தனது இடுப்புக் கச்சையில் இருந்து ஒரு ஓலை ஒன்றை எடுத்துப் பார்த்தவுடன், புருவங்களை உயர்த்தி, மேலுதட்டை கடித்து சற்று யோசனையில் ஆழ்ந்த பின், மீண்டும் தனது இடுப்பினைத் தடவி இன்னொரு பொருளையும் எடுத்தது..குடிசையின் அரைகுறை வெளிச்சத்திலும் அவ்வுருவம் கையில் வைத்திருந்த அப்பொருளானது தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பூரண திருப்தியை தன் முகத்தில் படர விட்டுக் கொண்ட அவ்வுருவம் இரண்டையும் குடிசை வீட்டில் நாலாபுறமும் பார்த்து விட்டு, இறுதியாக விட்டத்தில்  கயிற்றில் தொங்க விடப்பட்டிருந்த இரண்டு மண்கலயங்களில் ஒன்றில் உள்ளே வைத்து விட்டு, சட்டென அந்த இடத்தை விட்டு வெளியேறி, எதிர் திசையில் விரைவாக வெளியேறியது.


உருவம் படகினை விட்டு கீழிறங்கியதில் இருந்து, தோப்பிற்குள் நுழைந்ததோடு திருட்டுத்தனமாக ஏதோ பொருட்களை தனது இடுப்புக் கச்சையிலிருந்து எடுத்து தொங்கிக் கொண்டிருந்த மண்கலயத்தில் வைத்தது வரை அனைத்தையும் ஒளிந்திருந்து கவனித்த அவள், அவ்வுருவம் அவசர அவசரமாய் குடிசையை விட்டு வெளியேறியதும், வேகமாக தொங்கிக் கொண்டிருந்த மண்கலயத்தில் கைகளை விட்டு அதனை வெளியே எடுத்தாள்.


அவள் பியூஷா.


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages