23.08.20- தலைப்பு : தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 26 ஆகஸ்ட், 2020

23.08.20- தலைப்பு : தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே

 









Sl

எண்

புகைப்படம்

கவிதை

1

312


தினமும் உனைத் தாண்டித் தானே   1

பள்ளி போவதும் வருவதும் வாழ்க்கை. 2

உனைப் பார்க்க மட்டுமே முடியும். 3


பறிக்க முடியலையே ஏற்ற ஏக்கத்தில். 4

இன்று வரை ஏங்க நாம். 5

பறிக்க முடியாத எனக் கேள்வி?...  6


பொ.சுப்புலட்சுமி தேவகோட்டை.

2

482


குளத்தில் தாமரைப்பூ ஆழகாக பூத்திருக்கு !

கன்னி மனது பறித்திடவும் நினைக்குது !

சாயங்கால பொழுதில் வீட்டில் விளக்கேற்றி!


இறைவனக்கு தாமரையை சாற்றிடவும் பறிக்கிறாள்!

மனது வெள்ளமென ஆசையில் மிதக்கிறாள்.


 தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

3

238


அந்தி வானத்திலே அழகியக் கோலம்../

ஆயிரமாய் கோலங்கள் அழகியை அடிமையாக்க../

கோதையிவள் காதலிலே கள்வனைத் தேடியவள்.../


மையலாகி மனதிலே தீயாகினாள் ஏக்கத்திலே../

குளக்கரையும் கொதித்ததே கன்னியிவள் மோகத்தில். /

தூதாகப் போகுமோ மேகமது காற்றோடு..///


#இளந்தை சேது


4

462


சாயங்காலத்திலே ஓர் அதிசய அழகு/

கற்பனையால் வடிக்க முடியா பேரழகு/

இந்த தாமரை எமை மாற்றுதே/


மனஇறுக்கம் போக்கும் கொள்ளை அழகு/

உன்னைப் பறிக்கவே ஆசை கொள்கிறேன்/

அனைவரும் ரசிப்பதற்காக பறிக்காமல் செல்கிறேன்


தயா

5

726

தாமரையே வீற்றிருக்கிறாய் குளத்தின் கரையிலே/

பார்க்கின்ற காலையில் மலர்வது ஏனடி/

மாலைப் பொழுதிலே மயங்கிடத் தானடி/


தீராத மயக்கங்கள் காதல் நோயோ/

வெப்பம் கொடுத்திடும் திங்களும் நீயோ/

தண்ணீரில் கலையாதகண்ணாடிப் பூவே/


-காளிராஜ்பாலகணேஷ்

6

450

மீனும் நண்டுமா நீந்தி விளையாடுது!

பொன்வண்டும் தேன் மலருமாய் நிறைஞ்சிருக்கு!

குளத்தங் கரையிலே சாயங்கால சூரியனும்


நாணப்படும் அளவுக்கு மஞ்சள் மேனியோட

பொண்ணு ஒண்ணு கண்ணால கனவுகளை

கண்ணாளனோட கண்ணாலக் கனவுகளை

மனக்கண்ணால குளத்து நீருலகண்டு ரசிக்குது!


ரேணுகா சுந்தரம்

7

598

தண்ணீர் ஒட்டாமல் இலை  தவமிருக்க/

தாவி அணைப்பாய் என்று தாமரை மலர்ந்திருக்க/ 

தனியே நீ அமர்ந்து தையலே /


தடாகத்தை கையினால் அவாவில் தடவி/

தனியே உன் காதலை சொல்லிடவா/

தாமரைக் குளத்துக்கு வந்தாய் பெண்ணே/


ஏ.எல்.ஏ.சாதாத்(இப்னு சாந்தி)

8

761

அந்தி மசங்கையிலே அழகான தேவதைபோல்/

தாமரை மலர்போல தலைமுடியை விரித்துவிட்டு/

குலத்து கரையோரம் குளித்துவிட்டு போறவளே/


மஞ்சள் நிறத்தவளே மான்விழி கொண்டவளே/

மருதாணி சிவபாட்டம் மலர்மேனி உடையவளே/

மனசு தவிக்குதடி மன்மதநாய் துடிக்குதடி/


மு, துரைப்பாண்டியன்

9

773

செங்கதிரோன் தன் தங்க நிறத்தை /

இரவல் தந்தானோ அவள் தேகத்திற்கு /

தாமரைப்பூ குளத்தினிலே சாயங்காலப் பொழுதிலே /


மங்கை அவள்  துயில் கலைந்து /

நீராட.. நீரோடு கலந்த நிறத்தாலே.. /

செந்தாமரை இதழும் பொன்னிறம் கண்டதோ..! /


எம்.எம்.நிஜாமுதீன்

10

770

எத்தனை எத்தனை மலர்கள் இருந்தாலும்//

உன்னழகைப் போல இருக்குமா இங்கே//

தாமரை முகத்தாளே பூவைப் பறிக்காதே//


பூக்கள் உன்னழகைப் பார்த்து வெட்கப்படும்//

கனவில் வந்த காதலன்  குளத்திற்கு//

வருவானோ உனக்கு பூச்சூடி மகிழ்வானோ//


ஸ்ரீதர் லெட்சுமணன்

11

710

1.பச்சைப் புல்வெளியில் தாவும் மரைகள்/

2.தடாகத்தின் நடுவே சிரிக்கும் தாமரைகள்/

3.கடலிலே மறையும் கதிரவனை பார்த்து/


4.வெட்கிச் சிவந்திடும் வான மகள்/

5.அமைதியானதோர் சாயங்காலப் பொழுதினிலே/

6.மங்கையிவள் காத்திருப்பு தொடர்கிறது காதலனுக்காக/


அம்பிகா ஸ்ரீகுமார்

12

727

பொழுது சாயும் அந்திவான அஸ்தமனம் //

ஆர்ப்பரிக்கும் பூக்களின் நந்தவனக் குளம் //

இதழ்மலர்ந்து  காத்திருக்கும் செந்தாமரை பூக்குளம் //


முகம்மலர்ந்து பூப்பறிக்க  வீற்றிருக்கு பெண்தாமரை //

குளத்திலுள்ள மொத்த பூவுக்கும்  இணைப்பூயிவளே //

பூஜைக்கு ஏற்ற பொற்றாமரை பறிக்கிறாள் //


சுசி சுசேனு

13

246

தாமரைப்பூ கொளத்திலே சாயங்காலப் பொழுதிலே

தனியாகத்தான் வந்தேனே பூக்களையும் பறித்திடவே

அந்திமாலை கவிழ்ந்தாலும் மென்தென்றல் தழுவினாலும்


தாமரைப் பூக்களும் தரிசனம் செய்யவே

தயங்காமல் நானும் தண்டோடு பறித்தேனே.

முக்கண்ணன் சந்நதியில் மூன்றாம் சாமபூசைக்கு.


செல்வம் செல்வகுமார்

14

614

இதழ்கள் விரித்த தாமரையை பார்க்கையிலே/

இதயத்தில் சொல்ல முடியாத மகிழ்ச்சியிலே/

மனம் பறிக்க நினைக்கும் வேளையிலே/


குளத்தில் உள்ள ஆழத்தை நினைக்கையில/

தலையில் சூட்ட முடியாது போகையிலே/

எனது உள்ளம் பொங்குது ஆனந்தத்திலே/


விஜயலட்சுமி

15

470

குளிக்க    வந்தவனை  கொதிக்க  வைத்தாயே

நீராட   குளிர்ச்சியாகும் நீயாட  மகிழ்சியாகும்

சந்திரனைக் கண்டதும் அல்லிதானே மலரும்


வள்ளியைக் கண்டதும் தாமரையே  மலர்ந்ததோ

பூக்களோடு அருகிருக்காதே மதுவுண்ட  வண்டுகள் 

உன்    அதரப்பூக்களில் தேனுண்டு விடும்.


நா.சுகுமாறன்

16

716

கம்பனின் கற்பனைக்கு தப்பிவந்த சித்திரமே // 1

அர்சுனனுக்கு அகப்படாத ஆச்சரிய அசுத்திரமே // 2

குளக்கரையில் உனைக்கண்டு குவளைகளும் குதூகலிக்கும் // 3


அல்லிமொட்டும் அவசரமாய்க்  கிட்டவந்து பூவிரிக்கும் // 

வழிநெடுகப் பூப்போட வயசுப்பையன் நானிருக்கேன் // 5

நீயும்நானும் சேர்ந்துவாழ தேதியொண்ணு குறித்திருக்கேன்.// 6


- நாகை. ஹாஜா

17

207

தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே/

பூத்திருந்த மலரெடுத்து பூவை உனக்கு/

சூடிட நினைத்தே ஆசையோடு காத்திருந்தேன்/


அன்பின் சுடரில் அரவணைக்க நினைத்தேன்/

பொங்கும் நினைவுகள் தங்கும் ஞாபகங்களில்/

உள்ளம் மகிழ்ந்தே உன்னில் கலந்தேன்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

18

735

தாமரைக்குளத்திலே சாயங்காலப் பொழுதிலே.

வயலில் உழுதுவிட்டு களைப்பார குளித்தேனே/

தூண்டிலால் மீன் பிடித்து மகிழ்ந்தேனே/


கரையிலிருந்து சிறுகல் வீசி சிரித்தேனே/

நீச்சல் அடிக்க பாய்ந்து வீழ்ந்தேனே/

தாமரைஇலையில் சுண்டல் சுவைத்தேனே/

காகிதக்கப்பல் விட்டு தூது அனுப்பினேனே.


   படைப்பாளி பைரவி

19

270

அந்தியிலே ஆதவனும் அணிந்திட்டான்  குங்குமத்தை !//

சுந்தரியே       நீயுமே சொக்கித்தான் போனாயோ  ?//

விந்தையாக  வந்தேநீ விண்மீனாய்  மின்னுகின்றாய்  !//


செந்தாமரைப்      பூக்களின் சிறுகுளத்து நீரினிலே  !//

அந்தரத்து       இரம்பையே அழகான ஓர்மலரை  !//

மந்திரத்தை        ஓதியே மகிழ்வுடனே  பறித்துவா  !//


தளவை வில்லவன்கோதை .அண்ணாமலைப்புதூர் .

20

766

தாமரைக் குளத்திலே தங்கமென மிளிர்ந்தாய்/

தாமரையின் முகம்போல மலர்ந்ததடி உன்முகமும்/

சாயங்காலப் பொழுதிலே சந்தனம் மணக்குதடி/


சாலையோரப்  பூக்களெல்லாம் தோற்றுப்போனதடி/

அடிவானம் சிவந்திருக்கும் ஆழ்மனமோ பூத்திருக்கும்/

இரவை எண்ணி வரவேற்று நிற்குதடி..!


சுரேஷ்குமார் தமிழ்செல்வன்

21

465

பெண்ணா பூவா பேசும் தெய்வமா

கண்ணா கணையா காதல் சின்னமா

வண்ண வானில் வரைந்த ஓவியமா


தன்னை மறந்து தடாக நீரில்

தள்ளினாள் படகை தாமரை பறிக்க

சாய்ந்ததால் பொழுது சாய்ந்தது பூவும்.


இரா.வெங்கடாசலம்

22

261

ஆதவன் மறைந்ததும் இருள் சூழ்ந்ததுவே

புள்ளினங்கள் கூட்டிற்குப் பொழுதுடனே திரும்பினவே

தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே


மலர்ந்த மலர்கள் குவியத் தொடங்கினவே

கயல் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றனவே

வானத்தில் சந்திரன் ஒளிவீசத் தொடங்கியதே !


~ வள்ளல் இராமமூர்த்தி

23

201

காத்தாட வந்தாயோ   களைப்பாற நடந்தாயோ/

பூக்களோட பூக்களாய் புனலாட வந்தவளே /

மாமனோட மனசையும் மயக்கிப்புட்டுப் போறியேடி /


தாமரைக் குளத்திலே சாயங்காலப் பொழுதிலே/

பூத்திருந்த பூக்களெல்லாம் பூவையே உன்னழகை/

பார்த்தே ரசிக்குதடி பரவசமா இருக்குதடி//


புவனா  சற்குணம்   கனடா

24

373

அல்லிக் குளமும்     அலங்காரப் பெண்ணும்

தாமரைப் பூப்பறிக்க    தயங்காது சென்றாள்

அந்திநேரம் ஆசைமச்சான் ஆசையோடு காத்திருக்க 


வஞ்சியிவள் வானிலே காதல்மழை பொழிகிறது

உயிரான உலகத்திலே உறவைத்தேடி ஓடுகிறாள்

வானமுள்ள காலம்வரை வாழட்டும் அன்புடனே !!


ஜயந்தினி வாகீசன் 

25

344

ஆகாயவானம் அந்தி சாயும் நேரம்

மையலுடன் காத்து நின்றாளே...மங்கை

தடாகத்தில் தவமிருந்தாளே தவியாய்த் தவித்திருந்தாளே.


கதிரோருனும் மறைய கலங்கிடுமாம் கமலம்

கலங்காமல் வீற்றிருந்தாளே கன்னியிவள் சிவந்திருந்தாளே

கண்ணனின் வரவிற்காக பலருடன் பூத்திருந்தாளே!


#எமா#

26

647

மெய்யோடு மெய் தீண்டியதும் இல்லை //

சொல்லோடு சொல் வார்த்ததும் இல்லை //

நேத்திரம் நான்கும் நேராய் நோக்கியதுமில்லை//


நம் நாமமதை நாவால் நவிழ்ந்ததுமில்லை//

ஆயினும் , உமது வரவால் உயிர்த்தேனே //

தாமரைப்பூ குளத்திலே சாய்ங்காலப்  பொழுதிலே //


நாகநந்தினி 

27

602

"கன்னி உனை கண்டேன்         குளக்கரையிலே

கதிரவனும் மறையும் அந்திப்        பொழுதிலே

கன்னத்தில் குழி விழும்         சிரிப்பாலே


கட்டுண்டு மயங்கிப்          போனேன் தன்னாலே

எண்ணத்தைச் சொல்லிட           விளைந்தேன் நேரிலே

கண் விழித்தால் கனவானது            முடிவிலே."


வெங்கடேசன் கோவிந்தராஜ்

28

317

தாமரைகள் தடாகத்தில் ஆயிரம் இருந்தது/

ஆவாரம் பூவாக அவள்மனம் நினைந்தது/

படகினில் சென்று பறித்தாள் மகிழ்ந்து/


பரவசத்தில் இருந்தாள் பனித்துளி குளிர்ந்து/

பொழுது போனது புன்னகை தவழ்ந்து/

புதுப்புதுப் பூக்கள் குளத்தில் நிறைந்து/


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

29

774

மாமனுனைக் காணவந்தான் மலலிகைப்பூங் கையோடு

தாமரைப்பூ குளத்திலே சாயங்கால நேரத்திலே

காமனவன் கணைதொடுக்கக் கண்மலர்ந்த தேவதையே


தாமரைக்கண் ணால்பார்த்துத் தளிர்முகத்தில் சிவப்பேற

நாமமுந்தான் கெட்டு நளினத்தைக் காட்டிடுக.


இளவல் ஹரிஹரன், மதுரை

30

483

தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே / 1

நீரெடுக்க அவள்வந்தாள் வான்நிலா வந்ததென/2

அல்லிப்பூ மலர்ந்ததே தாமரை கூம்பியதே/3


மெல்லியலாள் இடைதழுவி பூந்தென்றல் குறும்புசெய /4

சொல்லொண்ணா ஏக்கமுடன் சோலையைப் பார்த்தாள்/

மெல்லவே அவன்தொட்டான்மேற்குவான்சிவந்ததே/6


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

31

428

தாமரைப்பூக் குளத்திலே தண்ணீரில் அசைகின்ற

அழகைக் காண்பதற்குக் கண்கோடி வேண்டுமே

தாரைகையும் தனியாகத் தலைவனுக்குக் காத்திருக்க


பெண்ணிவளின் மதிமுகமும் செக்கச் சிவந்திருக்க

தன்னிதழே தனியாக அவளிதழாய் மாறியதோ

தாமரைக்குச் சந்தேகம் தலையைச் சுற்றியதே.


சுப்பிரமணியன் அன்புமலர்

32

747

ஊருக்கு மத்தியிலே    அழகானத்  தோற்றத்திலே//

தாமரைப்பூக் குளத்திலே சாயங்காலப் பொழுதிலே//

தாமரையும் வாடலியே    தாகமும் தீரலையே//


குளிக்க வந்தவளே      குளிர்ச்சித் தருகிறியே//  

குளிர்ந்துப் போனதடி             குற்றமற்ற எம்மனசு//

விருந்து தருவேனடி        விருப்பத்தினைக் கூறிவிடு//

மறுப்பு வந்தாலே        மறைந்துப் போவேனடி//


ஜெ.சுகமணியன் வாழப்பாடி

33

224

🌿அந்திமாலைப் பொழுதினிலே அழகியவள் வருகையிலே

🌿தாமரைப்பூ குளத்திலே தென்றலுமே வீசுது/

🌿பூத்திருக்கும் பூக்களை வண்டுகளும் மொய்த்திடும்/


🌿காத்திருக்கும் காதலுமே மெதுவாக அரங்கேறும்/

🌿ஆயிரம் கனவுகள் அழகாக  மலருது/

🌿சாயங்காலப் பொழுதிலே சங்கீதம் ஒலிக்குது/


✍🏻க.குணசேகரன்

34

461

காலைக் கதிரவன் கடமை முடித்து/

மாலையது நேரத்திலே மயங்கியப் பொழுதிலே/

மங்கையவள் மனமெல்லாம் மலர்நிறை குளத்திலே/


தழுவியவன் மறையவே தாமரை குவியவே /

சாயங்காலப் பொழுதிலே சூழ்ந்த அழகிலே/

அழகு அகலாத அழகு ஆளுமையே./


கோ.அருச்சுணன்.

35

210

செந்தாமரைக் குளத்திலே செவ்வந்திப் பொழுதிலே../

செங்கதிரோன் விடைபெறவே செங்காந்தள் விழியழகி../

செந்தூரப் பொட்டுவைத்து செவ்வண்ணச் சேலையிலே../


சேகரிக்க வந்தாளே செந்தாமரை மலர்களை../

சேற்றிலே மலர்ந்தாலும் செந்தூரான் திருவடியிலும்.../

சேவிக்க உகந்ததே சேமங்கள் பெற்றிடவே.../


திருமதி சுப்ராணி சிவகுமார்....✍

36

386

தாமரைப்பூக் குளத்திலே சாயங்காலப் பொழுதிலே/

பூப்பறிக்க வந்தவளே புதுநாற்றாய்ச் சிரித்தவளே/

கொடிபின்னிப் பழுதாக்கும் கொடியிடையே உன்காலை/


நொடிப்பொழுது காத்திரடி நூறுமலர் பறித்திடுவேன்/

கூந்தலிலே மலரொன்றைச் சூடிடவே வரங்கொடடி/ கொவ்வையிதழ் முத்தமும் தந்திடடி வழிவிடடி/.


தென்கரை தாயுமானவன்.

37

756

செந்தாமரைப் பூத்திருக்கும் குளத்தினிலே பூப்பறிக்க

சிங்காரிப் படகெடுத்து சென்றாளே மாலையிலே

மலர்ந்திருந்த மலரொன்றில் மதுவுண்ட வண்டொன்று


மயக்கத்தில் தனையிழந்து மலரென்று இசைமீட்ட

மங்கையவள் நாணத்தில் கரங்கொண்டு முகமறைக்க

இரவென்று கருவண்டு பறந்தோடிப் போனதம்மா!


       - ஜெயக்குமார் சுந்தரம்              

38

748

தாமரைப்பூ குளத்திலே சாயங்கால வேளையிலே/

இருவரும் மகிழ்திருக்க இனியவளே வந்துவிடு/

என்னருமைக் காதலையே ஏந்திழையே உன்னிடம்/


ஏகாந்த வேளையிலே நான் கூறி/

உன்னுடைய மடியிலே தலைசாய்க்க வேணுமடி/

காலங்கள் கடந்து நாம்வாழ வேண்டுமடி/


இரா.மதனகோபாலன், தருமபுரி.

39

221

இனிமையான காட்சியிலே இளமை நிறைந்திருக்க 

இனிமை ததும்பிடும் இயற்கை அழகிலே 

நீர்ப்பரப்பின் மீதினிலே நீராடும் தாமரையை


நீராடிட வைத்திடும் நித்திலத் திருமணியே

கண்ணே உனக்கும் காதல் வந்ததுவோ

கண்ணாளன் வருவாரென்று காத்திரு தேவதையே


புஷ்பா கிறிஸ்ரி

40

258

அத்தை மகளே அழகு ராசாத்தி/

மாமன் மகன் மோகத்திலே மயக்கமோ/

சாயங்கால வேளையிலே, தாமரைக்குளத்துப் பக்கம்/


தயங்காம வந்திடடி, தந்திடுவேன் நீகேட்டதை/

சந்தோசமாப் பேசிடலாம், சரசமாக இருந்திடலாம்/

தை பிறந்ததும் தாரமாகப் போறவளே!


                   தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26.           

41

259

குளத்திலே பரவலாகப் படர்ந்து வளர்ந்து.../

அழகிய இதழ் விரித்து மலர்ந்து.../

தாமரைப்பூ கண்களுக்கு நல்ல விருந்து.../


சோர்ந்த உள்ளத்திற்கு உற்சாக மருந்து.../

குழந்தையாய் தொட்டு விளையாடி மகிழ்ந்து.../

அந்திப் பொழுது போகுதே நகர்ந்து...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

42

638

அந்தி நேரத்தில் அகன்ற குளத்தில்

ஆரணங்கு அன்ன நடை பயின்று

பூத்தமலர் பறித்து புத்தாடை நனைய


புது மேனி குலுங்க  வந்தால்

சித்திரமாய் மங்கை சிலுசிலுக்க வந்தாள்

முத்தமிட அசையடி அத்தை மகளே


கவிஞர் கோ.நவமணி

43

254

தாமரைப்பூ குளத்திலே அல்லித்தண்டு கைகளால்/

கதிர்சாயும் வேளையிலே  மனதைப் பறித்தாள்/

அன்றலர்ந்த மலர் போலும் அவள்முகம்/


கள்ளமில்லா உள்ளத்திலே காதல் கொண்டவளே/

நல்வாழ்க்கை அமையவேண்டி கைகள் கூப்பிநின்றாள்/

கண்கள் திறந்தபோது நெஞ்சத்தில் மஞ்சமானாள்/


கி.மா.கனகராசன். சூலூர்( அழகு மாசிலாமணி )

44

768

தாமரை மலரொன்று தடாகத்தில் அசைந்தாட/

தாரகை ஒருத்தி மலரழகில் மயங்குகிறாள்/

முகத்தில் விரிந்த புன்னகையின் அழகு/


போதுமடி உந்தனுக்கு! வேறுமலர் உனக்கெதற்கு?/

போகட்டும் விட்டுவிடு பறிக்காதே கைநீட்டி!/

குளத்திலே உயிர்ப்போடு மலரதுவும் சிரிக்கட்டும்!


புவனா சந்திரசேகரன்

45

718

அந்திப் பொழுதினிலே தாமரைக் குளத்திற்கு/

வந்த இவள் வண்ண நிலவோ?/

செந்  தாமரை  மலரைப் பறிப்பவளோ


சிந்துகின்ற புன்னகையும் சிறப்பு அல்லவோ?/

சந்ததமும் வருவாளோ சம்மதம் தந்துமே/

சுந்தரி வாழ்விலே துணையாக வருவாளோ


கீழ்கரவை குலசேகரன், இலங்கை

46

722

பொன்மாலைப் பொழுதில் மலர்கள் கொய்திட/

தரை இறங்கிய ரதியோ இவள்/

நின் அருகாமையில் சுகந்தமாக மணந்திட/


செங்காந்தள் சிவந்திட ஆம்பல் மலர்ந்திட/

பூக்களின் நடுவே உதயமான தேவதையே/

நாண நகைப்பில் சிறைப் பட்டேன்/


சுஜாதா அருணாச்சலம்

47

709

தண்ணீர்கள் மேலெழுந்து தாமரைகள் முகம்காட்ட// 

மலர்மேலே  ஆசைகொண்டு அருகினில் வந்தமர்ந்தாள்// 

கண்குளிரக்  காட்சிதந்து காதலியாள் மின்னுகிறாள்// 


பூவாக அவதரித்த மங்கையிவள் அழகினை// 

தாமரைப்பூ குளமும் அலங்காரம் செய்கிறதே// 

இதழ்விரித்தக் கன்னியே இதயத்தைத் திருடிவிட்டாய்// 


தாழை. இரா. உதயநேசன்

48

636

மராமத்து செய்து குளத்தைப் பராமரித்தார்!

கிராமங்கள் தோறும் கழனியைப் பயிரிட்டார்!

மண்வளம்  விரவி ஊரும் செழித்ததுவே!


மீன்வளம் பெருகிக் கிராமம் கொழித்ததுவே!

ஓடிவரும் மதகுநீரின் மிசையால் விவசாயம்!

செந்தாமரைகள் குளத்திலே மிதக்கின்றன தாராளம்!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

49

618

தாமரைப்பூ குளத்தினிலே    சாயங்காலப் பொழுதினிலே/

தண்ணீர் அள்ளக்    குடத்தைக் கொண்டு/

தலை குனிந்து    தரையைப் பார்த்து/


தயங்கி நடந்து    போகும் பெண்ணே/

தவிக்கும் மனதைத்   தடவி ஆத்தி/

தாகம் தீர்க்கத்    தருவாய் பதிலை/


ஔவை.

50

707

தாமரை நிறைந்த தடாகம் ஒன்றில்

தாரகை ஒருத்தி பூத்து நின்றாள்

பூத்த மலரினை அள்ளி எடுக்கும்


பூக்கும் மலரும் இவள் அல்லவோ!

மலரெது விரலெது விளங்க வில்லையே

மங்கையின் மனமோ பாலின் வெள்ளையே


✍️பா.ச.கண்ணன்

51

652

தாமரைப்பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே/

எதற்கு வந்தாயோ அழகு மங்கையே!/

கையில் எட்டாமல் தள்ளாடும் தாமரையே!/


விடாது பிடிக்க முயற்சிக்கும் மாதுவே!/

இதுவென்ன அழகு விளையாட்டு நேரமோ?/

 பார்ப்போம் யார் வென்று அகப்படுவதென/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

52

287

வண்டுகள் மொய்க்கின்ற வண்ணத் தாமரைகள்

ஆதவன் மறைந்திடின் இதழ்கள் மூடிடும்

அதற்குள் வண்டுகள் அதனைச் சுவைத்திடும்


மங்கையின்  பிம்பம் மலரிடை தெரிகையில்

மலரோடு மலராய் அவளும் கலந்திட்டாள்

மங்கையின் கண்களே வண்டுகள் ஆயின


தண்டபாணி

53

613

செவ்வானம் சிவந்திருக்க சூரியனார் ஓய்வெடுக்க/

கதிரவனைக்  காணாது தாமரையும் தலைகுனிய/

குளத்தருகே மங்கையவள்  நாணம் கொண்டமர/


பூத்திருக்கும்  பூக்களை தன்கரத்தால்  வரடிவிட/

தாமரைக்   குளமருகில் அந்திசாயும்  பொழுதிலே/

தாமரையாள் கண்கள் தன்னவனைக்காண தவமிருந்தாள்/


ஜெயாசந்திரமோகன்

54

247

மாலை நேரத்தில் மயங்கித் திரியும் /

பறவைகள் போல சாலையின் ஓரத்தில்/ 

குளத்தில் பூத்திருக்கும் தாமரைப்பூவை பார்த்தவுடன் 


மங்கையவள் மயங்கிப் போகின்றாள் மன்னவனின்/ வருகையை எண்ணி கிறங்கித் திரிகின்றாள்/ 

மன்னவனும் வந்தான் கதையொன்றும் சொன்னான்/


த.காமராசு. தாராசுரம் கும்பகோணம்

55

434

காலைக் கதிரவன் வரவில் பூத்திருக்கும்/

கண்கவர் அழகு செந்தாமரைப் பூக்களோ/

பறிக்க எவருமின்றி மாலையில் ஏக்கத்தில்/


பேரழகுப் பெண்ணவளோ  கரையோரம் நடந்தாளே/

குளத்தின் பூக்களுக்குப் புத்துணர்வு பிறந்ததே/

பதுமைத்  தீண்டிட குளமெங்கும் ஆர்ப்பரித்ததே//


மீனாட்சி சுந்தரம்

56

515

சூரியன் ஓய்வெடுக்கும் சாயங்காலப் பொழுது/

செவ்வானம் பூமியைக் குளிர்விக்கும் தருணம்/

சேல்விழி மங்கையின்  தரிசனத்தில் மயங்கினேன்/


செந்தாமரைப் பூக்களால் சிவந்திருக்கும் பொய்கையில்/

செங்காந்தள் விரல்களால் மலர்களைக் கொய்திடும்/

சிற்றிடையாள் அழகில் தோற்குமோ வெண்ணிலவும்..


லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன்

57

717

தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே/

பூமகளும் வந்தாளே போதையினைத் தந்தாளே/

காமன் நானாக கன்னி அவளாகி/


தேமதுரம் தந்தாளே தித்திக்கும் இதழாலே/

பூரித்துப் போனேன் நானும் பூமகளை/

வாரி அணைத்திட்டேன் மையல் கொண்டே/


கந்தசாமி நடேசன்

58

769

தண்ணீர்க் குடமெடுத்துத் தண்டை கிணுகிணுக்க/

தனிவழியே போறவளே! தங்கமே தாழம்பூவே!/

நினைப்புமே தோன்றலையோ? நெஞ்சந்தான் புரியலையோ?/


நிதமும் உனக்காக இதயம் துடிக்குதடி/

தாமதிக்காதே கண்ணே! காத்திருப்பேன் உனக்காக/

தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே!/


  - கற்பகாம்பாள் கண்ணதாசன்

59

750

தடைகள் நீங்கிடுச்சு விடைகள் கிடைச்சிடுச்சு..!

கலியாணப் பேச்சும் கைக்கூடி வந்திடுச்சு..!

ஆசையாய்ப் பேசிட ஆயிரம் கனவுகளோடு..!


அத்தமக காத்திருப்பாள் அச்சத்தில வியரத்திருப்பாள்..!

தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே..!

கால்கடுக்க நின்றிருப்பாள் கண்ணிரண்டும் பூத்திருப்பாள்..!


- தமிழ் வேந்தன்...

60

668

தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதில்

அழகிய தாமரைப்பூ தடாகத்தில் சாயங்காலமாம்/

பொழுதிலே தேவதையாய் மங்கை யொருவள்/


புன்னகை முகத்தோடு  இதழ் விரித்து/

மலர்ந்து நிற்கும் தாமரையை நீண்டகரத்தினால்/

மெலிதான தண்டினை வலியறியாமல் பறித்தெடுத்து/

மிதக்கும் தெப்பமாக வலம் வருககிறாள்/


ஏஞ்சல்சோபிதா

61

562

மனதில் மலர்ந்தவளே இதயத்தில் இனிப்பளே/

கனவுகளை நிறைப்பவளே கற்பனைகளில் நிறைத்தவளே/

என்னுயிரை இயக்குபவளே வாழ்கையின் திசைக்காட்டியே


துன்பத்தைத் துடைப்பவளே இன்பத்தை அளிப்பவளே/

என்னைத் தேடிவரத்        தயக்கமேன் தேன்மொழியே/

தாமரைபூ குளத்துக்கு தவறாமல் வந்துவிடு/


பா.பத்மநாபன்




போட்டி முடிவடைந்தது

62

204

தாமரைப்பூ குளத்திலே சாயங்காலப் பொழுதிலே//

ஆசையோட காத்திருக்கேன் அஞ்சுகத்தைக் காணலியே//

ஆளில்லாத நேரத்திலே அள்ளிக்கத்தான் தோணலியா//


சித்திரமே செங்கனியே சீக்கிரமே வந்திடடி//

சிந்தைக்குள்ளே வச்சிருக்கேன் சின்னவீடும் இலையடி//

சில்லுன்ன காத்தும் கொல்லுதடி செண்பகமே//


ஆஸாத் கமால்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages