26.08.20-ரேவா : 12- பல்லவன் மல்லன் - தென்குமரிக் கவிதைக்களம்

புதன், 26 ஆகஸ்ட், 2020

26.08.20-ரேவா : 12- பல்லவன் மல்லன்

 



26.08.20


ரேவா


பல்லவ_மல்லன்_12


அரண்மனை விருந்தினர் மாளிகையில் உதயச்சந்திரனுக்கு, நீராடுவதற்கு மிதமான சூட்டில் வெந்நீர் வழங்கப்பட்டது, கூடவே பலவித வாசனைப் பொடிகளும் வழங்கப்பட்டன. அத்தோடு அவனது உடலில் ஒரு வகையான  தைல எண்ணெய் தடவப்பட்டு நீராடுவதற்கு வசதிகள் செய்து தரப்பட்டது. நீராடி முடித்தவுடன் அரண்மனையில்  இருந்து உயர்ந்த ரக ஆடையொன்றும் வழங்கப்பட்டதோடு. அவனை உணவருந்தும் கூடத்திற்கும் அழைத்துச் சென்றார்கள். பலவகையான உணவுப் பதார்த்தங்கள் படைக்கப் பட்டிருந்தாலும், சிலவகை கனிகளையும், பாலையும் மட்டும் வாங்கி அருந்தியவனாய் தனது உணவினை முடித்துக் கொண்டு, அவன் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அவனது அறைக்கு ஏற்கனவே அவனது பட்டு மூட்டையும், அவனது ஹேலடி வாளும் வந்து சேர்ந்திருந்தது. அறை வாசலில் நின்றிருந்த காவலன் இவனைக் கண்டதும் தலையை வணங்கி அவனுக்கு மரியாதை செலுத்தியதோடு, அவனது உடமைகளையும் அவனிடம் ஒப்படைத்தான்.


அறைக்குள் நுழைந்த உதயச்சந்திரன், கடவேச ஹரிவர்மர் திருப்பித் தந்திருந்த பல்லவரது சிம்ம இலச்சினையை தனது இடுப்புக் கச்சையிலேயே பத்திரப் படுத்திக் கொண்டவனாய், சிறிது நேரம் அறைக்குள் உலாவியவன், நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என தீர்மானித்தவனாய் அறையை விட்டு வெளியேறினான்.


" வீரனே..நான் நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறேன்..மாலையில் வந்து விடுவேன்.." என்றவனாய், அரண்மனையை விட்டு வெளியேறினான்.


*புனான் தேசமெங்கும் கால்வாய்கள் நிறைந்து காணப்பட்டது. ஏரிகளும் கால்வாய்களும் காம்புஜ தேசத்தை செழிப்பாகவும், எழிலாகவும் வைத்திருந்தன. நகர வீதிகளில் மட்டுமே மக்களை கூட்டம் கூட்டமாய் காண முடிந்ததேயன்றி, நகரங்களை விட்டு விலகிச் செல்லும் கிராமப்புறங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.


பல நாட்டுப் பொருள்களும் அங்குள்ள கடைகளில் விற்பனைக்கு இருந்தன. ஆனால் விலையோ அதிகமாய் இருந்தது. கண்களில் படும் பெண்கள் எல்லாம் அழகுப் பொருட்கள் வாங்குவதிலும்,  தங்களை அழகு படுத்திக் கொள்வதிலும்

அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்ணுற்றான். பாண்டிய நாட்டு முத்துக்களையும், சீன தேசத்துப் பட்டுத் துணியையும் புனான் தேசத்து பெண்மணிகள் விரும்பி வாங்கிச் செல்வதையும் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டவனாய், " பெண்கள் மட்டும் அனைத்து தேசங்களிலும் ஒன்று போலவே காணப்படுகிறார்கள்" என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.


ஒவ்வொரு கடையாக வேடிக்கைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தவனது கண்களில் தென்பட்டாள் பியூஷா.


சட்டென உதயச்சந்திரனது முகம் மலர்ந்தது. வேகமாய் அவளை நெருங்கியவன் " பியூஷா.." என மெல்ல அழைத்தான்.


சற்றே திடுக்கிட்டவளாய் , திரும்பிப் பார்த்த பியூஷா, உதயச் சந்திரனது முகத்தைப் பார்த்ததும் மெல்ல புன்முறுவல் பூத்தாள்.


" எங்கே..தங்களைச் சில தினங்களாக நகரத்தில் காணவில்லையே..? " என்றாள் ஒன்றும் அறியாதவளாய்.


" அதை ஏன் கேட்கிறாய்..விதி வசத்தால் மன்னரது காவலாளிகளிடம்  அகப்பட்டுக் கொண்டேன்..இறைவன் செய்த உதவியால் , மீண்டு விட்டேன்.." என்றான் விஷமத்துடன்.


" இறைவன் உதவி செய்தாரா..? ஆச்சர்யமாக இருக்கிறதே..? என்றபடி கலகலவென நகைத்தாள்.


" இங்கு மனிதன் செய்யும் உதவிகளையும்,  இறைவன் உதவி செய்வதாக தானே பேசிக் கொள்கிறார்கள்.." என்றான் ஏளனம் தொனித்த குரலில்.


" இதில் என்ன தவறு..?! உதவக் கூடிய மனிதனை இறைவனாக இங்கு காண்கிறார்கள்..அரசன் தான் இங்குள்ள மக்களுக்கு  எல்லாம் பெரிய இறைவன்." என்றாள் பியூஷா.


இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், தூரத்தில் முதியவன் வருவதை கண்ணுற்ற பியூஷா, " நான் வருகிறேன், எனது தந்தையார் வந்து விட்டார், " என்றபடி அவ்விடத்தை விட்டு நகரத் துவங்கினாள்.


"பியூஷா..ஏன் உன் தந்தையைக் கண்டதும் ஓடி விடுகிறாய்..உன்னிடம் நிறைய பேச வேண்டும்..சற்றே நில்.."


" நாளை இதே வேளையில் சந்திக்கலாம்.." என்றபடியே ஓடிவிட்டாள் பியூஷா.


தூரத்தில் வந்து கொண்டிருந்த முதியவனைக் கண்டதும், உதயச்சந்திரனுக்கு சந்தேகமே மேலோங்கியது, " இந்த முதியவன் பியூஷாவின் தந்தையாக இருக்க முடியாது " என்றொரு உள்ளுணர்வு உதயச்சந்திரனது மனதிற்குள் எழ, அடுத்த முறை பியூஷா விடம் இதைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்  என மனதிற்குள் நினைத்துக் கொண்டவனாய், அரண்மனையை நோக்கி நடக்கத் துவங்கினான்.


இரவின் முதலாம் ஜாமம் முடியும் தருவாயில் , அறைக் காவலன் மன்னர் அழைப்பதாக கூறியதோடு, உதயச் சந்திரனை அழைத்துக் கொண்டு பல கட்டுக்களை கடந்துச் சென்றான். இறுதியாக இருவரும் நுழைந்த அறையின் மையத்தில் போடப்பட்டிருந்த ஒரு ஆசனத்தில் கடவேச ஹரிவர்மர் அமர்ந்திருந்தார். அறைக்குள் நுழைந்த உதயச்சந்திரனையும் எதிரே அமரும் படி பணித்த மன்னர், " வீரனே, பல்லவ தேசத்திற்கு உதவுவது எனது கடமையாகும்.. பல்லவ தேசத்தில் உள்ளவர்கள் , நான் எந்த வகையில் உதவ வேண்டுமென விரும்புகிறார்கள் என்பதை தெரியப் படுத்த இயலுமா..? " என்றார்.


" அரசரே..தங்களுக்கு நான்கு புதல்வர்கள் எனக் கேள்வி பட்டு இருக்கிறோம்..அரசுரிமை முதல் மகனுக்கே உரியது என்பதனால் , தங்களது மூத்த மகன் ஸ்ரீமல்லன்  காம்புஜ தேசத்தின் மன்னனாகவே வாய்ப்புள்ளது..எனவே தாங்கள் தங்களது இரண்டாவது மகனான இரண் மல்லனை என்னுடன் அனுப்பி வைத்தால் , பல்லவ தேசத்தின் மன்னனாக அவரை நாங்கள் தேர்வு செய்வோம்.." என்றான் பணிவுடன்.


" ம்..புரிந்தது..இதோ இரண் மல்லனை இங்கு வரவழைக்கிறேன், நீங்களே நேரடியாக விபரத்தைக் கூறி அழைத்துச் செல்லலாம்." என்றார் கடவேச ஹரிவர்மர்.


சிறிது நேரத்தில் வந்து சேரந்த கடவேச ஹரிவர்மரின் இரண்டாவது மகனான இரண் மல்லன், உதயச்சந்திரனது வார்த்தைகளை முழுதும் கேட்டு முடித்ததும் , " வீரரே..என்னை தாங்கள் தயவு கூர்ந்து மன்னிக்க வேண்டும்..நான் பாரத தேசத்திற்கு வர விரும்பவில்லை. இங்கிருக்கவே நான் விரும்புகிறேன்.." என்றான் பளிச்சென்று.


உதயச்சந்திரனது முகம் மெல்ல இருளத் துவங்கியது. கடவேச ஹரிவர்மரை ஏறெடுத்தான்..அவரது முகமோ எவ்வித உணர்ச்சியையும் காட்டத்  தயாராக இல்லை..


" அரசே.."  என்றான்பரிதாபமாக உதயச் சந்திரன்.


" வீரரே..கவலை வேண்டாம்..மூன்றாவது மகன் சங்கிராம மல்லனை அழைத்துச் செல்ல முயற்சியுங்கள்.. "இதோ அவனை அழைக்கிறேன்." என்றார்.


சற்று நேரத்தில் வந்து சேர்ந்தவனுக்கு பதினான்கு வயது தான் இருக்கும், வணங்கி நின்றவனிடம் விசயத்தைக் கூறி பல்லவ தேசத்திற்கு உதயச் சந்திரன் அழைக்க அவனும் , " வீரரே பாரத தேசத்திற்கு வருவதற்கும், பல்லவ அரச பீடத்தில் அமர்வதற்கும் எனக்கு விருப்பமில்லை..என்னைக் கட்டாயப் படுத்த வேண்டாம் " என மறுத்து விட்டான்.


உதயச் சந்திரனது நம்பிக்கை முழுதும் தகர்ந்தது..தான் இதுவரை பட்ட கஷ்டங்களுக்கு பலனில்லாமல் போய்விடுமோ ..? என்ற கவலை உதயச் சந்திரனைத் தொற்றிக் கொண்டது.


கவலை தோய்ந்த முகத்தோடு கடவேச ஹரிவர்மரை ஏறெடுத்தவனை, " வீரனே இறைவனது சித்தம் எப்படியோ..? நான் அறியேன்..இறுதியாக உனக்கிருப்பது ஒரே வாய்ப்பு தான்..எனது கடைசி மகனை அழைத்து வரச் செய்கிறேன். அவன் வந்தால் அழைத்துச் செல்லுங்கள். பீமவர்மனது வாரிசு பல்லவ பீடத்தில் அமர்வது இறைவனின் சித்தமெனில் , அவன் தங்களுடன் வருவான்..இல்லையெனில் நீங்கள் வருந்தி பயனில்லை..தாங்கள் மட்டுமே பல்லவ தேசம் செல்ல வேண்டியதிருக்கும்.." என்றார் வறண்ட குரலில் கவலை தொனிக்க கடவேச ஹரிவர்மர்.


உதயச்சந்திரனுக்கு நம்பிக்கையே தளர்ந்தது. காம்புஜ தேசத்து மன்னர் கடவேச ஹரிவர்மரது நான்காவது மகனுக்கோ பனிரெண்டு வயது தான் ஆகிறது..சிறுவன் வேறு..அவனை விட பெரியவர்களான இவர்களே வரமறுத்த போது சிறுவன் எப்படி வர சம்மதிப்பான்..? என்ற சந்தேகமும் மனதிற்குள் எழ, அரைகுறை மனதோடு நான்காவது மகனை வரவழைக்கும் படி மன்னரிடம் கூறினான்.


மன்னரும், உதயச் சந்திரனும் இருந்த அறைக்குள் நுழைந்த நான்காவது மகனை, மன்னர் கடவேச ஹரிவர்மன் உதயச்சந்திரனுக்கு தலைவணங்கும் படி பணிக்க சட்டென எழுந்தது, அவனிடமிருந்து  ஒரு குரல், " முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு யாருக்கும், எதற்கும்  நான் தலை

வணங்குவதில்லை" என்றான் துணிச்சலாய்.


உதயச்சந்திரன் அதை பொருட்படுத்தவில்லையாயினும், கடவேச ஹரிவர்மர், " வீரரே தவறாக எண்ண வேண்டாம்..அவன் தீவிரமான வைஷ்ணவ பக்தன்..அதனால் தான்.." என இழுத்தார்.


" பரவாயில்லை அரசே..இளவரசரின் பக்தி பாராட்டுக்குரியதே..நான் தவறாக எண்ணவில்லை..இறைவனை விட மேலானவர் யாரிங்கு..? " என்றான் உதயச் சந்திரன்.


இம்முறை விசயத்தை கடவேச ஹரிவர்மரே அவனிடம் கேட்டார், " மகனே..இவர் பல்லவ தேசத்திலிருந்து வந்திருக்கிறார்..அங்கு பல்லவ பீடத்தில் அமர நமது உதவியை நாடி வந்திருக்கிறார்..உனக்கு விருப்பமெனில் , நீ அவருடன் செல்லலாம்..என்ன சொல்கிறாய்..? " என்றார் கம்பீரமாக.


உதயச் சந்திரனும் ஆவலுடன் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


தனது தந்தையையும், உதயச் சந்திரனையும் மாறிமாறிப் பார்த்த அவன் இறுதியாக உச்சரித்தான்.." நான் பல்லவ தேசத்திற்குச் செல்ல சம்மதிக்கிறேன்." என்றான் கம்பீரமாய் பல்லவ மல்லன் என்ற பெயருடைய கடவேச ஹரிவர்மரின் நான்காவது புதல்வன்.


" உதயச் சந்திரா, இறைவன் உன்னை கைவிட வில்லை..இவனை நீ அழைத்துச் செல்லலாம்.." என்றார் கம்பீரம் கலந்த குரலில்.


உதயச்சந்திரனுக்கு, "அப்பாடா ஒருவழியாக பல்லவ தேசத்திற்கு விடிவுகாலம் பிறந்து விட்டது" என்ற எண்ணம் எழுந்தது.. ஆனால் பல்லவ மல்லனால் தொடர் பிரச்சனைகள் தான் பல்லவ தேசத்திற்கு  எழப் போகிறது என்பதை அவன் அப்போது உணரவில்லை.


_ தொடரும்..


# அனுராஜ்..


குறிப்பு : புனான் தேசமென்பது புனல் நாடு என இருந்திருக்கலாம், நீரினால் சூழப்பட்ட நாடு என்பதாலேயே தமிழர் புனல் நாடு என பழந்தமிழர் அழைத்தனர். அதுவே பின் புனான் என அழைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages