26.08.20-கிளி சோதிடம் - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

26.08.20-கிளி சோதிடம்

 












Sl

எண் 

புகைப்படம்

கவிதை

1

697

அன்பாய் சொல்லும் அன்னையின் பேச்சையும் / 

ஆசையாய் நவிலும் அப்பாவின் வார்த்தைகளையும் / 

இம்மியும் காதில் வாங்கா இளையோர் / 

உண்மை உழைப்பை நம்பி வாழாமல் / 


உயர்திணையாய் பிறந்து சிந்த போதும் / 

ஒற்றைச் சொல்லையே திருப்பிச் சொல்லும் / 

பச்சைக் கிளிகள் சொல்வதைக் கேட்டு / 

உள்ளம் பதைத்தல் மகிழ்தல் முடத்தனம்...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன்,, குடந்தை...

2

773


ஆறறிவு கொண்டோன் ஐந்தரிவு பறவையிடம்

மண்டியிட்டு தன்னை  அறியச் செல்கிறான்

தனது நிலையறியா கூண்டுக் கிளியொன்று

எதிர்காலம் கணித்து சீட்டு எடுக்கிறது..


ஐந்து ரூபாய் கூலி வாங்கி

அம்பானி ஆவதற்கும் தன் வருமானம்

தெரியாமல் மரத்தடியில் தவமிருப்போன் செல்வந்தனாக

வழி சொல்லுகிறான் கிளி சோதிடன் 


எம்.எம்.நிஜாமுதீன்

3

434


சுதந்திரப் பறவையை சிறையில் அடைத்து/

எதிர்காலம் கணிக்கும் இன்றைய உலகம்/

முயற்சியை விடுக்கும் மூடத்தனம் இதுவென/

மனதிற் கொண்டால் யாவும் நலமே/


அறிவியல் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும்/

அகிலத்தில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்/

சீட்டுக் கட்டுக்குள் நாட்டம் வேண்டாம்/

நம்பிக்கையை நெஞ்சிலே விதைத்து நடைபோடுவோம்//


மீனாட்சி சுந்தரம்

4

726


அறிவில்லா மனிதன் ஆருடம் கேட்கிறான்/

ஐந்தறிவு உயிரும் ஆறுதல் உரைக்கிறது/

சீட்டைத் தேடியே வாயும் வலிக்கிறது/

எடுக்காவிட்டால் நெல்மணியும் பசிக்கு கிடைக்காதே/


சிறிய உயிரின் சிறிய பசிக்கு/

பெரிய மானிடன் படி அளக்கிறான்/

கிளி வளர்ப்பவனும் சேர்ந்துக் கொண்டு/

பானை வயிற்றை நிரப்பிக் கொள்கிறான்/


-காளிராஜ்பாலகணேஷ்

5

450


உணவைத் தேடியப்போது உணராமலே அடிமையானேன்

வெட்டிய சிறகுகளோடு பறக்கவும் முடியவில்லை!

விடுதலைக்கானப் பொழுதுகளும் இன்னும்

விடியவில்லை!

கம்பிகளை அறுக்கவும் அலகினில் பலமில்லை!


பொழுதுக்கும் உழைக்கிறேன் உழைப்பதனால் உண்கிறேன்!

ஆயினும் நம்பிக்கையுடன் எசமானை வாழவைக்கிறேன்

வந்திடும் வாடிக்கையாளருக்கு நம்பிக்கை ஊட்டுகிறேன்!

தன்னம்பிக்கையின் அடையாளத்தை என்மூலம் காட்டுகிறேன்!


ரேணுகாசுந்தரம்

6

463


பச்சை நிறந்தில் ஒரு கிளி /

வானில் பறந்து மகிழ்ந்திடக் கண்டோம்! /

வேடன் வலையில் அகப்பட்டு ஒரு /

கூண்டுச் சிறையில் அடை பட்டது.../


அடுக்கிய கட்டில் எடுத்துத் தந்தால்/

நெல்மணி அருகில்  வந்திடக் கிடைக்கும்./

தலையை ஆட்டி தந்திடும் அழகு /

அடுத்தவர் வாழ்வின் வழி சொல்லும்./


அரவிந்தன் தஞ்சை

7

614


உழைப்பை நம்பாத மானிடர் உண்டு/

வேலைக்கு போகாமல் வெட்டியாய் பலர்/

மனைவியின் நகைகளை அடமானம் வைத்து/

வரும் பணத்தில் சொகுசு வாழ்க்கை/


ஊதாரித்தனமான செலவு சேமிப்பு இல்லை/

பார்ப்பர் பலிக்காத கிளி சோதிடம்/

ஒரு பறவை போக்குமா வறுமையை/

பலன் சொல்லும் சோதிடரே வறுமையில்/


விஜயலட்சுமி

8

238


தன்னம்பிக்கை தளர்ந்ததால் பொய்நம்பிக்கை  தாக்கம்../

கூண்டுக்குள் அடைத்துவிட்டு எதிர்காலத்தை அறிகின்றனர்../

என்வாழ்க்கை எதிர்காலமோ பூனையின் விருப்பத்தில்../

கொடுக்கும் கூலியோ கையளவு தானியம்.../


ஊதியம் பெற்றுதான் ஊழியம் செய்கிறேன்../

கைவிரல் அசைவினில் சீட்டினைத் தேர்விட்டு.../

படமதின் பார்வையால் எதிர்காலம் ஏற்கப்படும்../

நம்பிக்கை செய்தியால் நகர்ந்திடுவர் மகிழ்வினில்..///


#இளந்தை சேது

9

261


முன்னொரு காலத்தில் சாலைகளின் ஓரத்தில்

ஆங்காங்கே அமர்ந்தபடி கிளி சோதிடம்

கூறியே தங்களது வயிற்றை நிரப்பினரே

ஐந்தறிவின் துணயுடன் ஆறறிவின் ஏமாற்றலே


ஏமாந்த அறிவிலிகள் அன்றும் உண்டு

உடலின் உழைப்பை நம்பாமல்சோதிடத்தை

நம்பிடும் மூடர்களின் செயல் சரியோ

உழைப்பை மட்டுமே நம்பிடுவோமே உயர்ந்திடுவோமே !


~ வள்ளல் இராமமூர்த்தி

10

710


1.கடவுளின் விளையாட்டில் பிறந்து வந்தோம்/

2.இரவு போய் பகல் வரும்/

3.இலையுதிர் காலம் வசந்தமாக மாறும்/

4.எமக்கு மட்டும் வாழ்க்கை மாறாதா?/


5.இன்பமும் துன்பமும் மாறி மாறியே/

6.ஒவ்வொருவர் வாழ்வும் இறைவனின் கையிலே/

7.நடுவிலே நமக்கேன் கிளி சோதிடம்/

8.நடப்பவை யாவுமே நல்லதாகவே நினைப்போம்/


அம்பிகா ஸ்ரீகுமார்

11

470


பச்சைக்கிளியின்  பண்பை பணமாக்கும் தொழில்

அடிபணிவதால்  அன்பை அடிமையாக்கும் ஆணவம் 

தன்னிலையே  அறியாதவன் பிறர்நிலையை அறிவிக்கிறான்

மூடத்தனம் என்றாலும் கிளிசோதிடம் பார்ப்பதால்


கூண்டிலிருந்து வெளிவந்து சுதந்திரக்காற்றை  சுவாசித்து

நெல்மணியை  உண்டு பேசிச்செல்லும் கிளிக்காகவே

கிளிசோதிடம்  இன்றும் நிலைத்து நிற்கிறது.


நா.சுகுமாறன்

12

259


கூண்டில் அடைத்து வருமானம் பார்ப்பார்.../

எடுத்துப் போடும் ஏட்டில் படிப்பார்.../

பலருக்கும் சொன்னதையே மாவாய் அரைப்பார்.../

தோசம் தீவினைகள் தீர்க்க வலியுறுத்துவார்.../


நம்பி இணங்குவோர் பணத்தை இழப்பர்.../

உணர்ந்தவர் உழைப்பில் கவனம் கொள்வார்.../

சோதிடர் தன் விதி அறியார்.../

இறைவனின் கணிப்பு வெல்வார் யார்...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

13

770


உழைக்காமல் ஊருக்கு  உபதேசம் செய்து 

தினம் தினம் பணம்பார்க்கும் கிளிராசா

பொய்பேசி வாழும்வாழ்க்கை  என்னவோ

கூண்டுகிளி உன்னுடன் தான் கற்றுக்கொன்டேன்


எல்லோருக்கும் எதிர்காலம் சொல்லும் நான்

ஒருநெல்லுக்கு ஓராயிரம் பொய் சொல்லுகிறேன்

வயிற்றுபசிப் போக்க எத்தனை எத்தனை 

இன்னல்கள் தினம்  விடுதலைதான் கிடைக்கவில்லை

எல்லோருக்கும் சோடிகிளி நான்  மட்டும் 

தனிக்கிளி கூண்டுக்குள்  வாழும் சோககிளி


ஸ்ரீதர் லெட்சுமணன்

14

777


சிறைக் கைதியாய் சிக்கி தவிக்கும்

கிளியிடம் எதிர்காலத்தை ஒப்படைக்கின்றான் மனிதன்

கிளியைச் சொல்லி ஏமாற்றும் கூட்டம்...

செல்வந்தனாக நினைக்கும் கொள்ளைக்கூட்டம்


பொய்களை நிரப்பி மனதைக் குழப்பி

மரணத்தையும் எட்ட வைக்கும் சோதிடர்

பணம் இழந்து உயிரும் பிரிய

வருந்தி பயன் என்ன இருக்கின்றதென்று!...


~~~கவிதை காளிதாஸ்

15

725


வாழ்க்கை ஒரு வித்தக சிகரம்/

இதில் ஏறி உச்சம் தொட/

மக்களுக்கு ஒரு இனிய வசந்தமாக/

கிளி வைத்து எதிர்கால ஆருடம்/


இதனைக் கேட்டே பல கிராமங்களில்/

மக்கள் தங்கள் வாழ்க்கையைப்  பாதுகாப்பாக/

அசைக்க முடியாத  நம்பிக்கையோடு நாளும்/

அதன்படி மகிழ்ந்து வாழ்ந்தும் வருகிறார்கள்/


கவிஞர்.மரு.கி.ம.எழிலன்

16

763


பறந்து திரிந்த பச்சைக்   கிளியை /

ஒருவேளை உணவிற்காக கூண்டில் அடைத்தே/

நெல் மணி ஒன்றை கொடுத்து /

சொல் என்று கேட்கும் சோதிடம் /


தத்தைச் சொல்லும் வித்தை எல்லாம் /

இந்தத் தரணியில் பலிப்பது உண்டோ /

தன்னம்பிக்கைக்   கொண்டு தலை நிமிர்ந்தால்/

வெற்றி உன் கையில் அன்றோ /


பிரேமா பூ

17

482


நம்பிக்கை கொடுத்து உதவிடும் கிளி 

சுதந்திரமின்றி கூண்டுக்குள் சிக்கி தவிக்கித்து !

எசமானனுக்கு பணமும் நாளும் கிடைக்கிறது!

உழைப்பை நம்பவும் மறுக்கிறது மனமும்!


சோதிடத்தை நம்பி வெம்புகிறது உள்ளமும் !

இந்த நிலை மாறிடவும் வேண்டுமே!

சோம்பல் இன்றி உழைத்து உயர்ந்திடு !

குடும்பத்தை காத்து முன்னேற்றம் தந்திடு 


தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

18

771


காட்டுக் கிளியொன்றைக் கூண்டினிலே அடைத்து/

சோதிடம் சொல்வதாக எந்நாளும் நடித்து/

வீதியில் திரிந்திடும் கள்வர்க் கூட்டம்/ 

விதியை நம்பிடுவோர் கொண்டிடுவார் நாட்டம்/


வாழ வழியின்றி சாலையிலே அலைவார்/

பொய்யான வாக்குறுதியைத் தந்துத் திரிவார்/

அறியாமையில் ஊறிடுவோர்   பாடிடுவார் போற்றியே/

அறிவினிலே தெளிவுற்றால் எந்நாளும் வெற்றியே/


மா.சு.திருக்குமரன்.                                                                                                                                                                                                        

19

201


உழைப்பை நம்பாத  சிலரின் எதிர்பார்ப்பு /

எதற்கும் பார்க்கலாம் உண்மையா பொய்யா /

தன்னம்பிக்கை இழந்தவர் நாடிடும் சோதிடம்/

சாத்திரம் பார்த்தே காலத்தைக் கழிப்பார்/


வயிற்றுப் பிழைப்புக்கு வழிகாட்டும் கிளிசோதிடம் /

வாயில்லாப் பிராணியை வதைப்பதே தொழிலாய் /

இரவுபகல் மாறுதலே மனிதரின் வாழ்க்கை /

நல்லதை நினைத்து நீதியாய் வாழ்வோம் //


புவனா சற்குணம்   கனடா

20

618


அழகிய குடும்பத்தில்     அங்கமாய் இருந்தேன்/

இரை தேடுகையில்     மாட்டினேன் மனிதனிடம்/

சிறகை அறுத்துச்     சிறை வைத்தான்/

சுற்றமும் இன்றிச்     சுதந்திரமும் இழந்தேன்/


உழைக்கத் தெரியா     சோம்பல் மனிதன்/

என்னை வைத்துப்      பிழைப்பு நடத்துறான்/

வயிற்றுப் பசியைப்     போக்க நானும்/

மனிதன் பேச்சை    மறுக்காமல் செய்கிறேன்/


ஔவை.

21

348


இரவின் கண்களுக்கு ஒளிவருவது புரியாது //

சுற்றும் கோள்களுக்கும் பொருளிருப்பது தெரியாது //

கற்றும் வினாக்களுக்கு விடையளிப்பது முடியாது //

கிளியின் சோதிடம் எதிரிலிருப்பதை எழுதாது //


மனதின் பக்குவத்திற்கு ஏங்குவதும் தணியாது //

காலத்தின் பதிலுக்கு காத்திருப்பது முடியாது //

பறவையின் பசிக்கு சிறுபருக்கைத் தானியமே //

எதிர்காலப் பலனுக்குத் திட்டமிட்டால் போதுமே //


உடுமலை ராமர்

22

373


வீதியோர வியாபாரம் தினமும் நடந்திட

வறுமையில் ஏழை வயிறும் நிறைந்திட

எதிர் காலத்தை கணிக்கும் இடம்

கிளி சோதிடம் நம்பினர் சிலரே


உண்மை சொல்லும் உயரே தூக்கிடும்

கற்பனை சிறகிலே பறந்திடும் மனிதர்

கிளியின் வாயில் சாதகம் என்றே

வீணாகத் திரிவர் இன்றும் நம்பினர்!!


ஜயந்தினி வாகீசன் 

23

616


மனிதனுக்கும் பறவைக்குமான இடையிலான போராட்டம்

தன்னம்பிக்கை இழந்து எதிர்காலம் நோக்கல்

வயிற்றுப் பசிக்கான உயர் திண்டாட்டம்

சோதிடன் பணத்திற்கும் கிளி நெல்லிற்கும்


உயிரும் உணர்வும் இல்லாத ஆருடம்

மூட நம்பிக்கை இன்னமும் வாழ்கிறதா

உழைப்பிற்கும் திறமைக்கும் அர்த்தம் இல்லையா

போதும் சுதந்திர வானில் பறக்கட்டும்


கா.கேமலாரூபினி.

24

240


கூண்டில் அடைக்கப்பட்ட கிளிகள் சொன்ன//

கதைகள் மகிழ்ந்து சோதிடம் பார்ப்பர்//

ஒரு நெல்மணிக்காக சிறையில் வாசம்//

எசமானி விசுவாசம் சீட்டு எடுக்கும்//


பறக்கும் பறவைகள் ஏக்கம் கொள்ளும்//

வயிற்று பிழைப்புக்காக ஏமாற்றும் செயல்//

நம்பிக்கை வைத்து பணத்தை இழப்பர்//

உண்மை  வாழ்க்கை உழைத்தால் சிறப்பே//


உமா பாலகிருஷ்ணன்பெங்களூர் 🏵️

25

462


வாழ்க்கையில் சலித்தவன் நாடும் இடம்/

வக்கற்றவர்கள் வாடிக்கையாக இங்கே செல்வர்/

சோம்பேறி மனிதன் வதைக்கிறான் பறவையை/

சோதிடம் பலித்தால் கிளி நல்லது/


பலிக்காட்டால் கிளி பலியாகும் கவனம்/

சோதிடத்தை நம்பாமல் காரியத்தில் இறங்கு/

உழைப்பை உனது வாழ்வில்மூலதனமாக்கு/

உயர்வாய் உனது வாழ்வில் உல்லாசமாய்


தயா

26

204


அடுத்தவரின் எதிர்காலம் எத்தியே  வைத்து//

அடுக்கிய சீட்டுகளில் ஆராயும் கிளியே//

சிறையில் நீயிருந்து விடுதலை பெற்றிடும்//

திருநாளை உன்னாலே அறிந்திட முடியாதோ//


நவீனத்தில் உன்னையும் நம்புவது மடமையே//

ஊக்கத்தைத் தொலைத்து அதிட்டத்தை எண்ணி//

சோம்பியே கிடந்து வாழ்வதேன் தம்பியே//

ஆறறிவும் மண்டியிடுவதோ ஐந்தறிவின் காலடியில்//


ஆஸாத் கமால்.

27

756


சொன்னதை சொல்லும் கிள்ளை நீயா?//1

சோதிடம் பயின்ற கிளியும் நீதானா?//2

என்னதான் எப்படி சொன்னாலும்//3

உன்னை போல சொல்ல முடியுதில்லே//


வகுப்பறைகக்கு வந்து பார் கிளியே//

வாசம் இழந்து வருகிறதே மொழியே//

மொழி பாடமா? கிளி பாடமா?


கன்னிமுத்து வெல்லபதியான்

28

317


கம்பி பெட்டியில் கிளியை அடைத்து

நெல்லின் மணியை லஞ்சமாகக் கொடுத்து

பழக்கம் செய்து இறகுகளை அறுத்து

பயணம் செய்யும் பச்சை கிளிகள்


அடுக்கி வைத்தக்  காகித அட்டையை

சொடுக்கவும் புரிந்து  எடுக்கும் நுட்பத்தை

கற்றுக் கொடுத்துக்  காசு பார்க்கும்

கலைஞர் வித்தையைக் கேட்கும் உலகம்..


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

29

386


கிளியின் சோதிடம் நம்பும் மக்கள்/

நாட்டில் இன்னும் நிறையவே உண்டு/

சொன்னதைச் சொல்லும் பிள்ளைக் கிளியைச்/

சொல்லிக் கொடுத்ததைச் செய்யப் பழக்கிக்/


காகிதம் பொறுக்கிக் கதைகள் படித்தே/

பிழைக்கும் பிழைப்பில் உண்மையே இல்லை/

மூட நம்பிக்கையே முதலாய் இவர்க்கு/

ஆகும் அதனால் அதனைக் கழுவு/.


தென்கரை தாயுமானவன்.

30

747


விடுதலைத் தேடும்      அடிமைக் குருவியே//

ஆருடம் சொல்லும்       அடுத்தவர் விடியலுக்கே//

வளர்ப்பவர் வறுமை     வரவில் மறையுமே// 

கொடுப்பவர் வழிகள்           குறிகளில் குறையுமே//


ஆசையும் விரல்களின்          ஆணையைப் பெற்றே//

அடுக்கியச் சீட்டில்         அழகாய்த் தேடுமே//

கொடுத்திடும் நெல்லுக்கு       தந்திடும் சீட்டே//

வாழ்க்கை நிலையினை              அறிந்திட உதவுமே//


ஜெ.சகமணியன், வாழப்பாடி

31

707


பறவைக்கு அழகு பறந்து திரிவது/

பார்வைக்கு அழகு பறக்கையில் காண்பது/

சிறகை ஒடித்து சிறையில் அடைத்து/

சில்லறைத் தேற்றும் சிறுமை மனிதன்/


தன்னலம் கொண்டு தரணியைக் கெடுத்தான்/

மற்றோர் உயிரை மதியால் கெடுத்தான்/

சோதிடம் சொல்லும் கிளியின் வாழ்வில்/

சொர்க்கம் கிட்டும் நாளும் வருமோ?/


✍️பா.ச.கண்ணன்

32

722


இரை தேடிடாமல் சிறைப்பட்ட கிளி/1

சுற்றித் திரிந்து கொத்தித் தின்னாமல்/2

ஒற்றை நெல்மணிக்கு அடைப்பட்ட பட்சி/3

கோவைப்பழம் கொரித்திட செவ்வாய் மலர்ந்திட/4


எட்டுத் திக்கும் சுதந்திரமாக சென்றிடு/5

சிக்கிக் கொண்ட  சிறையை அகற்றிடு/6

தன் வாழ்வின்  நிலையறியா பறவை/7

மானிடனின் வாழ்வை கணிக்கிறது சோதிடமாக/8


சுஜாதா அருணாச்சலம்

33

636


பச்சைக் கிளியே பார்த்துச் சொல்லு!/

இச்சைப் படியே யோசித்துச் சொல்லு!/

வீட்டுக்குள் முடங்கிய காலம் போதும்!/

கட்டுக்குள் எப்போது கொரோனா வரும்?/


கபசுர குடிநீர் குடித்தது போதும்!/

கவச காலம் எப்போது மாறும்?/

கொரோனா எப்போது ஒழியும்னு சொல்லு!/

கொடிய  நாளையும் சீக்கிரம் தள்ளு!.


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

34

207


சுதந்திரமாய் பறந்த பச்சைக் கிளி/

சோதிடக் காரனின் கூண்டுக்குள் அடிமையாகும்/

குறிகேட்க வருவோரைக் கூர்ந்து நோக்கும்/

எடுக்கும் சீட்டே எதிர்காலமாய் எண்ணி/


நம்பிக்கை மனதோடு நடைபோடும் மனிதர்கள்/

ஆசைக் கனவுகளோடு சோதிடம் கேட்பார்கள்/

சொல்லும் சோதிடம் மனதிற்கு ஆறுதலாகும்/

கூண்டுக் கிளி சோறுபோடும் சோதிடக்காரனுக்கு/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

35

203


கூண்டுக் கிளியின் விடுதலை பற்றி 

நினைக்காத நெஞ்சம் தன்னை சுற்றி 

கவலைக் கொள்ளும் வாழ்வின் வெற்றி 

சீட்டை எடுக்கக்  கொடுக்கும் சுதந்திரம் 


தற்காலிகமாய் பறவைக்குக்  கிடைக்கும் ஆனந்தம் 

மனிதர் எதிர்காலம் உரைக்கும் சீட்டு 

நம்பிக்கை கொடுக்கும் பயணிக்கும் பாதையில் 

ஏழை ஒருவன் வயிற்றிக்கும் உணவளிக்கும்  


-பாக்கியலட்சுமி சத்தியநாராயணன்


36

562


இயற்கையின் படைப்பில் உயர்ந்தவன் நீயே/

விழிப்புணர்வோடு     உண்மையைத் தேடினால் விடிவு/

ஒரு பறவையா வாழ்வை தீர்மானிப்பது/

உன்னில் நம்பிக்கையே உன்னை உயர்த்திடும்/


உழைப்பே வாழ்வில் மாற்றத்தை விளைத்திடும்/

நேர்வழிப் பாதையே நிம்மதி அளித்திடும்/

ஆறறிவுக் கொண்டே அனைத்தையும் ஆராய்ந்திடு/

கானல் நீரை பருகிட முடியுமா/


பா.பத்மநாபன்

37

254


விண்ணில் சிறகடிக்கும் சோலைக் கிளியே/

மண்ணில் சிறகொடிந்த கூண்டுக் கிளியே/

இணைபிரிந்து வாழ்வதே கொடுமையென அறியாக்கிளியே

ஒரு நெல்லுக்காக வாழ்விழந்த கிளியே/


வருவோருக்கு எல்லாம்  சோதிதிடம் பலிக்குமா/

அடுக்கிவைத்த சீட்டுக்கட்டால் சிக்கல்கள் தீருமா/

என்ன குற்றத்திற்கு கூண்டில் அடைபட்டாய்/மனிதனின்  பிழைப்புக்கு ஆயள்தண்டனை உனக்கா/


கி.மா.கனகராசன். சூலூர்.

38

668


கூண்டுக்குள் அடைப்பட்ட பச்சைக் கிளியே/

அடிமை வாழ்வை உடைத்து எறிந்திட/

அறியாத நீயோ பிறரின் எதிர்க்காலமதை/

கணித்து கூறிடும் அறிஞராகி விடுகிறாய்/


வயிற்றுப் பசியை ஆற்றிட விழையும்/

ஐந்தறிவு உயிரான உன்னை ஆறறிவு/

கொண்ட கொடூர மனமுடைய மனிதர்களின்/

மூடத்தனமதை கண்டு மனம் பொறுக்கலையே/


ஏஞ்சல்சோபிதா

39

247


பறந்து திரிந்து வாழ்ந்திடும் பச்சைக்கிளி /

கூண்டில் அடைபட்டு சிக்கித் தவிக்குது /

கள்ளமுள்ள மனிதனிடம் பழகியதால் மனிதன் /

பேச்சைக் கேக்குது சொன்னபடியே நடக்குது/


சொன்ன சொல்லைக் கேட்குது பேசச்/

சொன்னால் பேசுது சீட்டை எடுக்கச்/

சொன்னால் எடுக்குது சீட்டை எடுத்துவிட்டு /

கூண்டுக்குள் போய் அமர்ந்து கொள்கிறது / 


த.காமராசு. தாராசுரம் கும்பகோணம்

40

778


சோதிடம் பார்ப்பது இவன் தொழிலு//1

அதை அலகால் எடுப்பது இயல்பு//2

நெல் மணிக்காக இந்த நிகழ்வு//3

தன்னம்பிக்கை சொல்லே இவன் சிறப்பு//4


கூண்டுக் கிளி ஓர் உறவு//5

அரைச் சான் வயிற்றின் வரவு//6

இருவருக்கும் தெருவோரம் தான் பிழைப்பு//7

பசி ஆற்றிடவே இந்த பொழப்பு//8


கவி அழகன்

41

483


பகுத்தறிவு மானிடத்தை பைங்கிளிக் காப்பாற்ற/1

சொகுசாக மரத்தடியில் சோம்பேறிப் பிழைக்கின்றான் /2

நகைப்புத்தான் இதைநம்பி நாலுபேர் உழைக்காமல்/3

மிகுசெல்வர் ஆகிடவே மேதினியில் துடிக்கிறார்/ 4



மதிகெட்ட மக்களே மரத்தடி கிளிசோதிடம்/5

எதிர்காலம் கூறிடுமா ஏழ்மை விலகிடுமா/6

தேடப்பா நல்வழியை தெம்பாக உழைத்தாலே/7

ஓடிவிடும் வறுமை உயர்வாய் பூமியில்/8


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

42

287


கூட்டமாய்த் திரிந்ததைக் கூண்டில் அடைத்தான்

கொஞ்சம் சிறகையும் கத்திரித்து விட்டான்

சோம்பேறி மனிதன் சோதிடன் ஆனான்

கூட்டுக் கிளியை கூட்டாளி ஆக்கினான்


ஏமாளி மனிதர்கள் எத்தனையோ ஊரிலே

ஏழு பேர்கள் கிடைத்தாலே  சோதிடன் பிழைப்பான்

சோதிடனுக்கு யார் சொல்வது சோம்பேறியென

கிளியால் பிழைப்பது  சரியான பிழைப்பில்லை 


தண்டபாணி

43

746


மதியால் மதியடைந்து விதிக்கு  விலைபோகாது/

வானைப் பிளந்து வழி  அமைத்து/

விண்ணில் விளையாடும் விஞ்ஞான  உலகில்/

விந்தைகள் புரிந்து வியக்க வைத்தாலும்/


அடுத்தது தெரியாத ஐயறிவுப்  பறவையே/

அழகிய அஞ்சுகமே அறிவில் இளயவளே/

எதிர்காலம் என்னவென்று கணித்துச்  சொல்லென்று/

உன்னிடம்  மன்றாடும் உறவுகளும் உள்ளனரே/


---  மௌஜீத் ஏ ஹசன்---

44

613


சொன்னதை சொல்லும் கிளிப்  பிள்ளை/

ஒற்றை  நெல்மணிக்காக சிறை   வாசம்/

பச்சைக்கிளி    வைத்து பிழைக்கும்   ஜடம்/

நம்பிக்கை   இல்லாதவர் நாடும்  இடம்./


எதுவரை  தொடரும் உன்   பயணம்/ 

விதியை  நினைத்து வாழும்  ஏமாளி/

ஒவ்வொரு   சீட்டை அழகால்   தேய்த்துருகும்/

பச்சியின்  சாபம் வீண் போகாது/


ஜெயாசந்திரமோகன்

45

717


வாழ்வில் வசந்தம் வந்து சேருமா/

வந்த துன்பம் தொலைந்தே ஓடுமா/

குடும்பச் சுமைகள் குறைந்து போகுமா/

சொந்தங்கள் யாவும் சுவையாய் மாறுமா/


என்றே நம்பி கூண்டுக் கிளியை/

சோதிடம் கேட்கும் சோம்பேறிக் கூட்டம்/

சொன்னதைத் தானே சொல்லும் கிளி/

சோதிடம் எப்படிக் கூறும் வழி/


கந்தசாமி நடேசன்

46

258


சுதந்திரமாய்ப் பறந்து வாழ்ந்த பச்சைக்கிளி/

சூழ்ச்சியால் அடைபட்டது சின்னக் கூண்டுக்குள்ளே/

சிறகுகள் ஒடிக்கப்பட்டு, குரல் மாற்றப்பட்டு/

சோதிடனின் விரலசைவுக்கு சீட்டு எடுக்கிறது/


வருத்தப்படும் மனிதர்களுக்கு வருங்காலம் உரைக்கிறது/

கல்யாணம், சொந்தவீடு கட்டுவது எப்போதென/

தன்வாழ்வு கூண்டோடு எனத் தெரியாமலே/

எது எப்படியோ சோதிடன் பிழைக்கிறான்!


                 தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26.          

47

583


ஆறறிவு ஜீவனுனது அதிட்டத்தை அறிந்துவிட //

ஐந்தறிவு பறவையதை அடைத்து வைத்து  //

அறிந்துவிடும் சேதியென்ன அறிவில்லா மனிதா //

பாவமந்த சீவனது பழிகளுன்னைச் சேர்ந்துவிடும் //


உண்ணுமந்த நெல்லிற்காக சுதந்திரத்தை இழந்துவிட்டு //

சாபத்தோடு எடுத்துத்தரும் சீட்டிலென்ன தெரிந்துவிடும் //

வாயில்லாப் பிராணியதை வாழ்வளித்து வெளியேவிடு //

நல்லகாலம் உனக்குவரும் சோதிடமேதும் தேவையில்லை/


ஜெயசக்தி பிரபாகரன்.




போட்டி நிறைவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages