27.08.20-ரேவா: 13- ஆறுதலைத் தேடிய உள்ளம் - தென்குமரிக் கவிதைக்களம்

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

27.08.20-ரேவா: 13- ஆறுதலைத் தேடிய உள்ளம்



27.08.20


ரேவா_


ஆறுதலைத்_தேடிய_உள்ளம்_13


காம்புஜ தேசத்து இளவரசர்களில் வயதில் இளையவனான பல்லவ மல்லன் , உதயச் சந்திரனோடு தமிழகம் வருவதற்கும், பல்லவ அரச பீடத்தை ஏற்பதற்கும் ஒப்புதல் வழங்கியதனால் உதயச் சந்திரன் ஓரளவு நிம்மதி அடைந்தான். சித்ரமாயனை ஆட்சியிலிருந்து அப்புறப் படுத்தி விட்டு பல்லவ மல்லனை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விடலாம் என மனதிற்குள் மகிழவும் செய்தான்.


ஒரு வார காலத்தில் இருவரும் காம்புஜத்தை விட்டு கிளம்ப நாள் குறிக்கப் பட்டது.. 


மறுநாள் பியூஷா வரக்கூறிய நேரத்திற்கு உதயச் சந்திரன் அவளைச் சந்திக்கச் சென்றான். உதயச் சந்திரனுக்காகவே காத்திருந்த அவளும் , அவனை அழைத்துக் கொண்டு அவளது படகினில்  ஏறினாள். படகு டோன்லே சாப் நதியின் கிளை கால்வாய் ஒன்றில் மெல்ல நகர்ந்தது. சிறிது நேரம் இருவருமே ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்க, அந்த அமைதியை அவனே மெல்லக்  கலைக்க முற்பட்டு " பியூஷா.." என மெள்ள அழைத்தான்.


" ம்.." 


" ஏன் அமைதியாக வருகிறாய்..ஏதாவது பேசலாம் அல்லவா..? படகின் துடுப்பினை வலிக்கும் ஓசை தான் பிரதானமாக கேட்கிறது..இந்த அடர்ந்த தோப்புகளின் பட்சிகளின் ஒலியோடு இணைந்து.."


" தவறாக எண்ண வேண்டாம், உங்களைச் சந்திப்பதற்கு சற்று நேரத்திற்கு முன் வரை, உங்களிடம் நிறைய பேச வேண்டும் என எண்ணுவேன்..ஆனால் உங்களைச் சந்தித்ததும்  என்ன பேசுவது எனத் தெரியாமல் மலைத்து நின்று விடுகிறேன்.." என்றாள் வெட்கத்துடன் மெள்ளத்  தலைகுனிந்தபடி.


அவளது மனநிலையில் தான் உதயச்சந்திரனும் இருந்தான் என்பதனால், அவனிடமிருந்து " உம்.." என்ற ஒலி மட்டுமே எழுந்தது..பின்..


கண்ணோடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.


என்ற குறளினைக் கூறியவன்..."நமது நிலையை தான் எங்களது தேசத்துப் புலவர் ஒருவர் இவ்வாறு பாடி வைத்துள்ளார்.." என்றான்.


" உண்மை தான்..கவிஞர்களின் கூற்று எப்போதும் பொய்த்துப் போவதில்லை.."என்றாள் பியூஷா.


சிறிது நேர மௌனத்திற்குப் பின், உன்னிடம் ஒன்றைக்  கேட்க எண்ணினேன்.." அந்தப் பெரியவர் உனது தந்தையா..? "


" ஆம்.."


" உனக்கும் அவருக்குமான வயதில் நிறைய ஏற்றத்தாழ்வு தென்படுகிறதே..? "


"அதெல்லாம் எனக்குத் தெரியாது..விபரமறிந்த நாள் முதல் நான் அவரைத் தான் தந்தை என அழைத்து வருகிறேன். திடீரென அதில் ஏன் உங்களுக்குச் சந்தேகம்..? "


" எனது மனது ஒப்புக் கொள்ள மறுக்கிறது..! "


" எதை...? "


" உங்கள் இருவருக்கும் உள்ள வயதின் வேறுபாடு ஒரு காரணம், அது மட்டுமல்லாது ஏனோ தெரியவில்லை , உனது தந்தைக்குரிய அன்பினை அவர் உன்னிடம் காண்பித்து நடக்கவில்லையோ..?  எனவும் எண்ணுகிறேன்..நான் அவரிடம் உன் மீதுள்ள பாசத்தைக் காணவில்லை.."


" உங்களது சந்தேகம் நியாயமானது தான். அவர் என்னிடம் எப்போதும் அன்பாக பேசுவதே இல்லை..எப்போதும் கோபத்துடன் தான் பேசுவார்..அவரது பல செயல்களை நான் கண்டிப்பதனால் ஏற்படும் கோபம் என எண்ணிக் கொள்வேன்.ஆனால் என்னால் தான் அவரது வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்பட்டதாகச்  சொல்லி ஒரு சமயம் மகிழ்வார். இதுவரை அவரை தந்தை என்றே  அழைத்து வந்திருக்கிறேன்.. அந்த உறவில் சந்தேகம் கொள்ள இதுவரை எந்த சந்தர்ப்பமும் இல்லை.."


" உனது தாய்..? "


" இளவயதிலேயே மறைந்து விட்டதாகச் சொல்லுவார்."


தாயற்ற உன்னிடம் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி அவர் அறிந்திருக்கவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.. "


" ம்..இருக்கலாம்..ஆனால் நான் அதை பெரிது படுத்துவதில்லை..ம்..சரி..நானும் உங்களிடம் ஒன்றை கேட்க வேண்டும்..?"


" கேள்..சொல்கிறேன்.."


" தங்களது பெயர், பணி எதுவும் எனக்குத் தெரியாது..தங்களின் தேசம் பாரதத்தில் உள்ள தமிழகம் என்பதும் பல்லவ தேசம் என்பது மட்டும் அறிவேன்..அதுவும் நீங்கள் சொல்லப் போய் தான்..இல்லையென்றால்..."


"இல்லையென்றால்  அதுவும் உனக்குத் தெரியாது..பரவாயில்லை, இப்போது தெரிந்து கொள்..எனது பெயர் உதயச்சந்திரன், பல்லவ தேசத்தின் படைத்தளபதி, எங்கள் பல்லவ தேசத்திற்கான மன்னனைத் தேடி இங்கு வந்திருக்கிறேன்..இது நீ கேட்காமலேயே உனக்கு நான் வழங்கிய தகவல்..போதுமா...? இன்னும் வேறேனும் தெரிந்து கொள்ள வேண்டுமா..?"


"  போதும்..தேவையெனில் கேட்கிறேன்.." என்றபடி நகைத்தாள்.


" இன்னும் ஒரு வார காலத்தில் நான் தமிழகம் செல்லவிருக்கிறேன்..நீயும் என்னுடன் வர இயலுமா..? "


" நானா..? "


" ஆம்.."


" தந்தையிடம் கேட்டுச் சொல்கிறேன்.. அவரே என்னை பாரத தேசம் அனுப்பப் போகிறேன் என்பார்..எதற்காகச் சொல்கிறார் எனத் தெரியாது. எனவே அவரது அனுமதியைப் பெறுவது எனக்கு எளிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.


இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டே, படகில் குடிசை வீடிருந்த தோப்பினை நெருங்கி விட, உதயச் சந்திரனை அழைத்துக் கொண்டு, குடிசை வீடு இருந்த திசையை நோக்கி நடந்தாள்.


குடிசைக்குள் நுழைந்த இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது..குறுவாள் ஒன்று  தோளில் பாய்ந்தவாறு இருக்க, பலமாய் முனகிக் கொண்டிருந்தான் முதியவன்.


சட்டென அவனை நெருங்கிய உதயச்சந்திரன், பாய்ந்திருந்த குறுவாளை அவனது தோளில் இருந்து அகற்றியவனாய், பீறிட்டு எழுந்த குருதியை ஒரு துணியைக் கொண்டு துடைத்து சுத்தம் செய்ததோடு, காயத்திற்கு ஒரு பச்சிலைச் சாறினைப் பிழிந்து கட்டி, துணியால் பலத்த கட்டினைப் போட்டான்.


" ஐயா, தங்களுக்கு இந்த காயம் எப்படி ஏற்பட்டது..? " என்றான் அனுதாபம் தொனித்த குரலில்.


" இங்கு வந்து கொண்டிருந்தேன், எவனோ என் மீது குறுவாளை எறிந்து விட்டு ஓடி விட்டான்.." என்ற முதியவர் திணறியபடியே, " ஐயா தாங்கள் யார்..?"


" நான் பல்லவ தேசத்து படைத்தலைவன். உதயச்சந்திரன்.."


" கேள்விப் பட்டிருக்கிறேன்..தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.."


" நல்லது ஐயா..எனக்கும் தங்களை இங்கு சந்தித்ததில் மகிழ்ச்சியே.."


இடையில் புகுந்த பியூஷா..


" பொய்..இவர் எங்காவது எதையாவது திருடிக் கொண்டு வந்திருப்பார், அதனால் தான் துரத்தியவர்கள் இவர் மீது குறுவாளை எறிந்திருக்கிறார்கள்..

காரணம்  இல்லாமல் எவராவது குறுவாளை வீசுவார்களா..? எத்தனை முறைக் கூறினாலும், இவர் இந்த இழித் தொழிலை நிறுத்த மறுக்கிறார்.." என்றாள் கோபமாக பியூஷா.


" இல்லை..பியூஷா.." என்றார் முனகியபடி முதியவர்.


" ஐயா..தங்களை இங்கு சந்தித்தது நல்லதாக போயிற்று..நான் இன்னும் சில தினங்களில் பாரத தேசம் செல்லவிருக்கிறேன் , நான் செல்லும் போது பியூஷாவையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன்..அதற்கு தங்களது அனுமதி தேவை.." என்றான் உதயச்சந்திரன்.


" ம்..ம்..நானும் அவளை பாரத தேசம் அழைத்துச் செல்லத் தான் எத்தனிக்கிறேன்..அவளது வாழ்க்கை அங்கு சென்றால் தான் சிறப்படையும்..தாங்கள் செல்லும் போது அவளையும் அழைத்துச் செல்லுங்கள்..நான் மறுப்பேதும் கூற விரும்பவில்லை.." என்றான் முதியவன்.


முதியவனிடம் அவனுக்கு எழும் சந்தேகத்தை கேட்டு விடலாமா, என ஒரு கணம் உதயச்சந்திரனது மனதி்ல் ஒரு எண்ணம் எழுந்தது..ஆனால் அதற்கானச் சூழல் இப்போது இல்லை என நினைத்தவனாய் , அவனை நன்கு ஓய்வெடுக்கும் படி பணித்த உதயச்சந்திரன், பியூஷாவை அழைத்துக் கொண்டு குடிசையில் இருந்து வெளியேறினான்.


மாலைக் கதிரவன் மெல்ல மேற்கு வானில் இறங்கிக் கொண்டிருந்தான். டோன்லே சாப் நதியின் நீர் பொன்னிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது. அடர்ந்த தோப்பின் நிழலும், சலசலத்து ஓடும் நீரின் சப்தமும், உதயச் சந்திரனை அங்கேயே தேக்கி நிறுத்தியது..ஓங்கி வளர்ந்திருந்த மரநிழல் ஒன்றில் அமர்ந்தவனாய், பியூஷாவையும் கையைப் பிடித்து இழுத்து அமர்த்தினான்.


அழகிய நெளிந்த கூந்தல் காற்றில் ஆடி அவ்வப்போது அவளது எழிலான முகத்தில் விழுந்தாலும் அதை ஒதுக்கி விட்டுக் கொண்டவளாய், தனது கோதுமை நிறத்திற்கு தனித்த எந்தவொரு ஒப்பனையும் செய்யாதிருந்தும் இயற்கையே பியூஷாவிற்கு எழிலைக் கூட்டிக் காட்டியிருந்தது. தலையில் சூடியிருந்த காட்டு மலர் ஒன்றின் சுகந்தம் உதயச் சந்திரனது நாசியோடு மனதையும் வசீகரித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அவளது அழகிய வதனமோ ஏதோ சோகத்தை சுமந்து கொண்டு தத்தளித்துக் கொண்டிருக்க, உதயச்சந்திரன் மெள்ள, " பியூஷா..ஏன் வருத்தமாய் இருக்கிறாய்..? உன் தந்தையை எண்ணி கவலை கொள்கிறாயா..? " என்றான் ஆதரவான குரலில்.


" ஆம்..எனது கவலைக்கு பெரும் காரணம் அவர் தான்..அவரது செய்கையை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது..எப்போது அவருக்கு ஆபத்து வரும் என எண்ணிஎண்ணி கவலையில் ஆழ்ந்து விடுகிறேன். இங்கு எனக்கு அவரை விட்டால் யாருமில்லை..எனவே அவரது நலனில் நான் கவனம் கொள்ள வேண்டியது இருக்கிறது..ஆனால் அவரோ இது குறித்து எதைப் பற்றியச் சிந்தனையும் இன்றி, நடந்து கொள்வதை நினைத்தால் அவர் மேல் கோபமும் எழுகிறது..கூடவே பயமும் எழுகிறது.." என்றாள் கண்கள் கலங்கியபடி.


" கவலை கொள்ளாதே..நாம் செல்லும் போது, அவரையும் அழைத்துச் சென்று விடலாம்.."


" ம்.."


ஆறுதலைத்  தேடிய உள்ளம், அரவணைப்பிற்கு ஆள் கிடைத்ததும் மெல்ல அவனது மார்பில் சாய்ந்தது.

மணலில் விளையாடிய அவனது கைகளை எடுத்து, உதயச்சந்திரன் மங்கையின் குழலில் விளையாடத் துவங்கினான்.


_ தொடரும்..


# அனுராஜ்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages