28.08.20-ரேவா : 14-கடலின்_நடுவே - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

28.08.20-ரேவா : 14-கடலின்_நடுவே

 



28.08.20


ரேவா


கடலின்_நடுவே_14


நாம்குலேன் மலைகளிலும் அதையொட்டி அமைந்த கானகப் பெருவெளியிலும், நான்கு புரவிகள் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தன.  புரவிகளில் ஒன்றில்  உதயச்சந்திரன் வீற்றிருந்தான். மற்றொன்றில் பியூஷாவும், பல்லவ மல்லனும் வீற்றிருந்தார்கள். மற்ற இரண்டில் காம்புஜ தேசத்து வீரர் இருவரும் உடன் சென்று கொண்டிருந்தனர். கண்ணில் தென்பட்ட இயற்கையின் வனப்பில் மனதை பறிகொடுத்தவர்களாய் பியூஷாவும், பல்லவமல்லனும் காணப்பட்டார்கள். 


மலைத்தொடர்களில் ஆங்காங்கே விழும் அருவிகளின் பேரிரைச்சல் பரவசமூட்டியது. மரங்களில் தாவித் திரியும் குரங்களும், அவ்வப்போது கண்ணில் பட்டு மறைந்த  மான்களும்,

காட்டு விலங்குகளும் பல்லவ மல்லனை மேலும்  உற்சாகப் படுத்திக் கொண்டே வந்தது.


பியூஷாவின் தந்தையான முதியவனோ, தற்சமயம் தான் தமிழகம் வரவில்லை என மறுத்து விட்டதோடு பிறிதொரு சந்தர்ப்பத்தில் உறுதியாக வந்து சந்திப்பதாகவும் கூறிவிட்டபடியால், அரைகுறை மனதோடு வந்து கொண்டிருந்த பியூஷாவின் மனநிலையும் ஓரளவு இப்போது தெளிவடைந்திருந்தது.


மலைப்பயணம் முடிந்து , நதியில் பயணம் தொடங்கவிருந்த சமயத்தில், உடன் வந்த காவலர் இருவரும் விடைபெற்றுக் கொண்டனர்.


டோன்லே சாப் நதியில் சென்று கொண்டிருந்த அப்படகில் உதயச் சந்திரனோடு, பல்லவ மல்லனும், பியூஷாவும் வீற்றிருந்தார்கள்.


சுற்றிலும் காணப்பட்ட இயற்கை எழிலை ரசித்தபடி வந்து கொண்டிருந்தான் பல்லவ மல்லன். இளவரசனாய் இருந்த காரணத்தால் எங்கும் எவருடைய துணையுமின்றி வெளியே செல்ல இயலாமல் அரண்மனை ஒன்றே கதியென கிடந்தவனுக்கு, கடந்த சில தினங்களாக கிடைத்திருந்த உதயச்சந்திரனது சினேகம் மிகவும் பிடித்திருந்தது. அது மட்டுமின்றி இதுவரை அனைவரும் "இளவரசே" என்றே அழைக்கக் கேட்டு பழகியிருந்த அவனை முதன் முதலாக அவனது பெயரான "பல்லவ மல்லா " எனச் சொல்லி ஒருவர் அழைப்பதைக் கேட்க மிகவும் பிடித்தது. அத்தோடு சில நாழிகைப் பொழுதி்ல் வந்து சேர்ந்ததோடு, தன்னை எப்போதும் இழுத்து அணைத்துக் கொண்டு பாசத்தைப் பொழியும் பியூஷாவையும் சிறுவனான பல்லவ மல்லனுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது.


படகினில் உதயச்சந்திரனது புரவியோடு, தானும் பியூஷாவும் ஏறிவந்த புரவியும் ஏற்றப் படுவதையும் ஆச்சர்யத்துடன் கவனித்துக் கொண்டிருந்தான்.


" படைத்தலைவரே, இந்தப் படகு இந்நதியைத் தாண்டியதும் எங்கு போய்ச் சேரும்..? " என்றான் ஆவலுடன் பல்லவ மல்லன்.


"மேகாங் நதியில் போய் இணையும் இப்படகானது , பின் கடலில் நான் நிறுத்தியிருக்கும் மரக்கலத்தைச் சென்றடையும்." என்றான் உதயச்சந்திரன்.


" பிறகு.."


" பிறகென்ன..நமது பயணம் தமிழகத்தின் பல்லவ தேசத்தினை நோக்கித் தான்.." என்று விட்டு பெருமூச்செறிந்தான் உதயச்சந்திரன்.


படகின் போக்கில் மனம் லயித்துப் போனவளாய் பியூஷாவும், பல்லவ மல்லனது தோளில் கைகளைப் போட்டவாறு நதியையும், அதில் நீந்தி மகிழும் மீன்களையும், சுழித்து ஓடும் நதியின் வெள்ளப் பெருக்கையும் ரசித்தவாறு பயணித்துக் கொண்டிருக்க, படகானது உதயச்சந்திரனது மரக் கலத்தை எட்டியது. தொங்கிக் கொண்டிருந்த நூலேணி வாயிலாக மேலேறிய மூவரும், புரவிகள் கயிறுகள் கட்டி மரக்கலத்தில் ஏற்றப்படுவதையும்  வேடிக்கைப் பார்த்தனர்.


உதயச்சந்திரனைக் கண்டதும் தலையைத் தாழ்த்தி வணங்கிய மரக்கலத் தலைவன், மரக்கலத்தின் பாய்களை விரித்தும், நங்கூரத்தை அகற்றியும் பயணத்தை துரிதப் படுத்தத் துவங்கினான்.


காற்றின் திசைக்கேற்ப புடைத்துக் காணப்பட்ட பாய்கள், தென்மேற்கு திசை நோக்கி தன் பயணத்தைத் துவக்கியது.


மரக்கலத்தின் மேல் தளத்தில் நின்றபடி தனது மரக்கல மாலுமிகளுக்கு பலவித உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தான் உதயச்சந்திரன். மரக்கல மாலுமிகளும் அவனது உத்தரவுகளை நிறைவேற்றுவதற்காக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருப்பதைக் கண்ணுற்ற பல்லவ மல்லனுக்கு வியப்பாய் இருந்தது. மரக்கலத்தின் மீதேறி பயணிப்பது அவனுக்கு இதுவே முதல் முறை என்பதனால் மரக்கல தளத்தில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டும், கடல் அலைகள் சீற்றத்தோடு மரக்கலத்தின் பக்கப் பலகைகளில் மோதுவதை கண்ணுற்ற படியும், சமயங்களில் நீரின் மேற்பரப்பில் மரக்கலத்துடனே விரைந்து நீந்தி வரும் மீன்களையும், அவ்வப்போது சில மீன்கள் நீர் மட்டத்திற்கு மேல் துள்ளி எழுந்து நீரில் விழும் அழகையும் கண்டு பிரமித்துப் போயிருந்தான். அது மட்டுமின்றி கண்ணுக்கெட்டியத் தொலைவு வரை கடலின் பரந்த நீர்பரப்பு அவனை பரவசப்படுத்தவும் செய்தது. கடந்த இரண்டு நாள் கடல் பயணத்தில் சுக்கானை எப்படித் திருப்புகிறார்கள்..

காற்றின் திசைக்கேற்ப பாய் மரத்தை எவ்வாறு சரிசெய்கிறார்கள் என்பதையும் கற்றுக் கொள்ளத் துவங்கி யிருந்தான். அதுமட்டுமின்றி மரக்கலத்தின் அடிதளத்திற்கு சென்று அங்கு துடுப்பினை வலிக்கும் மாலுமிகளோடும், அடிமைகளோடும் கடல் சார்ந்த பல கதைகளைக் கேட்ட வண்ணமிருந்தான். பல்லவ மல்லனுக்கு இக்கடல் பயணம் மிகவும் இன்பகரமான ஒன்றாக அமைந்து கொண்டிருந்தது.


ஆனாலும்..பல்லவ மல்லனை மட்டுமல்லாது அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தும் படியான நிகழ்வொன்றும் அடுத்த இரண்டு தினங்களில் நடந்தேறியது.


அன்று இரவு முதலாம் ஜாமம் துவங்கிய சிறிது நேரத்திலேயே வானம் முழுதும் கருமையாகியதோடு, பலமான மின்னல் கீற்றுகளும், பயங்கர இடிச்சத்தமும் காதை பிளந்தன.. காற்றின் வேகம் நாழிகைதோறும் அதிகரித்துக் கொண்டே வர,  சொல்லவொண்ணாத நிலைமையில் மரக்கலத்தின் போக்கு இருந்தது.. மரக்கலத்தின் பாய்கள் படபடவென அடித்துக் கொண்டதோடு, காற்றின் வேகத்தில் பறந்து விடுமோ என அச்சப்படத்தக்க வகையில் காணப்பட, உதயச்சந்திரன் மரக்கலத் தலைவனை அழைத்து பாய்களை முழுதும் கீழிறக்குமாறு கட்டளையை பிறப்பித்தான்..அத்தோடு மரக்கலத்தின் ஆட்டமும் பலமாய் காணப்பட்டது.  பக்கப் பலகைகளில் மோதும் அலைகளின் சீற்றமும் அதிகரித்திருந்த படியால் சுக்கானைச்  சரியாக இறுக்கி பிடித்திருக்கவும் உத்தரவிட்டான். படகு நிலைகொள்ளாது பயங்கரமாக ஆடிக் கொண்டிருந்தது. மரக்கலத் தளத்தில் நின்றிருந்த பியூஷாவையும், பல்லவ மல்லனையும் மரக்கலத் தலைவனது அறைக்குச் செல்ல பணித்தான். பல்லவ மல்லனோ அறைக்கு உள்ளே செல்லாமல் தளத்திலேயே நின்றபடி,  மரக்கலப் பாய்களைப் பிணைக்கும் மரத்தண்டுகளின் மீது சாய்ந்து நின்று கொண்டு கயிறொன்றை கெட்டியாகப்  பிடித்து நின்றிருந்தான். பியூஷா அழைத்தும் செல்ல மறுத்து விட்டான். இருப்பினும் காற்றின் வேகத்திலும், மரக்கலத்தின் ஆட்டத்திலும் அவனால் நிலையாக நிற்க இயலவில்லை..

மரக்கலத் தலைவன் கூறியும் உள்ளே செல்லாமல் தளத்திலேயே நின்றபடி இருந்தான். மரக்கல மாலுமிகளோ அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். மரக்கலத்தில் ஏற்றப் பட்டிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்ட காரணத்தால் அடர் இருளில் மரக்கலம் தத்தளிப்பதும், வானில் இருந்து வெளிப்பட்ட பளிச் பளிச் மின்னலும் , கடலில் பனைமர உயர அளவிற்கு பொங்கி எழுந்த கடலலைகள் வாரியிறைத்த நீர் மரக்கலத்தின் பக்கப் பலகைகளையும் மீறி உள்ளே வந்து விழுந்து கொண்டிருந்த சூழலும் காண்பவரை கலவரத்திற்கும் பீதிக்கும் உள்ளாக்கியது என்றாலும், பல்லவமல்லனோ சிறிதும் அச்சமின்றி அதையும் ரசித்துக் கொண்டிருந்தான். இளங்கன்று பயமறியாது என்பதனைப் போல. 


மரக்கலத்தின் மேல் தளத்தில் அவ்வாறு விழுந்து தேங்கும் நீரை வாரியிறைத்துக் கொண்டிருந்தார்கள் ஒரு சில மாலுமிகள். அனைவருமே கடல் நீரால் நனைந்து, காற்றின் வேகத்தில் வெடவெடவென நடுங்கியபடி பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

இவை அனைத்தையும் கவனித்தும் சற்றும் பீதி கொள்ளாது மரக்கலத்தின் மேல்தளத்திலேயே முழுதும் நனைந்தபடி நின்றிருந்த  பல்லவ மல்லனை நோக்கித் திரண்டு எழுந்து வந்தது மீண்டும்  ஒரு பனை உயர பெரும் அலை.


_ தொடரும்..


#அனுராஜ்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages