29.08.29-ரேவா : 15-தணிந்தது_கடலின்_சீற்றம் - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 29 ஆகஸ்ட், 2020

29.08.29-ரேவா : 15-தணிந்தது_கடலின்_சீற்றம்

 



29.08.20


#ரேவா_


#தணிந்தது_கடலின்_சீற்றம்_15


காம்புஜ தேசத்தை விட்டு பல்லவ தேசத்தினை  நோக்கி போய்க் கொண்டிருந்த மரக்கலம் , இடையில் பயங்கர கடல் சீற்றத்திற்கு உள்ளானது. கடும் சூறாவளி மற்றும்  இடி மின்னலுடன் பயங்கர மழை வேறு வலுத்துக் காணப்பட்டது. மரக்கலத்தின் பாய்களை முழுதும் இறக்கியும், மரக்கலமானது நிலைகொள்ளாது ஆடிக் கொண்டிருந்தது. கடலின் நீரானது, பனை மர உயர அலைகளின் எழுச்சியால் பக்கப் பலகைகளையும்  மீறி மரக்கலத்திற்குள் வந்து விழுந்து கொண்டிருந்தது.  மரக்கல மாலுமிகள் காற்றின் வேகத்திலும், குளிரின் தாக்கத்திலும் நடுங்கியபடியே மரக்கலத்தின் மேல் தளத்தில் வந்து விழுந்த நீரினை வாரியிறைத்து மீண்டும் கடலிலேயே ஊற்றிக் கொண்டிருந்தார்கள். உதயச்சந்திரனோ சுக்கானை நிலை நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான். மரக்கலம் தன் மூக்கை அப்படியே கடலை நோக்கித் தாழ்த்துவதும், பின் பயங்கரமான உயரத்தில் எழுவதுமாய் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. மரக்கலத்தின் தளத்தில் எவராலும் நிற்க இயலாதவாறு காற்றின் வேகம் கூடியிருந்தது. பாய்மரத் தண்டு ஒன்றின் கயிறுகளை பலமாக பிடித்த வண்ணம் நின்று கொண்டு இந்தக் காட்சிகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பல்லவ மல்லன் , உதயசந்திரன் உட்பட பலர் சொல்லியும் கேளாமல் மரக்கலத்தின் மேல் தளத்திலேயே நின்று கொண்டிருந்தான். அப்போது மீண்டும் கடல் பொங்கி எழுந்ததோடு, பனை மர உயரத்திற்கு ஒரு பெரும் அலை மரக்கலத்தின் பக்கப் பலகையில் பயங்கர வேகத்துடன் மோதியது. தளத்தின் பெரும்பகுதி நீரால் நிறைய, மரக்கலமோ ஒரு பக்கமாய் முழுதும் சாய்ந்து பின் நிமிர்ந்தது. பியூஷா பலமான அலறலோடு மரக்கலத் தலைவனது அறையில் மயக்கமாகி விழுந்தாள். அறையில் இருந்த பொருட்கள் அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தன. பல்லவ மல்லனையும் அலையானது உருட்டி கீழே தள்ளியிருந்தது.

மரக்கலம் நிலையானதும் எழுந்து நின்றதோடு ,  கட்டை ஒன்றை பிடித்து நிலையாக நின்று கொண்டான். இரவு முழுதும் தொடர்ந்த புயலின் சீற்றம் மூன்றாம் ஜாமத்தின் இறுதியில் தான் சற்று  மெல்ல அடங்கத் துவங்கியது. 


மரக்கல மாலுமிகள் அனைவரும் , மிகுந்த களைப்பில் மேல் தளத்தில் விழுந்து கிடந்தார்கள். கடலின் சீற்றம் முற்றிலும் தணிந்து பெருத்த அமைதியை எட்டியிருந்தது. வானில் விடிவெள்ளி தோன்றியது.


மயக்கம் தெளிந்து எழுந்த பியூஷா, மரக்கலம் அமைதியாக அசைந்து கொண்டிருந்ததையும்,  அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதையும. கவனித்தாள். தாங்கள் இந்த பெரும் ஆபத்திலிருந்து மீண்டதே பெரும் அதிசயம் என எண்ணினாள். நேற்றைய பயங்கர நிகழ்வினை எண்ணி மெய்சிலிர்த்தாள்.


மரக்கலத்தின் மேல் தளத்திலேயே பலரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். உதயச் சந்திரன் சுக்கான் அருகிலேயே கிடந்தான். பல்லவ மல்லன் பாய்மரத் தண்டின் அருகிலேயே தளத்தில் கிடந்தான். அனைவரும் அப்போது தான் நித்திரையில் ஆழ்ந்திருப்பார்கள் போல தெரிந்தது.


நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த மரக்கலத்தின் மேல் தளத்தில் ஓய்ந்து போய் அப்படியே படுத்துறங்கிய மரக்கல மாலுமிகள் அனைவரும், கீழ்வானில் சூரியன் உதயமானதும் ஒவ்வொருவராக எழத் துவங்கினர். உதயச் சந்திரனும் மெல்ல புரண்டு படுத்தபடியே  நீல வானை ஏறெடுத்தான். நேற்றைய இரவு பாடாய்படுத்திய கடல் இன்று மிகமிக அமைதியாக காட்சி தந்து கொண்டிருந்தது.  மெல்ல எழுந்தவனாய், மரக்கலத் தலைவன் எங்கிருக்கிறான் என்பதை கவனித்தான். மரக்கலத் தலைவன் மரக்கலத்தின் பக்கப் பலகையினை ஒட்டி களைத்துப் போய் நித்திரையில் ஆழ்ந்திருந்தான். மரக்கலம் நேற்றைய காற்றினுடைய போக்கின் காரணமாய் மெல்ல மெல்ல நகர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்திருப்பதை திசை காட்டும் கருவி வாயிலாக அறிந்த உதயச்சந்திரன்,  மரக்கலத் தலைவனை எழுப்பியதோடு, பாய்களை உருளைகளில் பிணைத்து மேலே ஏற்ற கட்டளையிட்டதோடு,   சுக்கானை தென் மேற்கு திசை நோக்கி நன்கு திருப்பவும் செய்தான்.


மரக்கலத் தலைவன் அனைவரையும் எழுப்ப, மரக்கலம் மீண்டும் உயிர்ப்புடன் இயங்கத் துவங்கியது..மாலுமிகள் அவரவருக்குரிய பணிகளை செய்வதற்கு ஓடினார்கள்.


பல்லவ மல்லன் மெல்ல கண்விழித்துப் பார்த்தான். நேற்றைய பயங்கர இரவின் பாதிப்பே தெரியாத வண்ணம் மாலுமிகள் அவரவர் பணிகளை செய்து கொண்டிருக்க, படைத்தலைவனை தேடினான் பல்லவ மல்லன்.


" படைத்தலைவரே " எனச் சத்தமாய் அழைக்கவும் செய்தான்.


சுக்கானைப் பிடித்தபடி அமர்ந்தபடியிருந்த உதயச்சந்திரன் பல்லவ மல்லனது அழைப்பினுக்கு சட்டெனத் திரும்பியவன், " பல்லவ மல்லா..வா..இங்கே " என அழைத்தான்.


உதயச்சந்திரன் அழைத்ததும், அவனை நெருங்கிய பல்லவ மல்லன், " ஏன் அழைத்தீர்கள்..?" என்றான்.


" நீ தான் முதலில் அழைத்தாய்..! "


" ஆம்..நான் தான் முதலில் அழைத்தேன். நேற்றைய இரவு வந்த காற்றின் சீற்றம் மறுபடியும் வருமா..? " என்றான் ஆவலுடன்.


" ஏன் உனக்கு பயமில்லையா..?  மறுபடியும் வருமா என்று கேட்கிறாயே..? " என்றான் ஆச்சர்யத்துடன் உதயச்சந்திரன்.


" ஏன் பயப்பட வேண்டும், இது போன்ற பாற்கடலில் தானே வைகுண்டவாசன் வாசம் செய்கிறான். என்னை சந்தித்துப் போக நேற்று வந்திருப்பான் போலிருக்கிறது..ஆனால் கடைசி வரை என்னால்  *வைகுண்டவாசனை சந்திக்கவே இயலவில்லை. " என்றான் வருத்தமாய்.


பல்லவ மல்லனது பதிலைக் கேட்டு ஆச்சர்யத்துடன், " உண்மை தான்.. வைகுண்ட வாசன்தான் நேற்றைய நிகழ்விற்கு காரணம்..நீ அவனது பரம பக்தனல்லவா..அதனால் உன்னைக் காணவே வந்திருப்பான்.." என்றான் குறும்புடன்.


" படைத்தலைவரே..நேற்று அவரைப் பார்க்க முடியவில்லை..எப்படியாவது அவரைப்  பார்த்துவிட வேண்டுமென்று தான் அறைக்குச் செல்லாமல் தளத்திலேயே நின்றிருந்தேன்..அடுத்த முறை இது போல் நடந்தால் சந்திக்க வேண்டும் என்பதற்குத் தான் கேட்கிறேன்." என்றான் ஒன்றுமறியாத அப்பாவியாய் பல்லவ மல்லன்.


" பல்லவ மல்லா..வைகுண்டவாசன் 

மனது வைத்தால் தான் வந்து பார்க்க வருவார்..நாம் நினைக்கும் போதெல்லாம் அவரைப் பார்க்க முடியாது.." என்றான் விஷமத்துடன்.


"நீங்கள் கூறியது உண்மைதான் படைத்தலைவரே.."


" சரி.. போய்..பியூஷா என்ன செய்கிறாள் எனப் பார்த்து வா.."


" ம்..சரி.." என்றபடியே ஓடினான் பல்லவ மல்லன்.


"பனிரெண்டு வயது பாலகனான பல்லவ மல்லனுக்கு கடலின் ஆபத்து எத்தகையது என்பது புரியவில்லை, அதுவும் ஒருவகையில் நன்மைக்குத் தான், பயம் என்பதையே அறியாதவனாக அவனை நான் வளர்க்கப் போகிறேன்.." என மனதிற்குள் நினைத்துக் கொண்டான் உதயச் சந்திரன்.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : சிறு வயதில் இருந்தே 

மகா விஷ்ணுவின்  சிறந்த பக்தனாய் விளங்கிய பல்லவ மல்லன்,  காஞ்சியில் பரமேசுவர விண்ணகரம் என அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுந்தப் பெருமாள் ஆலயத்தைக் கட்டியதோடு, அவனது ஆட்சி காலத்தில் கூரத்தில் கேசவப் பெருமாள் கோவிலையும், திருவதிகையில் வீரட்டானேச்சுவரர் ஆலயத்தையும், புதுக்கோட்டையில் குன்றாண்டார் கோவிலையும் கட்டுவித்தவன். "அரி சரணபரன் " எனும் சிறப்புப் பெயரை பெற்றவன்..இத்தோடு திருமங்கையாழ்வாரின் நட்பையும், அன்பையும் பெற்றுத் திகழ்ந்தான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages