30.08.20-ரேவா : 16- பல்லவரின்_பகைவர்கள் - தென்குமரிக் கவிதைக்களம்

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

30.08.20-ரேவா : 16- பல்லவரின்_பகைவர்கள்

 





ரேவா




30.08.20




பல்லவரின்_பகைவர்கள்_16


ஆழ்கடலின் அழகினில் மனதைப் பறிகொடுத்தவளாய் , மரக்கலத்தின் பக்கவாட்டுப் பலகையில் சாய்ந்து நின்று கொண்டு, மேற்கு வானில் பல வர்ணஜாலங்களை சிருஷ்டித்தவனாய் மறைந்து கொண்டிருந்த கதிரவனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பியூஷா. கடற்காற்று இதமாக அவளது உடலைத் தீண்டிச் சென்றது. அவ்வப்போது மரக்கலத்தின் பக்கப் பலகைகளில் மோதும் அலைகளையும், மரக்கலத்தில் மோதிப் பிரிந்து பின் இணையும் கடல் நீரின் அழகையும் கண்ணிமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தவள் , அருகினில் உதயச்சந்திரன் வந்து நின்றதையோ, அவன் அவளது அழகில் லயித்தவனாய் அவளையே இமைகொட்டாது கவனித்துக் கொண்டிருந்ததையோ சிறிது நேரம் கவனிக்கவில்லை. 


வெகுநேரம் நின்றிருந்த படியாலும், கதிரவன் முற்றிலும் மறைந்து விட்ட காரணத்தால் வானம் சாம்பல் நிறத்தை தவிர்த்து, சற்றே கருமை நிறத்தை பெற முனைந்த காரணத்தால் , அறைக்கு திரும்ப எத்தனித்தவள் சட்டென உதயச்சந்திரன் மீது மோதிக் கொண்டாள்.


" நீங்கள் எப்போது வந்தீர்கள்..? " என்றாள் திகைப்புடன்.


" சற்று நேரத்திற்கு முன்.."

 

"அழைத்திருக்கலாமே.."


" நீயோ..கடலின் அழகில் மெய்மறந்து நின்றிருந்தாய்..உனது மோன நிலையை கலைக்க எனக்கு விருப்பமில்லை.."


" ம்..இந்த கடல் அழகு என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள்.. இரண்டு தினங்களுக்கு முன் இந்தக்  கடலினால் ஏற்பட்ட அவஸ்தையைக் கண்ட பிறகும், கடலை அழகு என்று,  நான் சொல்வேன் என நினைத்தீர்களா..? " என்றாள் குறும்புடன்.


" அழகில் எப்போதும் ஆபத்தும் மறைந்து தானே இருக்கிறது..ஆபத்து இருக்கிறது என்பதற்காக அழகானதை அழகற்றது எனக் கூறிவிட இயலுமா..? " என்றான் விஷமத்துடன்.


" ம்..சரி தான்.. உங்களுக்கு பேசுவதற்கு சொல்லியா தர வேண்டும்..? "


" சரி..நாம் பல்லவ தேசம் செல்வதற்கு இன்னும் எத்தனை நாட்களாகும்.." என்றாள் ஆவலுடன் பியூஷா.


" காற்று நமக்கு சாதகமாக இருந்தால் இன்னும்  ஒரு வார காலத்தில் நாம் நாகையை அடைந்து விடலாம். " 


இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த பொழுது, அங்கு வந்து சேர்ந்தான் பல்லவ மல்லன்.


 " படைத்தலைவரே, "


" ம்..சொல்..என்ன விசயம் பல்லவ மல்லா..? "


" நான் யார்..? "


" இது என்ன கேள்வி..? நீ பல்லவ மல்லன்." என்றான் குழப்பத்துடன்.


" எதிர் காலத்தில்..? "


" பல்லவ தேசத்தின் மன்னனாக போகிறாய்.."


" ம்..பல்லவ தேசத்தின் மன்னனாகப் போகிறவனுக்கு, பல்லவ தேசத்தைப் பற்றியும், அதை ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றியும் அவசியம் தெரிந்து இருக்க வேண்டுமா..?வேண்டாமா..? " என்றான் கம்பீரமாக.


" ஓ..புரிகிறது..இப்போது உனக்கு என்ன தெரிய வேண்டும் என்கிறாய்..? "


" நான் புனான் தேசத்தைச் சேர்ந்தவன் இல்லையா..?!"


" ஆம்.."


" பீமவர்ம பல்லவரது வம்சம் தானே..?"


" ஆம்..அதிலென்ன சந்தேகம்..? "


" தமிழகத்தில் பல்லவ தேசத்தை ஆட்சி செய்தவர் சிம்மவிஷ்ணு என்று தந்தையார் கூறினார்.."


" சரியாகத் தான் கூறியிருக்கிறார்..அதற்கென்ன..? " என்றான் நகைத்தபடியே உதயச்சந்திரன்.


" எனக்கு சிம்ம விஷ்ணு மகாராஜாவைப் பற்றியும் , இப்போது அவரது வம்சத்தில் இருப்பவர் பற்றியும் நான் தெரிந்து கொள்வது நல்லது தானே..?" என்றான் பல்லவ மல்லன்.


" ஆம்..நல்லது தான்..அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் தான் அது.." 


" அப்படியெனில், சிம்ம விஷ்ணு அரசரைப் பற்றி உங்களுக்குத்  தெரிந்ததைச் சொல்லுங்கள்..நான் கேட்கிறேன்.."


" ம்..சரி.." என்ற படியே, மரக்கலத்தின் பக்கப் பலகையில் சாய்ந்து தளத்தில் அமர்ந்து கொண்ட உதயச்சந்திரனின்  இரு மருங்கில் பியூஷாவும், பல்லவ மல்லனும் அமர்ந்து கொள்ள, சிம்மவிஷ்ணுவைப் பற்றிச் சொல்லத் துவங்கினான் உதயச் சந்திரன்.


பாரத தேசத்தின் தென் பகுதியில் பல தேசங்கள் உண்டு. சிம்ம விஷ்ணுவின் காலத்தில் தமிழகத்தின் பல மண்டலங்களிலும், தேசங்களிலும் விரவிக் கிடந்தவர்கள் களப்பிரர்கள் எனும் முரட்டுக் கூட்டத்தார். அவர்களது ஆட்சியில் தப்பி பிழைத்தது தொண்டை மண்டலம் மட்டுமே..பல்லவர்களின் சிம்ம விஷ்ணுவும், அவரது தம்பி பீமவர்மனும் களப்பிரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். களப்பிரர்கள்  நாட்டு மக்களிடம் #"காணம் " எனும் வரியினை வசூலித்து ஒவ்வொரு சமுதாய மக்களிடமும்  வெறுப்புகளை வளர்த்திருந்தனர். ஆனால் அவர்களைத் தட்டிக் கேட்பார் எவருமில்லை..பல சிற்றரசர்கள் அவர்களது கொடுமைக்கு பயந்து அடங்கியே வாழ்ந்தார்கள். களப்பிரர்களின் சிற்றரசன் திண்டிகன், உறையூர் சோழன் கோச்சிங்கன் போன்றோரும் மதுரையை ஆண்ட களப்பிர வீராங்க அச்சுதனுக்கு அடங்கியே நடந்தார்கள்.


களப்பிரர்கள் போருக்குச் சென்றால் , அவர்களது யானைகளுடன், பேய், நரி, நாய், கழுகு, என பிணம் தின்னும்  விலங்குகளும் பறவைகளும் கூடவே செல்லுமாம் . போரில் விழும் பிணங்களை உண்ணுவதற்கு விருப்பம் கொண்டு அலையுமாம். அது குறித்த பாடலொன்றை யாப்பருங்கலம் எனும் நூல் இவ்வாறு கூறுகிறது.


*படுபருந்தும் சூர்பேயும் பல்லிலலங்கும் நாயும்

கொடியும் கழுகுமிவை கூடி_ வடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு கோமாறு கோமாறு போம்.

என்று.


பாண்டிய நாட்டினை ஆண்ட களப்பிரன் வீராங்க அச்சுதன் என்பானும்   அவனது மகன் ரிஷபத் தேவன் என்பவனும் பல களப்பிரர் சிற்றரசர்களை இணைத்துக் கொண்டு கொடுங்கோல் ஆட்சி செய்தனர். அவர்களது அரசில் மக்களுக்கு நிம்மதி இல்லை, பெண்களுக்கும் பலவித தொல்லைகள்.இந்த களப்பிரர்களை ஒழித்தே தீர்வது என தீர்மானித்தவர்களாய்  சிம்மவிஷ்ணுவும், அவரது தம்பி பீமவர்மனும், பாண்டியன் கடுங்கோனுடன் கைகோர்த்து இணைந்து சோழ மண்டலம், புதுக்கோட்டை மண்டலம், பாண்டி மண்டலம் என பல இடங்களில் களப்பிரர்களை வென்று தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். 


காஞ்சி நகரை சிம்மவிஷ்ணு ஆள, அவரது தந்தையான சிம்மவர்மன் ஏற்பாட்டின் படி, பீமவர்மர் காம்புஜ தேசம் சென்றார், அங்கு சென்லா வம்ச 

ருத்திரவர்மனுக்கு சம்பா தேசத்து வீரர்களுடன்  ஏற்பட்ட போரில் கலந்து கொண்டு உதவியதால் பீமவர்மருக்கு ருத்ரவர்மன் தன்  மகளையும் திருமணம் செய்து தந்தார். மேலும் சம்பா தேசத்தவருடன் நடந்த போரில் மகன்களை பறிகொடுத்த ருத்ரவர்மர் , தனது முதுமையின் காரணம்  கொண்டு, பதவியினை பீமவர்மர் வசம் ஒப்படைக்க,  தனது பரம்பரையை காம்புஜத்தில் உருவாக்கினார் பீமவர்மர்.


தமிழகத்திலோ சிம்ம விஷ்ணுவால் உருவான பல்லவ வம்சத்திற்கு , சிம்ம விஷ்ணுவின் புதல்வரான மகேந்திர பல்லவரது  விரோதியான சாளுக்கிய தேசத்தின் இரண்டாம் புலிகேசியால் தீராப்பகை உருவாயிற்று.


மகேந்திரபல்லவர் சிற்பங்களை வடிப்பதிலும், ஓவியங்கள் தீட்டுவதிலும் சிறந்தவர் இதனாலேயே அவரை சித்திரகாரப்புலி என்றும் அழைப்பர்.மகேந்திர பல்லவரை சாளுக்கிய தேசத்தின் இரண்டாம் புலிகேசியோ புள்ளலூரில் நடந்த போரில் வென்றான். அதனால் கோபம் கொண்ட

மகேந்திரவர்மரது புதல்வர் நரசிம்மவர்மரோ சாளுக்கிய தேசத்தின் தலைநகராய் இருந்த வாதாபியை வென்று தீக்கிரையாக்கி விட்டு வந்தார், இருப்பினும் அன்று முதல் சாளுக்கியரின் பரமவைரிகளாக பல்லவர் திகழத் துவங்கி விட்டனர். சாளுக்கிய அரச பீடத்தில் ஏறுகின்ற 

ஒவ்வொருவருமே காஞ்சியை அழிக்கவே எண்ணமிடுகின்றனர்.


நரசிம்மவர்மரின் பேரனான முதலாம் பரமேஸ்வரவர்மனது உக்ரோதயம் எனும் தெய்வ அம்சம் பொருந்திய மாணிக்க ஆரத்தை சாளுக்கியனது நண்பனான கங்க நாட்டு பூவிக்கிரமன் போரில் கைப்பற்றிக் கொண்டான்.அதன் பிறகும், இரண்டாம் பரமேஸ்வரவர்மனது ஆட்சியிலும் கங்க நாட்டவர் நமது பல்லவ அரசின் வெண்கொற்ற குடையையும், சிம்ம இலச்சினையையும் பறித்துக் கொண்டதோடு, பரமேஸ்வரவர்மரையும் போரில் கொன்று விட்டனர், அவரது மகன் சித்ரமாயன் என்பவனோ, மதுவின் பிடியில் சிக்கிச்  சீரழிந்து போனான். இப்போது பகைவரான சாளுக்கியரின் கைப்பாவையாக இருந்து கொண்டே பல்லவ நாட்டை ஆண்டு வருகிறான்..எனவே தான்,  என் போன்ற ராஜவிசுவாசிகள் ஒன்றிணைந்து, சிம்மவிஷ்ணு பரம்பரையை தவிர்த்து பீமவர்மனது பரம்பரையை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவது என முடிவெடுத்து உனது தந்தையைச்  சந்திக்க வந்தோம்." எனச் சொல்லி முடித்தான்.


" அப்படியானால் சிம்மவிஷ்ணு மகாராஜாவின் பரம்பரையில் சித்ரமாயன் என்பவர் இப்போது இருக்கிறாரா..? "


" ஆம்..ஆனால் மக்களின் செல்வாக்கு அவருக்கில்லை.."


" ம்..நமக்கு பகைவர் சாளுக்கியரும், கங்க நாட்டவரும் தானா..?"


" ம் ..ஊஹூம்..அப்படியில்லை, அவர்கள் நமது நிரந்தர எதிரிகள், ஆனால் ஒரு அரசானது வளம் பெறுகிறது எனில் அண்மையில் உள்ள அனைவருமே அந்த அரசுக்கு எதிரிகளாவது இயற்கையே..பொறாமையே எதிரிகளை உருவாக்கி விடுகிறது.." என்றான் உதயச்சந்திரன்.


" அவ்வாறெனில் நமக்கு எதிரிகள் வேறு யார்..? "


" பாண்டியரைச் சொல்லலாம்.. நமது வளர்ச்சியை வெறுப்பவர்கள் பாண்டியர்கள்.."


" ம்..சரிதான்..எனக்கு பல்லவ நாட்டில் பல எதிரிகள்  காத்திருக்கிறார்கள் எனச் சொல்லுங்கள்.." என்று விட்டு சிரித்தான் பல்லவ மல்லன்.


_ தொடரும்..


# அனுராஜ்..


குறிப்பு : # காணம் எனும் வரி தொழில் சார்ந்து மக்களுக்கு அநியாயமாக விதிக்கப் பட்டது. 


*களப்பிரர் ஆட்சியில் தமிழகம் எனும் நூலில். திரு.மயிலை சீனி வேங்கடசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages