31.08.20- ரேவா : 17 : கடலில்_துவங்கியது_பயிற்சி - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

31.08.20- ரேவா : 17 : கடலில்_துவங்கியது_பயிற்சி



31.08.20


#ரேவா


#கடலில்_துவங்கியது_பயிற்சி_17


உதயச் சந்திரன் பல்லவர்களின் பகைவர்களைப் பற்றிக் கூறியதும், அப்படியெனில் எனக்கு தமிழகத்தில் பகைவர்களுக்கு பஞ்சமில்லை எனக் கூறி விட்டு நகைத்தான் பல்லவ மல்லன். அது மட்டுமின்றி,  நமது வளர்ச்சிக்கு பகைவர்களே பெரிதும் உதவுவார்கள் என என் தந்தை அடிக்கடி கூறுவார் " என்றும் கூறினான் பல்லவ மல்லன்.


" உண்மை தான்..பகைவரை பெற்றிருந்தால் நம்முடைய அறிவு எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கும் , வீரமும் விவேகமும் எப்போதும் போட்டியிட்டு வேலை செய்யும்.." என்றான் உதயச்சந்திரன்.


" ஏன் பகைவர் அதிகமிருந்தால் நமது உயிரும் ஆபத்தில் இருப்பதாகத் தானே பொருள் " என்றாள் பியூஷா.


" ஆபத்தைக் கண்டு அஞ்சுபவன் வீரனாக இருக்க முடியாது பியூஷா..அது மட்டுமின்றி எதிரிகள் இல்லாத வாழ்வில் சுவாரஸ்யம் ஏது..? " என்றான் உதயச் சந்திரன். கூடவே..


" நான் பல்லவ மல்லனை மிகப் பெரும் வீரனாக மாற்றப் போகிறேன்..பல்லவ மல்லா நீ..என்ன சொல்கிறாய்..? "


" நான் வீரனாக இப்போதே தயார்.." என்றான் எழுந்து நின்று நெஞ்சை நிமிர்த்தியவனாய் பல்லவ மல்லன்.


உதயச்சந்திரனும், பியூஷாவும் அவனது செயலைக் கண்டு சிரிக்கத் துவங்கினார்கள்.சற்றுத் தள்ளி இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மரக்கலத் தலைவனும் பலமாய் நகைக்க , பல்லவ மல்லன் அனைவரும் தனது செயலைக் கண்டு நகைப்பதாக எண்ணியவனாய்  தனக்கென ஒதுக்கப் பட்ட அறைக்கு வேகமாய் ஓடினான்.


மறுதினக் காலையில் இருந்து பல்லவ மல்லனுக்கு மரக்கலத்தின் மேல்தளத்திலேயே போர்ப்பயிற்சியைத் துவக்கினான் உதயச் சந்திரன். வாள், வேல், ஈட்டி என பலவகை ஆயுதங்களில் நாள்தோறும் ஒரு ஆயுதத்தில் பயிற்சியை மேற்கொண்டான் பல்லவ மல்லன்.


" பல்லவ மல்லா ஆயுதப் பயிற்சியை பல்லவ தேசம் சென்றதும் இன்னும் விரிவாக நீ கற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்லாது புரவியேற்றமும், புரவிகளோடு பழகுவதையும் கூட நீ நல்ல முறையில் கற்றுக் கொள்ளலாம்..." என்றான் உதயச் சந்திரன்.


 "படைத்தலைவரே..யானையுடன்

பழகுவதும் அவசியமல்லவா..? "


" யானையுடன் பழகுவது அவ்வளவு எளிதல்ல..அது தனக்கு நெருக்கமானவருக்கு மட்டுமே அடங்கி நடக்கும்..உனக்கு நமது பகைவனான *கங்க மன்னன் சிறீபுருஷன் என்பவன் நம்முடைய வெண்கொற்றக் குடையையும், சிங்க இலச்சினையையும், போரில் அபகரித்துக் கொண்டதாக கூறினேன் அல்லவா, அம்மன்னன் கஜ சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றவன். புரவியே பலவகையில் நமக்கு உதவுகிறது..எனவே அதனுடன் பழகுவதும், அதனை நம் சொற்படி நடக்கச் செய்வதுமே நமக்கு போதுமானது.


" ம்..சரி..படைத்தலைவரே , எனக்கு மேலும் ஒன்றைக் கற்றுத்தர விட்டு விட்டீர்கள்..?!"


" எதை பல்லவ மல்லா விட்டு விட்டோம்.?"


" தங்களது ஹேலடி ஆயுதத்தில் பயிற்சியைத் தரவில்லையே தாங்கள்.."


" தெரிந்தே தான் தரவில்லை...அதற்கு நீ சற்று வளர வேண்டும்..ஹேலடியை கரங்களில் தாங்கிச் சுழற்றும் ஆற்றலை உனது தோள்கள் பெற வேண்டும் புரிந்ததா..?!"


" புரிந்தது படைத்தலைவரே.."


" பல்லவ மல்லா, இப்போது உனக்கு கற்றுத் தந்திருப்பது அரிச்சுவடிப் பாடங்களே..பல்லவ தேசம் சென்றதும் பஞ்சபாண்டவர் மலையில் வாசம் புரியும் நாகநந்திக்குரவரிடம் உன்னைப் பல கலைகளைக் கற்க அனுப்பி வைக்கிறேன். அவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர், பல கலைகளில் தேர்ந்தவர் , அவரிடம் நீ அனைத்தையும் கற்றுத் தெளிவடையலாம்.


" நல்லது படைத்தலைவரே..நான் கற்றுக் கொள்ள ஆவலாக இருக்கிறேன்."


" ம்..ஓடிச் சென்று, மரக்கலத் தலைவனை நான் அழைத்ததாக அழைத்து வா.." என்றான் உதயச்சந்திரன்.


பல்லவமல்லன் மரக்கலத்தின் மேல் தளத்தில் நாலாபுறமும் தேடிவிட்டு, கீழ்தளத்திற்கு மரப்படிக்கட்டுகள் வழியாக இறங்கிச் சென்றான்..துடுப்புகள் வலிப்பவர்கள் இவனைக் கண்டதும் சிரிக்க, " மரக்கலத் தலைவரைப் பார்த்தீர்களா..? " என்றான்.. புரவிகளை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து வெளிப்பட்ட மரக்கலத் தலைவன், பல்லவ மல்லனைப் பார்த்ததும், 


" என்ன இளவரசே..ஏன் என்னைத் தேடுகிறீர்கள்..? " என்றான். 


" படைத்தலைவர் தங்களை அழைத்து வரச் சொன்னார்..அது சரி..இங்கு வந்து என்ன செய்கிறீர்கள்..? "


" நாம் உணவருந்தியதைப் போல் நமது புரவிகளுக்கு உணவு தர வேண்டாமா..? "


" ஆம் ..தர வேண்டும்.."


" அதைத் தான் இங்கு தந்து கொண்டிருந்தேன்.."


" நாளை முதல் நீங்கள் உணவு தரும் போது என்னையும் அழையுங்கள்..நானும் வந்து புரவிகளுக்கு உணவினைத் தருகிறேன்..அதனுடன் நான் பழக வேண்டுமல்லவா..?!" என்றான் பல்லவ மல்லன்.


" ஆஹா..அவசியம் . நாளைமுதல் புரவிகளுக்கு உணவு வழங்குமுன் உங்களையும் அழைக்கிறேன் இளவரசே.."


" நன்றி..வாருங்கள் செல்லலாம்."


இருவரும் மரப்படிகளில் ஏறி மரக்கலத்தின் மேல் தளத்திற்கு வந்தார்கள்.


மரக்கலத் தலைவனைக் கண்டதும், உதயச்சந்திரன் " மரக்கலத் தலைவரே நாளையோ..நாளை மறுநாளோ நமது மரக்கலம் நாகையை அடைந்து விடுமல்லவா..? "


" ஆம்..படைத்தலைவரே..நாளை மறுதினம் நாம் நாகையை அடைந்து விடலாம்.." 


" கரையை அடைந்ததும்,  கரைக்கு கால் காத தூரத்திலேயே மரக்கலத்தைக்  கடலில் நிறுத்தி விடுங்கள்..கரையை நெருங்க முற்பட வேண்டாம்.." என்றான் யோசனையுடன் உதயச்சந்திரன்.


" ம்.."


" நீங்கள் சென்று உங்களின் பணிகளைச் செய்யுங்கள்..வேறு ஏதேனும் தகவல்கள் இருந்தால் அழைக்கிறேன்." என்ற உதயச்சந்திரன் மரக்கலத் தலைவனை அனுப்பி விட்டு, மரக்கலத்தின் மேல் தள அறைக்குள் நுழைந்தவனாய்,  சில ஓலைகளை எடுத்து விபரங்களை

எழுதத்துவங்கினான்.


_ தொடரும்..


# அனுராஜ்..


குறிப்பு :  கங்க தேசத்து மன்னன் சிறீபுருஷன் " கஜ சாஸ்திரம் " எனும் நூலை எழுதி உள்ளான். யானைகளை பழக்குவதிலும் வல்லவன்..யானைகளை போரில் நடத்துவதில் வல்லவன்.அது மட்டுமின்றி சிறந்த கல்விமானும் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages