காத்திருப்பு - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

காத்திருப்பு












Sl

எண்

புகைப்படம்

கவிதை

1

631

கண்கள் இன்னும் சோரவில்லை:காண//

துடிக்கும் மனமோ அதை ஒதுக்கவில்லை/

விழிகள் சற்றும் முடவில்லை: வரும்/

வண்டியின் பிம்பம் தொலைவிலும் தெரியவில்லை!//


அ.வெ.முத்துக்குமார். பொன்னேரி

2

216

அந்த அந்திநேரச் சந்தடி இல்லாத்//

தொடர் வண்டிப் பாதையோர காத்திருப்பில்//

காத்திருக்கிறது உனக்கும் எனக்கும் இடையிலான//

#பெருங்காதல்


அ.மாணிக்கவாசகன் அம்பிகாபதி.

3

616

உன்னை காண துடிக்கும் கண்களுக்கும்💕

ஏங்கி பரிதவிக்கும் என் இதயத்திற்கும்💕

உயிர் அளிக்க விரைந்து வந்து விடு💕

காத்திருப்பு நம் காதலின் அடையாளம்💕


கா.கேமலாரூபினி

4

697

கொட்டும் மழையில் குடையைத் துணையாக்கி / 

விரைந்தே வரும் தொடர்வண்டிக்காக காத்திருக்கும் / 

காலம் மழையில் கரைவதைக் கருதி / 

காத்திருக்கும் மங்கையின் பொறுமை பேரெழில்..! 


முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை...

5

212

வரவினைப் பார்த்திருந்தாய் மனமெல்லாம் வியர்த்திருக்க//

காலமெல்லாம் கரைந்திடவே மலராக பூத்திருக்க//

அன்பாகத் தழுவிடவே தவறாமல் வருவாரோ//

துயரெமெல்லாம் தீர்ந்திடவே வைகறையில் காத்திருப்பாய்//


ஜெய வெங்கட்

6

462

மாணவன் பரீட்சை முடிவுக்காய் காத்திருப்பான்/

காதலன் காதலியின் சம்மதத்தை எதிர்பார்த்திருப்பான்/

விவசாயி மழைக்காய் ஆவல் கொண்டிருப்பான்/

இயமன் காத்திருக்கிறான் உன்னை முடிப்பதற்கு


தயா

7

614

வேலை இல்லா பட்டதாரி நான்/

நேர்முக தேர்வு பல சென்றும்/

காத்திருப்பு பட்டியலிலும் பெயர் இல்லை/

எனக்கும் விடிவு காலம் பிறக்குமா?


விஜயலட்சுமி

8

706

காத்திருப்பு சுகமானது  நிச்சயம்நீ வருவாயெனில்/

மழையில் குடையுடன்  உனைக் காணவே/

புகைவண்டி வருகிறது புண்பட்டமனம் ஆறுதலடைய/

குளிரில் வாடுமெனக்கு போர்வையாய் வருவாயா/


மாயாதேவி சென்னை

9

428

காதல் ஆம் ஒரே வார்த்தை

உடலையே உலுக்கி எடுக்கும் சக்தி

வந்துவிடுவேன் வா போகலாம் என்றான்.

கொட்டும் மழையில் குடையுடன் காத்திருப்பு.


சுப்பிரமணியன் அன்புமலர்

10

344

மழையென்ன வெயிலென்ன குளிரென்ன பனியென்ன

மனதில் உறுதி நிலையாக இருந்தால்

மனதின் எண்ணம் ஈடேறும் வரை

அசையாது காத்திரு..காத்திருப்பதும் சுகமே!


#எமா$

11

715

யாரும் இல்லாமலே ஓடும் காலம் 

வாலிபப் பருவத்தில் இறங்கும் காதலில்

மேகம் சூழ்ந்த மௌனங்களில் தெரிகிறது 

காத்திருக்கையில் எதிர்ப்பார்க்காமல் வரும்  மழையாக.


அ.உமர்பாருக்.

12

698

குன்றாத அன்பிலே மழைச் சாரலில்//

கைக்கூடும் நேரத்தில் கைக்கழுவாமல் இருப்பதற்கே//

மன்னவன் விழித்தேடி தொடர்வழிப் பாதையிலே//

ஆயிரம் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றேன் உனக்காக//


தேனி ஆ.சுந்தர்

13

240

வைகறையில் காத்திருக்கும் நங்கையே உந்தன்//

இன்னல்கள் நீங்கி விடும் கலங்காதே//

மழைக்காலம் குடைக்குள் இணைந்தே பயணிப்போம்//

அன்பானவன் மணித்துளிகளில் மறவாமல் வருவேனே//


உமா பாலகிருஷ்ணன் 

பெங்களூர் 🏵️

14

741

நீர்த்திரை இட்ட விழியோடு பார்க்கிறேன்

வார்த்தைகள் சொட்டும் வழியை வருவாய்யென

இரும்பில் கூட ஈரம் கசிகிறது

இருக்கிறதா உன்னிடம் இதயம் என்பது?


பி.கே.சாமி.

15

735

வாய்ப்பு என்றும் வரம் பயனாக்கிடு

விடாமுயற்சி இலக்கை அடைய சக்தி

விரயமாய் காலம் கழித்து வருந்தாதே

காத்திரு காலம் கனியும் நம்பிக்கையுடனே


ரமேஷ் பைரவி

16

258

புகைவண்டி நிலையத்தில் புரிதல் இன்றி/

இருவரும் எதிரெதிர் பக்கங்களில் பிரிந்தோம்!

வாழ்க்கைப் புரிந்து, பிரிந்த இடத்தில்/

காத்திருக்கேன் காதலுடன்,வருவாய் நீயென..!


                     தங்க. சரவணன், வடபழநி, சென்னை-26.             

17

482

கொட்டும் மழையில் சிட்டும் அமர்ந்தாலே/

தொட்டும் தொடர்ந்திடும் காதலன் அன்பிற்காகவே /

ஒட்டிய உறவுகளையும் விட்டுச் சென்றாயே /

தொடர்வண்டி வரவுக்கு காத்திருக்கிறாள் பேதை.


 தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

18

502

கோடை மழை கொட்டும் வேளையில்/

தித்திக்கும் உன் நினைவுகளை சுமந்தபடி/

தனிமையில் பூத்திருக்கிறேன் வானவில்லாய் வந்துவிடு/

உந்தன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்/

..............................

கார்த்திக்.கோ

19

617

காத்திருந்த காலங்கள் கனவாய் போனது 

கனமழை வந்து சாரலாய் ஆனது

இதயத்தின் தவிர்ப்பு ஏங்கி துடிக்குது

புதிய பயணம் புறப்படும் மனம்


#முதுவைமுகம்

20

238

நெடுந்தூரப் பயணம் நிறைவுறுமா பெருமழையால்../

காத்திருக்கேன் நெடுநேரம் காணலையே தொடர்வண்டி../

கவலைகள் மனதினில் காயமாகுது இதயத்தில்../

சரியான வழியினில் தடம்மாறாமல் பயணிப்பேன்..//


#இளந்தை சேது


21

422

மணித்துளிகள் கடந்தாலும் மனம்கவர் மணாளனின்

மதிமுகம் கண்டிடவே மழைக் குடையுடன்

இருப்புப்பாதை மேடையிலே மங்கையின் காத்திருப்பு

தொடர்வண்டி வந்துவிடும் தொடர்இன்பம் தந்துவிடும்.


க.தங்கவேலு.

22

721

விழிவாசல் திறந்து வழிமேல் கோலமிட்டேன்./

இதயக் கூட்டினுள்ளே பருவமழைச் சாரல்./

வழித்துணையாய் வா வாழ்க்கைப் பயணத்திலே./

என்னை அழைத்துச்செல்  உன்னோடு அணைத்துக்கொள்./


....பாலு தியாகராசன்.....

23

273

ஆளில்லா நடுச்சாமம் அரவமில்லா நிலையம்/

கார்க்கால மழையிரவில் யார்க்காகக் காத்திருப்பு?/

ஊர்பார்க்கத் திரும்பிப்போ ஊதாரிகளை நம்பாதே/ 

உறவோடு சேர்ந்திருந்தால் உயர்வாழ்வு கிடைத்திடுமே!/


கோவிந்தம்மாள் ரெத்தினம்

24

710

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளும்/

அத்துமீறிப் பறிக்கப்பட்ட எம் தாய்மண்ணும்/

மறைந்து போகும் நம் பாரம்பரியங்களும்/

காலமாற்றத்தால் மீண்டுவர காத்திருப்பு தொடரும்/


அம்பிகா ஸ்ரீகுமார்

25

722

உன்னைத் தேடி துடிக்கின்ற உள்ளம்/1

கலங்கிய விழியோடு தளும்பும் நீரோடு/2

காத்திருந்த கணநேரம் கனமாக மனதில்/3

வாடும் இதயம் வரவினால் வாழும்/4


சுஜாதா அருணாச்சலம்

26

207

உள்ளத்தின் கதவுகளை மெல்லத் திறந்தால்/

உண்மை அன்பை இதயம் உணரும்/

காத்திருக்கும் பொழுதுகள் இன்ப மழையாய்/

நேசம் பொங்கிட நினைவுகளாய் பொழியும்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

27

476

உதிர்ந்துகொண்டே  இருக்கின்றன உன்னாசை  மொழிகள்/

பகிர்ந்து கொள்வேன்  பார்க்கும்  கணத்தில்/

கன   மழையும் கனலாய்த் தெரிக்குதே/

கண்மணி காத்திருக்கிறேன் கதகதக்கும் உன்னணைப்பிற்கு/


வ பரிமளாதேவி

28

434

ஐயிரண்டுத்  திங்கள் கருவறையில் ஓய்வெடுத்து/

அழகோவியமாய் பூமிக்கு அடியெடுத்து வைக்கும்/

புதிய அவதாரமான மழலையின் வருகைக்கு/

காத்திருக்கும் உறவுகளோடு அன்னையின் உணர்வுகள் //


மீனாட்சி சுந்தரம்

29

424

காக்க விடுவதில்லை கடமை அழைக்கும்

பாக்க விடுவதில்லை  பங்கெடுக்கும் குடும்பம்

ஒதுக்கிய நாட்கள   ஒவ்வொன்றாகப் போக..

காத்திருப்பு  கானலே காலன் வந்தபின்னே


குயில்.மு.இரசியாபேகம்

30


மாலை நேரம் தகிக்கும் வெப்பம்/

காதலிக்காக காத்திருப்பு வியற்வை குளியலில்/

அழகான நினைவுகளில் திளைத்தபடி நான்/

கவலையை போக்க விரைவில் வருவாளா?/


இளங்கோ

31

204

கொட்டும் மழையிலே  குடையுடன் கன்னி//

கொண்டவன் வருவானோ என்றேதான் எண்ணி//

விழிகள் பூத்திருக்கத் தவிக்கிறாள் காத்திருந்தது//

காலமும் மலரும் காத்திருப்பும் தீரும்//


ஆஸாத் கமால்

32

450

உணர்வுகளில் உவகை இருப்பின் காத்திருப்பு 

சுகமாகும் வலியிருப்பின் காத்திருப்பு சுமையாகும்!

சுமைகளோ சுவைகளோ ஏற்பது மதியாகும்

காத்திருப்பின் உணர்வுகளை புரிவதே சரியாகும்!


ரேணுகா சுந்தரம்

33

386

மழையோ வெயிலோ அவளுக்குப் பொருட்டல்ல/

மனம்நிறை மன்னவன் வருநாளை எதிர்நோக்கி/

நித்தமும் காத்திருப்பு நெடுந்தொடரி வழித்தடத்தில்/

சித்தமும் கலங்குகிறாள் சிந்தையும் மிகநொந்தாள்/.


தென்கரை தாயுமானவன்.

34

381

விழிகளில் மழையும் எண்ணத்தில் வெயிலும்/

நினைவினில் எதிர்பார்ப்பும் கனவாக காட்சிகளும்/

நனவாகிட காத்திருந்தே நங்கையிவளும் இருக்கையானாலோ/

நாளைய பொழுதும் கனிந்திட எண்ணுகிறாளோ/


எம்.ஜே.எம்.சப்ரி

35

463

புகைவண்டி நிலையத்தில் தனிமையில் தவிப்புடன்  /

வருகிறேன் என்றான் இதுவரை வரவில்லை!

காதலில் காக்க வைத்த பாவத்தை

இப்போது சேர்த்து வழங்குகிறான் போலும்/


அரவிந்தன் தஞ்சை

36

447

ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன் நான்,  

பேருந்தில் வருகிறது உன் காதல், 

தவறு யாரிடமென்ற புரிதல் இன்றியே,  

வலியோடு நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை   !


கருவேல் பாண்டியன் ராஜூ

37

744

காதல் கணவனுக்காக கண்விழித்து காத்திருப்பு/

கைநழுவிய காதலுக்காக காலமெல்லாம் காத்திருப்பு

முத்தொன்று முகிழ்க்க பத்துமாதம் காத்திருப்பு/

கண்ணீர் கலந்தாலும் காத்திருப்பில் சுகமிருக்கு.


கவிஞர் கேசவதாஸ்

38

257

அடைமழையில் அடங்காத கண்ணீருடன் கன்னியவள்/

ஆளரவம் அடங்கிய வேளையிலே வேல்விழியாள்/

அமைதியுடன் அமர்ந்தாலே அண்ணலவன் அருகில்வர/

அந்தரங்கமாய் அளவளாவ சுகமான காத்திருப்போ./


இந்திராணிதங்கவேல்

39

464

நினைத்த உள்ளம் உனக்காய் என்றும்

நிம்மதி இன்றி தினமும் தவித்து 

எங்கே எப்போ வருவாய் என்று

அங்கம் நடுங்கி விழிகள் ஏங்கும்


ராஜ்பாரதீ

40

510

காதலன் வருகைக்காக காத்திருக்கும் விழிகள்/

மங்கையவள் சிந்தையில் காதலனின் நினைவுகள்/

மனதிலே எண்ணற்ற கனவுகள் சுமக்கிறாள்/

காதலெனும் ஊற்றில் இதமாய் நனைகிறாள்/


ராதாமணி

41

668

இணையாத இணைகோடாய் புகைவண்டியின் பாதையும்/

விடை தெரியாத மர்மமாய் எதிர்காலமும்/

அலை மோதும் கடலில் கரைச்சேர/

காத்திருக்கும் கப்பலாக தனித்திருக்கும் மங்கை/


ஏஞ்சல்சோபிதா


42

716

அவனின் உருவம் அவளின் மனதில் // 1

மழையே பொழிந்தாலும் அழியாது எளிதில் // 2

தனிமைச் சுவைக்குது உந்தன் வரவில் // 3

காத்திருப்பேன் என்றும் இன்பக் கனவில்.// 4


- நாகை. ஹாஜா

43

317

தூறல் ஒருபுறம் துவண்டது அவள்மனம்

சாரல் காற்றில் தவித்தது அனுபவம்

புகைவண்டிச் சத்தம் கேட்காது இருப்பதும்

ஆயிரம் கேள்விகள் வந்தது பயத்திலும்...


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

44

465

காலம் கடத்தும் நிகழ்வல்ல காத்திருப்பு

வாழும் மனங்களுள்  வாதிடும் நேரமது

போதல் எண்ணங்களை முனைமழுங்கச் செய்தே

காதல் சுவடுகளைக் கணிக்கின்ற நேரமது.


இரா.வெங்கடாசலம்

45

718

காலம் கடந்தாலும், கோலம் கலைந்தாலும்,//

கண்ணே உன்னை நானும் காத்திருப்பேன்!//

மேலான காதலினால், மேகம் பொழிகையிலும்,//

குடையோடு உன்னை, எதிர் பார்த்திருப்பேன்!//


கீழ்கரவை குலசேகரன், இலங்கை

46

373

புகையிரத நிலையத்தில்  புகைமூட்டத்தின் இடையிலே/

புன்னகை சிதறிப்போய் பொழுதும் நகராது/

விழியோரம் கண்ணீரோடு விடையறியாது நிற்கிறேன்/

கண்ணாளன் வரவினை கண்ணிமைக்காது காத்திருக்கிறேன்!!


ஜயந்தினி வாகீசன் 

47

242

காலம் கடந்தே பிறந்திடும் ஞானம்/

ஞாலம் முழுதும் சுற்றியே வந்த போதும்/

பொய்ம்மை மறந்து மெய்ம்மை வெளிப்பட/

காத்திருப்பு அவசியம் காலங்கள் தோறும்......


கவி செங்குட்டுவன்

48

707

வழிகள் எல்லாம் மறையுதே கண்ணில்

வழி ஒன்றில் வந்திடு கண்ணா.!

விழிகள் இரண்டும் கரையுதே என்னில்

விரல் கொண்டு துடைத்திடு மன்னா.!


✍️பா.ச.கண்ணன்


49

604

தொற்றுப் போனதும் தொடர்வண்டி வந்திடும்//

விட்டுப் போன காதலனும் வருவான்/

நம்பிக்கையில் நனைந்திடு 

வேதனையைத் துவட்டிடு//


கவிஞர் கோவை ஆறுமுகம்

50

246

நிலவின் வருகையில் விலகிடும் முகிலாக

புலந்த பொழுதினில் மலர்ந்த தாமரையாக

மழைவரும் நாளில் மங்கை அவளும்

குடையின் நிழலில் காத்திருந்தாள் பயணமாக.


செல்வம் செல்வகுமார்

51

021

எண்ணங்களில் வர்ணம்பூசி கதைகள்பல பேசி/

வண்ணக் கனவுகளை வாரி இறைத்தவனே/

நீள்கவிதையாய் உன்நினைவுகள் நெஞ்சில் சுமையாக/

மழைநீரோடு கண்ணீர் மறைத்து காத்திருக்கிறேன்.


தனம்_மீனாட்சிநாதன், கவிதை 2713

52

711

தேடுகிறேன் தென்றலாய் உன்னை தேசமெங்கும் //

போனயிடம் தெரியாமல் புலம்பவும் முடியாமல் //

புழுவாய் துடிக்குதடா பூவான என்னிதயம் //

எப்போது வருவாயோ? என்னுயிரைத் தருவாயோ? //


                                 நா . தமிழ் சுகு

53

717

காதலன் தன் வரவு காணா

காத்திருந்தாள் கண்ணிரண்டும்

பூத்திருந்தாள் பைங்கிளியாள்

பார்த்திருப்பாள் பருவ மங்கை


கந்தசாமி நடேசன்

54

335

காத்திருக்கிறேன்  விட்டுச் சென்ற  இடத்தில்//

நினைவுகளைச் சுமந்து சென்ற நீ//

மறக்கவோ, துறக்கவோ, தொலைக்கவோ முடியாமல்//

மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையில்//


பரமேஸ்வரி சண்முகம்..

55

347

ஊரோடு  ஒதுங்கி மூட்டைகளும்   நானும்/

துணைக்கு யாருமின்றி தொடர்வண்டிப்  பாதைகளும்/

வெறுமையாய் வேதனைக்கு களிம்பு  தடவுதடி/

காலமெலாம் காத்திருந்து கனக்குது இதயமும்/


வேங்கடலட்சுமி ராமர்


56

580

தேசியக் கடமையை தோளிலே சுமந்து//

நேசித்தே எல்லையில் நாட்டினைக் காக்க//

விரைந்த என்னவன் வருகிறான் விடுமுறையில்//

இரையும் புகைவண்டி பார்த்து காத்திருக்கிறேன்//


சுந்தரலிங்கம் நிருத்திகன்.

அல்வாய்.

57

291

காலங்கள் பல கடந்து சென்றாலும் /

கோலங்கள்  மாறி கோணங்கள் ஆனாலும் /

நெஞ்சில்  வைத்த காதல் நிலைமாறாததால் /

நீ வருவாயென நிதம் காத்திருக்கிறேன் /


ஜெயா தமிழினி

58

669

எண்ணமே நீயாக வாழ்க்கையோ உனக்காக

வாழ்ந்திடவே ஆசைகொண்டு இறுதி முடிவுடனே

உன்னோடு கைகோர்த்து வாழ்ந்திட எண்ணியே

ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் வருகைக்காய்


நஸீரா வசூக்

59

618

காலைக் கதிரவன் கண் விழிக்க/

காதலுடன் வருவேன் காத்திரு என்றான்/

காலம் உருண்டு கார்மேகம் இருண்டது/

காணவில்லை அவனை கனக்கிறது இதயம்/


ஔவை.

60

475

மனதில் நிறைந்து மகிழச் செய்தவனே/

நிலவாய் சிரித்து நினைவில் நின்றவனே/

வழிமேல் விழிவைத்து காத்து இருக்கிறேன்/

விரைவில் வந்திடவும் இங்கே தவிக்கிறேன்/


 தங்க.ஜான்பீட்டர்

61

463

காத்திருக்கும் பருவமகள் /1 

நேற்றுவரை வராதவன் நெஞ்சினிக்க இன்றேனும்/2

காற்றாக வருவானா கைப்பிடித்து மகிழ்வானா/

ஊற்றாகும் இல்லறத்தில் உயிராக வாழ்வானா ?4


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

62

409

புகைவண்டி வரும் நேரம் பேதையிவள்//

பாதைகள் மேடைகளில் மழைத் தூறல்கள்//

பல மணி நேரம் காத்திருப்பு//

பசியும் தாகமும் சோர்வும் சேர்ந்ததுவோ//

***************

க.சுதர்சனக்குரு.

63

613

மனச்சுமையும் கைச்சுமையும் மனதோடு  போராட/

மங்கையவள் காத்திருக்க மனதில் பயம்/

ஏங்கித்  தவிக்குதே ஊரடங்கு  சட்டத்தினால்/

ரயில்வர  தாமதமோ குடையும் பறக்குதே/


ஜெயாசந்திரமோகன்

64

263

கன்னியிவள் கனமழையில்  காத்திருப்பது யாருக்காக//

கடுகதியாய் வரவிருக்கும  புகைவண்டியின் வருகைக்கா//

எண்ணியவன் வருவான் என்ற எதிர்பார்ப்பா//

ஏமாற்றம் உனக்கில்லை என்பேன் நான்//


அன்பரசு சுமதி

65

726

தொடரியின் ஒலியிலே உன் குரல்/

பிரிந்த தண்டவாளத்திலே புரியாத பிரியங்கள்/

காத்திருக்கையிலே காரணமின்றி கண்ணீர் வருகின்றது/

கண்டும் மறைந்த கானல்நீராக நினைவுகள்/


-காளிராஜ்பாலகணேஷ்

66

259

கொட்டும் மழையும் குளிரும் வருத்தவில்லை /

விழி நோக எதிர்பார்ப்பு ஓயவில்லை /

நகரும் நேரத்திற்கு அவதி புரியவில்லை /

ஏக்கத்திற்கு இன்னும் விடிவெள்ளி பிறக்கவில்லை....!!/


ஜெயலெட்சுமி

67

256

காலங்கள் கடந்தாலும் ஊரடங்கு நீங்கவில்லை/

கன்னியவள் சொந்தவூர் கனவும் பலிக்கவில்லை/ 

கையில் பெட்டியுடன் கால்நடையாய் வந்தவள்/

காத்திருக்காள் குடைபிடித்து தொடர்வண்டி பயணத்துக்காய்/


      .......நட்புடன் ஜெயபால் வி.பி.

68

278

கடுகதியில் மறைந்ததே கனவாக எந்தேசம்/

கனத்த மழையோடு கனமாக என்நேசம்/

காத்திருந்து காலங்கள் கானலாகிப் போகிறதே/

ஏங்கிடும் விடிவுகள் என்றுதான் கிட்டுமோ?/.


கிருஷ்ணலதா வசீகரன், ஜெனீவா- சுவிஸ்

69

709

முன்பதிவு  இல்லாமல்  நடைமேடை அமர்ந்துகொண்டே// 

தடம்போலே  காத்திருப்பேன் காலமெல்லாம் உடனிருக்க// 

இணைக்கோட்டுப் பயணங்கள் இனிதாக இருந்திடவே// 

தவிப்பிலே நனைகின்றேன் குடைப்பிடித்து  மறைக்கின்றேன்// 


தாழை. இரா. உதயநேசன்

70

674

கடுகதியில் தொலைந்த எந்தன் இதயத்தை//

காலங்கள் கடந்த  பின்னும் காதலோடு//

கன்னி   நானும்  கவலையோடு காத்திருக்கிறேன் //

கண்ணாளனே வருவாயோ கண்ணீரும் துடைத்திடவே//


இரா.தேவி

71

270

தண்டவாளம் தவிக்கிறது தடம்பதியா வண்டியாலே  !//

அண்டைநாடு    அயல்நாடு நம்நாடு எல்லாமும்  !//

திண்டாடும்   மக்களுடைத் தெருக்கூத்துத் தெரியவில்லை  ?/

பெண்ணவளே போய்விடு பேசாமல் வீட்டிற்கு  !//


தளவை வில்லவன்கோதை .அண்ணாமலைப்புதூர் .

72

283

கடுங்குளிரில் கடுகதிக்காய் கனநேரம் காத்திருந்து/  

காததூரம் கடப்பதற்காய் கனதியான பொதியுடனே/

கனமழையின் மத்தியிலே கனவுபோலே கடந்திடலாம்/

கார்காலம் நிலைக்குதே நாடெல்லாம் செழிப்பதற்கே/


ஜமுனாமலர் இந்திரகுமார்

73

226

தொடரும் மழையிலே பார்வைத் தேடியதே/ /

வராத தொடர்வண்டி காத்திருப்பைக் கூட்டியதே/ /

காத்திருந்த நிமிடங்க ளில் எண்ணமெலாம் படபடப்பே/ /

குடையைத் தாக்கும் காற்றின் வீச்சு/ /

&&&&&&&&&&&&&&&

இராம.சுதாகரன்.!!

74

421

கல்யாணம் வரும்வரை காத்திருக்கும் காதல்/

பொருமை வாழ்க்கையில் புரிதல்கள் ஆயிரம்/

காத்திருப்புத் தந்திடும் கணக்கில்லாச் சந்தோசம்/

காலமெல்லாம் குறையாமல் கடலாகப் பொங்கிடுமே/


---செம்போடை சோழன்---

75

201

விரைவாக வருவேன் விவாகம் செய்ய /

விட்டுச் சென்றவனைக்  காத்திருக்கும் கன்னியவள் /

கடுங்குளிரிலும் நடுநடுங்கஎதிர்பார்த்து நிற்கிறாள்/

காதலன் வருவானோ கண்ணீரைத் துடைப்பானோ//


புவனா சற்குணம்  கனடா

76

596

காத்திருப்பு இது மிகக் கடினமானது/

பூத்த மலரில் தேனருந்த வண்டு/

மூத்தவள் மணம் முடிய தம்பி/

காத்திருப்பதைப் பார் மிகப் பொறுமையாக


சிவகாமசுந்தரி நாகமணி, சென்னை

77

399

🌹/ காத்திருப்பும் சுகமே காலதாமதமோ சோகமே!.../

🌹/ எதிர்பார்ப்பும் மோகமே  ஏமாற்றமும் மோசமே!.../

🌹/ தணியுமா தாகமே  தாவணியும் நனையுதே!.../

🌹/ காலமும் விரயமே கன்னியும் கலங்காதே!.../


சாக்கை.பொன்னழகு.

78

261

காத்திருப்பு எப்போதும் பொறுமையை சோதிக்கும்

அமைதி காத்திடில் ஆனந்தம் கிட்டிடும்

எதற்காக வேண்டுமெனினும் நாம் காத்திருக்கலாம்

நமக்காக எவரையும் காத்திருக்க வைக்கலாகாது !


~ வள்ளல் இராமமூர்த்தி

79

289

கொட்டும்  மழையில் தொடர்வண்டி  நிலையத்தில் /

காதலனின்  வரவுக்காக அவன்   மேல்  /

அசைக்க முடியா நம்பிக்கை  வைத்துக்  /

காத்துக்  கிடக்கும்   அப்பாவிக்  காதலி  /


சியாமளாரகுநாதன்

80

562

மழலையின் பிறப்பை எதிர்பார்க்கும்       குடும்பம் /            

காதலியின் வருகையை நோக்கிக் காதலன்/

வாழ்ந்து முடிந்தவர் இயற்கையோடு இணைய/

காத்திருத்தல் இல்லாமல் இல்லாமல் கடந்திடாது வாழ்கை/


பா.பத்மநாபன்

81

564

நீ வருவாயென நிலவை அழைத்தேன் 

நீண்டு கொண்டு போகின்றது இரவு 

தீண்டும் என் மனதில் ஏக்கம்

உன் நினைவாகவே உறக்கம் இன்றி.


இராசையா கௌரிபாலா, இலண்டன்.

82

244

எண்ணற்ற எண்ணங்களின் வலிமைத்  துணிவே //

தன்னம்பிக்கை கொண்டே விதியைத் துரத்து //

விழிப்புணர்வு ஒன்றே போதும் துணைக்கு  //

காத்திருக்க நேரமில்லை பொறுமையும் உனக்கெதற்கு //


கவிஞர் கோவை செல்லப்பன்

83

210

வண்டியிலே வருவானென வாஞ்சையுடன் காத்திருக்க...

வாராமல் போனதனால் வஞ்சியிவள் தவித்திருக்க...

கொட்டும் மழையிலும் வாட்டும் நினைவிலும்...

கண்ணீரும் அருவியாக தண்ணீரில் கலக்கின்றதே....


திருமதி சுப்ராணி சிவகுமார்....✍

84

723

கையசைத்து விட்டுப் பிரிந்தாய் அன்றுநீ/

ஊரெங்கும் கொரோனா எல்லையில் நீயங்கே/

நாட்டுக்குள்ளும் எல்லையிலும் எதிரிகளை வென்றிடும்/

அந்நாளிற்க்காக மழையிலும் வெய்யிலிலும் காத்திருக்கிறேன்


- நெல்லை ஆடலரசன்@Natarajan   துபாய்   

85

578

மன்னவன் நினைவுதனை மனதினில் சுமந்தப்படி//

குறைவற்ற அன்போடும் கலங்கமற்ற காதலோடும்//

கடந்தோடும் நொடிகளின் காத்திருப்பும் சுகமானதேன//

பதிந்திடும் சுவடுகளாய் காலதேவன் ஏட்டினிலே//


...கவியாசகன்...!!!

86

708

பனி படரும் மேனியிலே பரிதவிப்பு/

பால் போன் மனதினிலே காத்திருப்பு/

நீங்கிச் சென்ற காதலா கனிவுடனே/

நீயும் வா கை கோர்ப்போம்....//


திருமதி பிரிந்தா புஷ்பாகரன்

87

654

மிதமான சாரலின் இதமான குளிரில்  

தன்னந்தனியே  காத்திருக்கிறாள் மங்கையொருத்தி இரயிலடியில்!    

காத்திருக்க வைத்தது  தொடரியா அவளவனா!    

புலர்காலைப் பொழுதுவரை  காத்திருப்பு நீளுமா!   


பொன்.சுந்தர பாண்டியன் சோழவந்தான்

88

692

பூத்திருக்கும் மலராய் புன்னகை வரவு/

விரைவில் வந்திட வழி மேல்/

வழி வைத்தவளாய்க் கனவுகளோடு காத்திருக்கிறாள்!/

தொடர்வண்டியில் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்திட!/


முனைவர். சு.சித்ரா கரூர் தமிழ்நாடு


போட்டி முடிவுற்றது


89

745

எதிர்பார்ப்புடன் காத்திருப்பு எத்தனை சுகம் /

கொட்டும் மழையில் நடுங்கும் குளிரில்/

துணையின்றி நிற்கும் உனக்குத் தூரத்தே/

நல்ல செய்தி தூது வரும்.


க.சுலோஜனா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages