05.10.20- ரேவா : 52 : நந்திவர்மனின்_மனோரதம் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 5 அக்டோபர், 2020

05.10.20- ரேவா : 52 : நந்திவர்மனின்_மனோரதம்

 



05.10.20


ரேவா


நந்திவர்மனின்_மனோரதம்_52


இரவு நித்திரையில் ஆழ்வதற்கு மூன்றாம் ஜாமத்திற்கு மேலாகி விட்டதனால் , காலைச் சூரியன் உதயமாகி இரண்டரை நாழிகைக்கு மேல் தான் எழுந்தான் நந்திவர்மன். இராஷ்டிர கூட மன்னன் தந்திதுர்க்கனிடம் விசாரித்து விட்டு மஞ்சத்தில் விழுந்தவனுக்கு நித்திரையானது உடனே வரவில்லை, சாளுக்கியரது படைகள் காவிரி ஆற்றங்கரையில் நிலை கொண்டிருப்பது எதனால்..? என்ற குழப்பத்தோடு, அவனது எண்ணச் சுழலில் ரேவாவும் அடிக்கடி வந்து முகம் காட்டினாள். நதியில் வழுக்கி விழுகையில் தொட்டுக் காப்பாற்றிய  போது எழாத உணர்வு,  இப்போது நினைவில் வந்து இம்சித்துக் கொண்டிருந்தது. படபடக்கும்  அவளது கண்ணிமைகளும், மலருக்கு மலர் தாவும் கருவண்டென சுழன்ற விழிகளும் அவனது நினைவில் சுழன்றாடி இம்சித்துக் கொண்டிருந்தன. நமக்கு இருக்கும் இந்த உணர்வு அவளிடத்திலும் பிறந்திருக்குமா என எண்ணவும் தலைப் பட்டான். உண்மையில் ரேவாவிடமும் அதே நிலை தான். பருவத்தில் விளையும் ஈர்ப்பு இருவரிடத்திலும் ஒரே நேரத்தில் பிறந்திருந்தது.


ரேவாவின் நினைவிலேயே புரண்டு கொண்டிருந்தவன், ஒரு வழியாய் இரவின் மூன்றாம் ஜாமத்திற்குப் பின் நித்திரையில் ஆழ்ந்து விட்டதனால், காலையில் எழுவதும் தாமதமாகி விட்டது. அவசரமாய் எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நீராடி விட்டு தனது அறைக்குள் நுழைந்தவனை, ஒரு காவல் வீரன் படைத்தலைவர் உதயச்சந்திரன் அழைப்பதாக தெரிவிக்கவே., விரைவில் ஆயத்தமாகி உதயச்சந்திரனைக் காணச் சென்றான்.


அங்கு நீராடி முடித்து, ஆயத்தமாய் அமர்ந்திருந்த உதயச்சந்திரனைக் கண்டதும், இவரும் நேற்றிரவு நாம் நித்திரைக்குச் சென்ற பின்னர் தானே சென்றிருப்பார்..எழும் போது விரைவில் எழுந்து விட்டாரோ..! இவரது கடமை உணர்வு மெய்ச்சிலிர்க்கச் செய்கிறதே..! என எண்ணிக் கொண்டான் நந்திவர்மன்.


" மன்னருக்கு வணக்கம்.. உணவினை முடித்துக் கொண்டு நாம் வைகுண்டப் பெருமான் ஆலயத் திருப்பணி நடைபெறுவதைக் காணச் செல்ல வேண்டும்." என்றான் உதயச்சந்திரன்.


" ம்...செல்லலாம்..எனக்கும் ஆர்வமாகத் தான் உள்ளது. பல வருடங்களாகி விட்டதல்லவா..! " என்றான் ஆர்வம் தொனித்த குரலில் நந்திவர்மன்.


சற்று நேரத்தில்..


இருவரது புரவிகளும் வைகுண்டப் பெருமாள் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.


நந்திவர்மனது எண்ணமோ, ஆலயத் திருப்பணி எந்தளவில் இருக்கும்..?! எனச் சிந்தித்தபடியே வந்து கொண்டிருந்தான். ஆனால் உதயச்சந்திரனோ, தந்திதுர்க்கனுக்கு பியூஷாவைப் பற்றிய இரகசியம் தெரிந்திருக்க வேண்டும்...எதனாலோ அதை மறைக்கிறார். எப்படியாவது அவரிடமே அந்த இரகசியங்களை கேட்டறிதல் நல்லது எனப்  பலவாறாக சிந்தித்தபடி வந்து கொண்டிருந்தான்.


இருவரது புரவிகளும் தங்களது எஜமானர்களின் மனநிலை அறிந்ததைப் போல் சீரான எட்டு வைத்து " டக்..டக்.." என நடந்து கொண்டிருந்தன.


வைகுண்டப் பெருமாள் ஆலயம் என்றும், பரமேஸ்வர விண்ணகரம் என்றும் அழைக்கப் படும்  அந்த ஆலயத்தின் திருப்பணி வெகு மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுற்றிலும் மரங்களாலும், மூங்கில் களாலும் சாரம் கட்டப் பட்டிருக்க, கருவறை முகப்பில் இருந்து மண்ணாலும் சாரம் அமைக்கப் பட்டிருந்தது .பெரும் பெரும் கற்களை எளிதில் உருட்டித் தள்ளி கோயில் கருவறையைச் சென்றடைய மண்ணால் ஆன சாரமே பயன்பட்டது. அவர்கள் முன்னர் பார்த்த போது , ஏக தளமாகத் தோண்டப் பட்டிருந்த தளத்தில் அமைந்த கருங்கல் கட்டில் இருந்து, சித்ர ஜெகதி முதல் வரிசையாக பத்ம ஜெகதி, கண்ட ஜெகதி,  பட்டியல் ஜெகதி, அலங்கார ஜெகதி, கால்வரி ஜெகதிகள்  என பல வரிசைக் கட்டு ஜெகதிகள்  மளமளவென பல வரிசையாக கட்டப்பட்டிருந்த அடுக்கில் இறுதியாக உத்தர வரியின் வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. 


இருவரும் ஆலயத்தின் வளாகத்தில் நுழையும் பொழுது , கொல்லர்கள்  உளிகளை தட்டவும் , பதமேற்றியும் கொண்டிருந்தனர். மற்றொரு புறம் கல் தச்சர்கள் பெரியபெரிய பாறைகளினை உடைத்து கருவறைக்கு மேல் அமையும் கபோத வரிகளையும், வியாழ ஜெகதிக்கான  வரிகளையும் உளியால் செதுக்கும் பணியை ஒரு பக்கம் , மற்றொரு பக்கம் உள் பிரகாரம், மற்றும் வெளிப்பிரகாரத்திற்கான வேலைகளும் முழுவீச்சில்  தொடங்கி நடந்து  கொண்டிருக்க, தனது முகத்தில் பூரன திருப்தியைப் படர விட்டவனாய் , 


"படைத்தலைவரே எனக்கு இப்போதே வைகுண்ட வாசன் இங்கு வந்து விட்டதாக தோன்றுகிறது " என்றான் மகிழ்ச்சி பொங்கிட நந்திவர்மன்.


" உண்மை தான்..சிற்பிகளின் பணி பாராட்டுக்குரியது.." என்றான் உதயச்சந்திரன்.


இவர்கள் இருவரைக் கண்டதும் தலைமைச் சிற்பி ஓடி வந்தார்.


" வணக்கம் அரசே..வணக்கம் படைத்தலைவரே..வெகு தினங்களாக தங்கள் இருவரையும்  இப்பக்கம் காணவில்லையே ..? " என்றார்.


" ஆம்..எனது  கல்வியின் நிமித்தம் வெளியே சென்றிருந்தோம். " என்றான் நந்திவர்மன்.


" அரசே..கருவறை வேலை மட்டுமின்றி , பிரகாரத்தின் வேலைகளுக்கான பாறைகளும் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. கருவறைக்கு தேவையான அனைத்து ஜெகதி வரிசைகளும்  தயாராகி  விட்டன. தங்களது விருப்பத்தின் படி இங்கு இறைவனை மூன்று நிலைகளிலும் தரிசிக்கலாம். நின்ற நிலை, அமர்ந்த நிலை, சயன நிலை என மூன்றடுக்கில் கருவறை அமைய விருக்கிறது.."


" நல்லது சிற்பியாரே..அத்தோடு நமது ஆலயத்தின் பிரகார சுவரில் #பல்லவ #மன்னர் #சிம்மவிஷ்ணுவின் காலத்தில் இருந்து என் காலம் வரை மன்னராய் இருந்தவர்களது மகுடாபிஷேக சிற்பங்களும் இடம் பெற வேண்டும். பல்லவரது பெருமை பல காலம் நீடித்திருக்க வேண்டும். நாம்  மறைந்து விடலாம்..ஆனால் இதோ நீங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் ஆலயம் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் உங்களையும் , என்னையும் நினைவு படுத்திக் கொண்டிருக்கும், என்பதனை நினைவில் கொண்டு ஆலயச் சிற்பங்கள் வடிவமைக்கப் பட வேண்டும். பல்லவர்களின் பெருமை பேசும் ஆலயமாக இது திகழ வேண்டும் ." என்றான் பெருமை பொங்க நந்திவர்மன்.


" தங்கள் மனோரதம் நிறைவேறும் மன்னர் பிரானே.." பவ்யமாய் எழுந்தது சிற்பியின் குரல்.


அப்போது அவ்வளாகத்திற்குள் விரைந்து நுழைந்து கொண்டிருந்தான் புரவியில் ஒரு வீரன்.


" மன்னருக்கும், படைத்தலைவருக்கும் வணக்கம்..அவசர ஓலையொன்று வந்தது, தாங்கள் அரண்மனையில் இருந்து இங்கு வந்திருப்பதாக அறிந்து இங்கேயே கொண்டு வந்து விட்டேன். இதோ.." என்றபடியே ஓலையை நீட்டினான்.


வீரன் கொண்டு வந்த ஓலையினைப் படித்த நந்திவர்மனது முகம் மகிழ்ச்சியால் விகசித்தது.


ஓலையைப் படித்து விட்டு உதயச்சந்திரனிடம் தந்ததோடு, " இங்கு வரும் போது தான் அவரைப் பற்றி எண்ணினேன்..இதோ..அவரே நாளை காஞ்சி வருவதாக ஓலை அனுப்பி இருக்கிறார்.." என்றான் மகிழ்ச்சி குரலிலும் தொனிக்க.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : சென்னையைச் சேர்ந்த முனைவர் சி.மீனாட்சி என்பவர் , முனைவர் பட்டத்திற்காக வைகுந்தப் பெருமாள் ஆலயத்தின் சிற்பங்களை ஆவணமாக்கினார். அதுவே  இன்று அதிகார பூர்வ பல்லவரது ஆவணமாகத் திகழ்கிறது. இவரே சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றவர். கோயிலில் நுழைந்தவுடன் இடது புற மேற்குப் பகுதி சுவரில் துவங்கி நந்திவர்மனை காஞ்சிக்கு அழைத்து வந்து, மன்னனாக முடிசூட்டுவது மற்றும் கோவில் கட்டுவது  வரை சிற்பத் தொகுதியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. சிற்பத்தோடு கிரந்த எழுத்துக்களும் பதிக்கப் பட்டுள்ளன.இன்று பல சிதைந்து போன நிலையிலும் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages