11.10.20 - ரேவா : 58 : பல்லவரது_வெற்றிப்பயணம் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 12 அக்டோபர், 2020

11.10.20 - ரேவா : 58 : பல்லவரது_வெற்றிப்பயணம்

 



11.10.20


ரேவா


பல்லவரது_வெற்றிப்பயணம்_58


பல்லவ தேசமானது வடகிழக்குப் பாரத தேசங்களை வென்று வருவதற்காக பரிவேள்வி நடத்தி, உதயச்சந்திரனது தலைமையில் பெரும்படையானது காஞ்சியிலிருந்து கிளம்பிச் சென்றது.


இராஷ்டிரகூடத்தின் மன்னன் தந்திதுர்க்கன் தனது மகள் ரேவாவை கடிகையில் சேர்த்து விட்ட காரணத்தாலும், சாளுக்கிய வீரர்களிடமிருந்து தன்னையும், தனது மகளையும் காப்பாற்றியக்  காரணத்தாலும்,  நந்திவர்ம பல்லவனுக்கு உதவும் பொருட்டு , பல்லவ சேனைகளுடன் உதவியாக அவனும் சென்றான். பல்லவர்களைப் பொறுத்தவரை அவன் நர்மதை ஆற்றங்கரையைச் சார்ந்த தக்காண பகுதியின் மன்னன் என்பதனால் , அப்பகுதியின் விபரம் அறிந்தவரை அருகில் வைத்திருப்பது நல்லது என முடிவெடுத்திருந்ததோடு, கூடவும் அழைத்துச் சென்றனர்.


வடபெண்ணை ஆற்றங்கரையில் கடப்பை, கர்நூல் நகரங்களை மையமாக கொண்ட #ரேணாடு சோழர்களை எதிர்கொண்டது பல்லவரது புரவி. ரேணாடு சோழர்கள் புரவிக்கு மரியாதை செய்து அடிபணிந்தனர் . ரேணாடு சோழர்களிடமிருந்து பெரும் நிதியாக பொன்னும் பொருளும் பெற்றவர்களாய் தொடர்ந்தது பல்லவரது பரியின் பயணம்.


வெயிலின் தாக்கமில்லாத அதிகாலை வேளைகளிலும், மாலை, இரவு வேளைகளிலும் மட்டுமே படைகளை நடத்திச் சென்ற உதயச் சந்திரன், கதிரவன் உக்கிரமாய் தகிக்கும் வேளைகளில் படைகளுக்கு பூரண ஓய்வினை அளித்தான். ஆங்காங்கு நீர்நிலைகளில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளவும் செய்தது பல்லவரது படை.

உதயச் சந்திரனும்  பியூஷாவும்  காஞ்சியில் பேசிக் கொண்டதோடு சரி, இடையில் இருவருமே பேசுவதற்கு தகுந்த வாய்ப்பு அமையவில்லை. உதயச்சந்திரனுடன் தந்திதுர்க்கனோ, காடவ முத்தரையரோ, ஒற்றன் சீராளனின் நண்பனும் பல்லவ நாட்டின் மற்றொரு ஒற்றனான சேந்தனும் உடன் இருந்து கொண்டேயிருந்தார்கள். பல்லவ தேசத்தை விட்டு வந்து இரண்டு பட்சம்  கடந்திருந்தது.


பல்லவரது படை அடுத்தபடியாக கிருஷ்ணா நதியை கடந்து கீழை சாளுக்கிய நாடான வேங்கிக்குள் நுழைந்தது. பல்லவரது பெரும்படையை எதிர்க்க திராணியற்ற கீழைச் சாளுக்கிய மன்னன் வேங்கியின் விஷ்ணுராசன் பல்லவருக்கு பணிந்ததோடு, பொன்னும், மணியும் தந்து, கப்பம் கட்டவும் எதிர்ப்பின்றி ஒத்துக் கொண்டான்.


அங்கு ஒரு நாள் தங்கிய பல்லவரது படைகளுக்கு சிறப்பான வசதிகளை செய்து தந்து, உணவினையும் வழங்கி கௌரவப்படுத்தி அனுப்பி வைத்தான் கீழைச் சாளுக்கிய விஷ்ணுராசன்.


அடுத்தபடியாக , பல்லவரது பரியானது பிருதிவி வியாக்கிரன் எனும் சிற்றரசனது நகருக்குள் நுழைந்தது.


" புரவியை அனுப்புவார்களாம்..அதற்கு அடிபணிய வேண்டுமாம்..! என்னால் இதனை ஏற்க இயலாது..வருவது வரட்டும் .." என்ற எண்ணங்கொண்டவனாய், பல்லவரது  புரவியை தனது அரண்மனை வாயிலில் கட்டி வைத்து விட்டான் பிருதிவி வியாக்கிரன்.


பல்லவரது சார்பாக காடவ முத்தரையர் இவனை வந்து தூதுவனாகச் சந்தித்தார்.


" அரசே..பல்லவரது சேனை மிகப் பெரிது, தாங்கள் சிற்றரசர், வீணாக மோதுவதை தவிர்த்து, திறை செலுத்தி விடுங்கள் . பல உயிர்கள் பலியாவதை தடுக்கலாம்" என்றார் பக்குவமாய்.


" ஐயா..இது போல மிரட்டித்தான் அசுவமேத யாகம் நடத்துவதா..! இது தான் பல்லவரது வீரமா..! துணிவிருந்தால் என்னை வென்று விட்டு இங்கிருந்து நகருங்கள் ." என்றான் அகங்காரம் தொனிக்க பிருதிவி வியாக்கிரன்.


" உன்னுடைய ஆசையை வீணாக நான் ஏன் கெடுப்பானேன்..தயாராக இரு, நாளை சூரிய உதயத்தில் உனது படைகளுடன் பல்லவரது சேனை பொருதும்..வருகிறேன்." கோபமாய் கூறியபடி வந்து விட்டார் காடவ முத்தரையர்.


மறுதின சூரிய உதயம், நல்விடியலாக பிருதிவி வியாக்கிரனுக்கு அமையவில்லை. அவனது சிற்றரசு சிதறியது. கடலில் எழும் ஆழிப்பேரலையென பல்லவரது படைகள் வியாக்கிரனது படைகளை துவம்சம் செய்தன. நடைபெற்ற போரில் தோற்றுத் துவண்டவனாய், தலைகுனிந்து நின்றான் வியாக்கிரன். அவனிடமிருந்தும் பொன்னையும், ஏராளமான நிதிகளையும் கைப்பற்றிக் கொண்ட பல்லவரது சேனை , அவனது நகரை சிதைத்ததோடல்லாமல் முதியோர், பெண்கள், குழந்தைகளைத் தவிர்த்து ஆடவரை முடமாக்கி விட்டு, வடக்கு நோக்கி முன்னேறியது.


                         *            *             *


ஸஹ்யாத்ரி மலைத்தொடரின் அடிவாரத்தில் காவிரி ஆற்றின் ஓரத்தில் பாசறை அமைத்துத் தங்கியிருந்த சாளுக்கிய இளவரசன் கீர்த்திவர்மன் தன் முன்னால் நின்று கொண்டிருந்த ஒற்றன் வீரபத்ரனைப் பார்த்து,


" உண்மையாகவா சொல்கிறாய்..! பல்லவரது சேனை பரிவேள்வி நடத்தி வடக்கு நோக்கி நகர்ந்திருக்கிறதா..! " என்றான் ஆச்சர்யம் தொனித்த குரலில்.


" ஆம்..இளவரசே.."


" படைகளைத் தலைமையேற்று நடத்திச் செல்வது யார்..? "


" உதயச்சந்திரன்..அவனோடு தந்திதுர்க்கன் செல்வதையும் கண்டேன்."


" ம்....அப்படியெனில் காஞ்சியில்..."


" நந்திவர்மன்  மட்டுமே இருக்கிறான் , அவனோடு பல்லவ தளபதி பல்லவடி அரையனும் உடனிருக்கிறார்.." என்றான் வீரபத்ரன்.


" பல்லவரது சேனைகள் , காஞ்சியில் தற்சமயம் எவ்வளவு இருக்கும்..? " புருவங்களை உயர்த்தியபடி யோசனையுடன் வினவினான் கீர்த்திவர்மன்.


" ஐயாயிரம் சேனைகள் காஞ்சியில் தங்கி விட்டதாக கேள்வி..! "


" அருமை..அருமை..நல்லதொரு வாய்ப்பு. காஞ்சியை வசப்படுத்த இதைவிட சிறந்த சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது.." சொல்லிக் கொண்டுப் போனவனை, இடைமறித்தது கூடார வாயிற் காவலனது குரல்.


" இளவரசே..நமது தலைநகரில் இருந்து தனஞ்செயன் செய்தி கொண்டு வந்திருக்கிறார் ."


" வரச்சொல்..அவனை.."


தனஞ்செயன்  தலைவணங்கி பணிந்து நின்றவனாய், தனது இடைக்கச்சையில் இருந்து ஒரு குழலை எடுத்து நீட்டினான்.


கீர்த்திவர்மன் குழலை வாங்கி , உள்ளிருந்து ஓலையைப் பிரித்து படித்தவன் , சற்றே எரிச்சலுற்றான். அதில் கண்டிருந்த செய்தி. அவனை உடனே பாசறையைக் கலைத்துக் கொண்டு தாமதிக்காமல்  சாளுக்கிய தலைநகர் வரும்படி அவனது தந்தையும், சாளுக்கிய சக்கரவர்த்தியுமாகிய விக்கிரமாதித்தன் பணித்திருந்தார்.


கீர்த்திவர்மனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது, வாயிற் காவலனை அழைத்து , " உபதளபதியை வரச்சொல் .." என இரைந்தான்.


வந்து நின்ற உபதளபதியிடம்,  "பாசறையை கலையுங்கள்..நாம் உடனே கல்யாணபுரம் செல்ல வேண்டும் , சக்கரவர்த்தியின் உத்தரவு" , என்றான் எரிச்சலும், கோபமும் துளிர்க்க.


விபரமறியாத அவனோ, ஒன்றும் புரியாமல் தனஞ்செயனையும், வீரபத்ரனையும் மாறிமாறி பார்த்தபடி வெளியேறினான்.


மாலைக் கதிரவன் மெல்ல கீழ்வானில் மறைந்து கொண்டிருக்க..அந்த இடத்தை உடனே இருள் சூழ்ந்து கொள்ளத் துவங்கியது.


_ தொடரும்..


#அனுராஜ்..


குறிப்பு : ரேணாடு சோழர்கள், தெலுங்கு சோடர் என தங்களை அழைத்துக் கொண்டதோடு , தங்களை கரிகாலன் வழி வந்தவர் என்றும் கூறிக் கொண்டனர். கரிகாலனது இமயப் படையெடுப்பின் போது , திரும்பி வருகையில் கரிகாலனது மகன் ஒருவன் வடபெண்ணை ஆற்றின் வளத்தில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டதாகவும், அவனது வழித் தோன்றல்களே ரேணாடு சோழர்கள் எனவும் தங்களைக் கூறிக் கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages