12.10.20 - ரேவா : 59 : கோதாவரி_நநிக்கரையில் - தென்குமரிக் கவிதைக்களம்

திங்கள், 12 அக்டோபர், 2020

12.10.20 - ரேவா : 59 : கோதாவரி_நநிக்கரையில்

 



12.10.20



ரேவா


கோதாவரி_நநிக்கரையில்_59


பல்லவரது சேனை கோதாவரி நதிக்கரையை வந்து சேர்ந்திருந்தது. ஆங்காங்கே மலைகளையும், கானகங்களையும், சமவெளிப் பகுதிகளையும் கடந்த பெரும் பயணமாய் அமைந்திருந்தது.


தனது ரதத்தில்  அமர்ந்தபடி இயற்கையின் பேரெழிலை ரசித்துக் கொண்டே வந்தாள் பியூஷா. துள்ளி ஓடும் மான்களும் , தாவிக் குதித்தோடும் முயல்களும், அவ்வப்போது கானகத்தின் பேரமைதியைக் குலைக்கும் கொடிய விலங்குகளின் உறுமல்களும், சீற்றங்களும் படைகளின் ஆரவாரக் கொண்டத்தின் முன்னே சற்று அடங்கியே போயின. 


முன் சென்ற காடுவெட்டி படையினர் பாதையினை சீரமைத்தும், சாலைகளை மறைத்து வளர்ந்திருந்த செடி,கொடிகளை களைந்தும் சென்று கொண்டிருக்க, பின்னே ஆட்டமும் , பாட்டுமாய் பல்லவரது சேனை உற்சாகத்துடன் நடைபோட்டுக் கொண்டு போனது. 


கோதாவரி நதி பொங்கி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்க, பல்லவரது படை அதனைக் கடக்க பெரியபெரிய மரங்களை வெட்டி பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. தேர் ஓடும் அகலத்திற்கு செவ்வனே அமைக்கப் பட்டப் பாலத்தைக் கடந்தவுடன் காணப்பட்ட பெரும் சமவெளியும், அடர்ந்த தோப்புமாய் காணப்பட்ட இடத்தினை தேர்வு செய்த தந்திதுர்க்கன் அங்கு  பாசறையை அமைக்குமாறு பணித்தார்.


கூடாரங்களை அமைத்து அதன் மேல் பட்டொளி வீசிப் பறக்கச் செய்தனர் நந்தி கொடியை.


நடுநாயகமாக அமைக்கப் பட்டிருந்த கூடாரத்தில் போடப்பட்டிருந்த ஆசனங்களில் , உதயச்சந்திரனும், தந்திதுர்க்கனும், காடவ முத்தரையரும் அமர்ந்திருந்தனர்.


அனைவருக்குமான உணவு தயாரிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.


அங்கே நிலவிய அமைதியைக் கலைத்தவராய், தந்திதுர்க்கன் பேசத் துவங்கினார், " படைத்தலைவரே இரண்டொரு நாளில் எனது தேசத்தின் படைகள் இங்கு கோதாவரி நதிக்கரையை வந்து சேர்ந்துவிடும். அதற்கான முன்னேற்பாடுகளை செய்துவிட்டுத் தான் வந்தேன்." என்ற அவரது குரலில் பூரண மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது.சொந்த மண்ணினை காணும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அவரிடம் காணப்பட்டது.


" தந்திதுர்க்கரே, நாம் இனி எதிர் கொள்ளப் போவது யாரை..? " ஆவலுடன் கேட்டார் காடவ முத்தரையர். வயது ஐம்பதைக் கடந்திருந்தும் இளமையின் வேகம் அவரிடம் மிகுந்து காணப்பட்டது. 


" சபரி தேசத்து உதயணனை.."


" சபரி தேசமா..! "


"  ஆம்.முத்தரையரே..நாம் அடுத்து சந்திக்கப் போகும் எதிரி மிகமிக ஆபத்தானவன். நமது இந்த யுத்தம் சற்று கடுமை நிரம்பியதாக இருக்கலாம். சபரி தேசத்தின் மன்னன் உதயணன் வீரத்தோடு, வஞ்சமும் நிறைந்தவன்." கூறிய அவரது குரலில் வெறுப்பே மண்டிக் கிடந்தது.


" என்னுடைய படைகள் வந்து சேரும் வரை இங்கு நாம் அமைதியாகப் பொழுதினைக் கழிப்பதே  நல்லது. நாளை பொழுது விடிந்ததும் கோட்டையைக் கடந்து நகருக்குள் நானும் உதயச்சந்திரனும் மாறுவேடத்தில்  சென்று வருகிறோம். உதயணனுக்கும் நாம் முகாமிட்டிருக்கும் விபரம் இப்போது தெரிந்திருக்கும். நமது பரிவேள்விப் பயணத்தை அவனும் அறிந்திருப்பான். அவனது போர் ஆயத்தம் குறித்து நாம் நகருக்குள் சென்று அறிந்து வருவதே நல்லது . "என்றார்.


" இங்கிருந்து நகர் எத்தனை காத தூரம்.?" யோசனையுடன் கேட்டான் உதயச்சந்திரன்.


" மூன்று காத தூரம்.."


உதயச்சந்திரனுக்கும் போருக்கு முன் சபரி நகரைக் காணும் ஆவல் பிறந்தது.


வானத்து சந்திரன் தன் குளுமையான கரங்களால், அந்தக் கானகத்தைக்  கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டிருந்தான். பாலென பொழிந்த நிலவும், வானில் கண்சிமிட்டிய நட்சத்திரக் கூட்டங்களும் , கோதாவரி நதியின் சலசலப்பும், கானகப் பெருமரங்களில் இருந்தும், காட்டு மலர்களில் இருந்தும்  நாசியை வந்தடைந்த கதம்ப மணமும், கூட்டை அடைந்த பட்சிகளோ அமைதியாய் இருக்கையில் கூகைகளும், கோட்டான்களும் எழுப்பிய கூக்குரலும் பியூஷாவை கூடாரத்தை விட்டு வெளியே வரச் செய்திருந்தது. 


ஆங்காங்கே மரங்களிலும், மண் பரப்புகளிலும் நடப்பட்டிருந்த தீப்பந்தங்களின் ஒளி அங்கு புதியதோர் உலகை சிருஷ்டித்திருக்க, அப்புதிய உலகின் ராணியைப் போல் தேவலோக மங்கையென பியூஷா உதயச்சந்திரனது பார்வையில் பட்டாள்.


" படைத்தலைவரே, சற்று அந்த நதிக்கரை வரை சென்று வரலாமா..? " என்றாள் பியூஷா.


மோகனச் சிலையொன்று தன் 

மென் உதடுகள் திறந்து அழைத்ததை கண்டு ரசித்தவன், அவளது வாய் வார்த்தையில் சிரத்தை கொள்ளாத காரணத்தால் , சற்றே திடுக்கிட்டவனாய்..


" என்ன சொன்னாய்..?" என்றான்.


" நதிக்கரை ஓரம் சென்று வரலாமா என்றேன்.." கூறியதோடு நில்லாமல் அவ்விடம் நோக்கி நடக்கவும் முற்பட்டாள். 


பியூஷா கைகாட்டிய இடமோ வெளிச்சம் படராமல் சற்றே இருள் அடர்ந்து காணப்பட்டது. பதிலேதும் கூறாதவனாய்  மெல்ல உதயச்சந்திரனும் அவளைத் தொடர்ந்தான்.


சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கோதாவரியின் அகன்ற நீரோட்டம் கண்ணைக் கவர, இரவில் நிலவின் கதிர்கள் அந்நதியெங்கும் வெள்ளிக் கலவையை உருக்கி ஊற்றினார் போன்றதொரு பிரமையை வழங்கிக் கொண்டிருந்தது. இருவரும் நதிக்கரை மேட்டில்  அமர்ந்தவர்களாய் , வானத்து நிலவையும், இருள் போர்வை போர்த்திய கோதாவரி படுகை கானகப்பெருவெளியையும் கண்டு மலைத்தனர். பியூஷா விடம் இருந்து ஒரு ஆயாசப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.


" ம்.." 


" என்ன ...ம்.."


" ஆம்..காஞ்சியில் இருந்து கிளம்பி ஒரு திங்களுக்கு மேலாயிற்று, தங்களிடம் தனித்துப் பேச ஒரு வாய்ப்பிருந்ததா..? " என  அலுத்துக் கொண்டாள்.


சற்றே அவளை நெருங்கி அமர்ந்ததோடு, அவளது இடது கரத்தை எடுத்து தனது வலது கரத்தால் பற்றிக் கொண்டதோடு, சற்று பலமாக இறுக்கவும் முற்பட்டான் உதயச்சந்திரன்.


அவனது செயலால் கைகளில் வலி தோன்றினாலும், அந்த வலியும் சற்று இதமாக இருப்பதாகப் பட்டது அவளுக்கு. கைகளைப் பற்றியவன் அவளை தன் நெஞ்சிலும் சாய்த்துக் கொண்டான்.

அவனது பரந்த மார்பில் சாய்ந்தவள், அப்படியே கண்களை மூடியவளாய் தன்னையே மறந்தாள்.

தூரத்தில் இருந்து வெளிவந்த பந்தங்களின் ஒளி அவளை பாதி வெளிச்சத்திலும், பாதி இருளிலும் காட்டி ஏதோ ஒரு மோகன பிம்பத்தை உருவாக்கியதைப்  போலிருந்தது. அவளது கூந்தலில் பட்டுத் தெறித்த ஒளியும் அவனுள் பலவித உள்ளக் கிளர்ச்சிகளை கிளர்ந்தெழச் செய்து கொண்டிருந்தது.


இருவரும்  எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்தபடி இருந்தார்கள் என்பதை கணிக்க இயலவில்லை.

இருவருமே தங்களது சுய நிலையில் இல்லாது, ஒரு மோன நிலைக்கு ஆட்பட்டு இருந்தார்கள்.


அப்போது அவர்களுக்கு எதிரே கோதாவரி நதியில் ஒரு படகொன்று மெல்ல கரை ஒதுங்கியதோடு, அப்படகில் இருந்து இறங்கிய ஒருவன் இவர்களை கவனிக்காதவனைப் போல்,  நதியின் அக்கரையில் இறங்கியதோடு, வேகமாக நடக்கத் துவங்கினான்.


இருவரும் விழிமூடி அமர்ந்திருந்த அவ் வேளையில் , நதியில் துடுப்பினை துழாவும் ஒலி கேட்டு விழித்த உதயச்சந்திரனது பார்வை, தூரத்தில் ஒதுங்கிய படகையும், அதிலிருந்து  இறங்கி நடந்தவனையும் கண்டு ஒரு கணம் திகைத்து, "இங்கு..இவர்..எப்படி..?" என மெல்ல முணுமுணுத்தான்.


_ தொடரும்..


#அனுராஜ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages