19.10.20
ரேவா
வந்து_சேர்ந்தது_உதவி_66
சபர தேசத்தின் நெமிலி நகரில் மாறுவேடத்தில் அலைந்து திரிந்த தந்திதுர்க்கனும், உதயச்சந்திரனும் சத்திரமொன்றில் தந்திதுர்க்கனது தங்கை நிரஞ்சனாதேவி என நினைந்து வேறொருப் பெண்ணை சந்திக்க நேர்ந்ததோடு, சபர தேசத்து அரசன் உதயணன் பல்லவரது படையை எதிர் கொள்வதற்காக , பல்லவரது படை கோதாவரி நதி தீரத்தை அடைவதற்கு முன்னரே, தனது படையினை நகரை விட்டு அப்புறப் படுத்தியதோடு, பல்லவர்களது படையினை பக்கவாட்டில் தாக்குவதற்கான முன்னேற்பாடுகளையும்
செய்திருப்பதையும் அறிந்தனர்.
இருவரும் தந்திதுர்க்கனின் தங்கையான நிரஞ்சனாதேவியையும் தெருவொன்றில் காண்கிறார்கள். ஆனால்..நிரஞ்சனாவை தொடர்ந்து சென்றும், சத்திரத்தில் நுழைந்தது அவளல்ல வேறொரு பெண் என அறிந்ததும் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.
உண்மையில் தெருவில் கண்டது, நிரஞ்சனா தானா என்ற சந்தேகம் எழுந்தது தந்திதுர்க்கனுக்கு.
" தந்திதுர்க்கரே, உண்மையில் நீங்கள் பார்த்தது நிரஞ்சனா தானா..? ஏனெனில் உங்களது தங்கையின் நினைவில் பாதிக்கப் பட்டு நீங்கள் இருப்பதனால் , நீங்கள் காண்பதெல்லாம் உங்களது தங்கையைப் போலவே இ்ருக்க வாய்ப்புண்டு." என்றான் உதயச்சந்திரன் கவலை தொனிக்கும் குரலில்.
" உண்மை தான் படைத்தலைவரே, எனக்கும் இப்போது அந்த சந்தேகம் வந்துவிட்டது. நான் பார்த்தது என் தங்கை இல்லையோ என்று..! பாவம்..எங்கே இருக்கிறாளோ..?
என்னென்ன துன்பங்களை அனுபவிக்கிறாளோ தெரியவில்லை..?" என்றபடி கலங்கினான் தந்திதுர்க்கன்.
" கவலைப் படாதீர்கள் , விரைவில் தங்களது தங்கையும் கிடைத்து விடுவார்."
" நானும் அந்த நம்பிக்கையில் தான் எனது துயரங்களை மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..படைத்தலைவரே."
" சரி..வாருங்கள்..பொழுது சாய்ந்து விட்டது, கோட்டையை விட்டு வெளியேறி விடுவோம். சேந்தன் என்ன தகவல் கொண்டு வருகிறான் என கவனிக்க வேண்டும்.." என்றான் உதயச்சந்திரன்.
ஏனெனில் , இவர்கள் இருவரும் தனியாகவும், சேந்தன் தனியாகவும் நகரை ஆராய்ந்து வருவதாக அல்லவா பேசியிருந்தார்கள்.எனவே உதயச்சந்திரன் சேந்தன் திரட்டி வரும் தகவலை அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தான்.
சுக்கிலபட்ச ஸப்தமி திதி இரவில் வானத்து நிலவு தன் அரைகுறை உடலோடு பவனி வந்தாலும், அந்த கானகப் பெருவெளியில் அதனின் வெளிச்சத்திற்கு ஒன்றும் குறைவில்லை. நிலவிற்கு போட்டியாக வடதிசை சப்தரிஷி மண்டல நட்சத்திரக் கூட்டமும் ,ஆங்காங்கு வானில் ஒளிர்ந்த நட்சத்திரங்களின் வெளிச்சமும் இரவினிலும் தெளிவான பாதையைக் காட்டிக் கொண்டிருக்க, அந்த படைகள் நிதானமாக நகர்ந்து வந்து கொண்டிருந்தன.. தூரத்தில் பல்லவரது படைகள், சபர தேசத்து நெமிலி நகரத்திற்கு அருகில் பாசறை அமைத்திருந்த இடத்தை கண்டதும், படைகளைத் தலைமையேற்று நடத்தி வந்த வீரசேனன் தனது படையை நோக்கியவனாய் , " அதோ பல்லவரது சேனைகள் பாசறை அமைத்துள்ளன..நமது அரசர் கூறிய இடத்திற்கு வந்து விட்டோம் " என உற்சாகமாய் உரக்கக் கூவினான்.
அதைத் தொடர்ந்து படைகள் முழு உத்வேகத்துடன் தங்களதுக் களைப்பினை மறந்து ஆக்ரோசத்துடன் பல்லவரது பாசறையை நோக்கி விரைந்தது.
அதே வேளையில்..பல்லவரது பாசறையில் தன் முன் நின்றிருந்த சேந்தனை ஏறெடுத்த உதயச்சந்திரன்,
"சேந்தா, நெமிலி கோட்டைக்குள் போய் வந்ததில் உபயோகமான செய்தி ஏதாவது உண்டா..? " என்றான் ஆவலுடன்.
"ஆம்..படைத்தலைவரே, பல தகவல்கள் கிடைத்தன. நாம் இங்கு வருவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே உதயணன் தனது பெரும்படையோடு கோட்டையை விட்டு வெளியேறி மேற்கு நோக்கி நகர்ந்து, நம்மை பக்கவாட்டிலும், பின்புறத்திலும் தாக்கத் திட்டமிட்டு காத்திருக்கிறான். அது போக கோட்டைக்குள் ஐயாயிரம் காலாட்படையும், ஆயிரம் புரவிகளும் நம்மை நேரடியாகத் தாக்கவும் எண்ணியிருக்கிறார்கள். தசமி திதியன்று நம்மைத் தாக்க உதயணன் எண்ணியுள்ளதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. " என்றான் சேந்தன்.
" சேந்தா , ஒற்றனுக்கானப் பணியை திறம்பட செய்திருக்கிறாய்..
பாராட்டுகிறேன். நாம் நாளை இரவு மேற்கு நோக்கிச் சென்று உதயணனின் படைபலத்தை அறிந்து வர வேண்டும்."
" நல்லது படைத்தலைவரே.."
" தந்திதுர்க்கரே, உங்களது தேசத்திலிருந்து படை எப்போது வந்து சேரும்..? "
" இன்றோ..நாளையோ வந்து சேர்ந்து விடும் என எண்ணுகிறேன்."
தந்திதுர்க்கன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வெளியில் பரபரப்புத் தொற்றிக் கொள்ள, காவலர்களிடையே கூச்சலும் குழப்பமும் உருவாக, அனைவரும் வெளியே வந்து எட்டிப் பார்த்தனர்.
தூரத்தில் ஒரு பெரும்படை வடக்கிலிருந்து இவர்களது பாசறையை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தது. படைவீரர்கள் அனைவரும் தங்களது ஆயுதங்களை எடுக்கவும், அணிவகுத்து நிற்கவும் முற்பட்டனர். அனைவரது முகத்திலும் வரும் ஆபத்தை எதிர்கொள்வதற்கான கவலைச் சூழ்ந்து கொள்ள பரபரப்பு பற்றிக் கொள்ளத் தொடங்கியது.
உதயச்சந்திரனும், தந்திதுர்க்கனும் உன்னிப்பாய் வருபவர்களை கவனித்துக் கொண்டு இருந்தார்கள். சற்றே நெருங்கி வந்த படைகளைக் கண்டதும் தந்திதுர்க்கனது முகத்தில் மகிழ்ச்சி பூரணமாய் நிலவ,
" இனி கவலை கொள்ளத் தேவையில்லை..எனது படைகள் வந்து சேர்ந்து விட்டன.." என்றான் பூரண மகிழ்ச்சியோடு.
அங்கு எழுந்த குழப்பம் மறைந்து, சட்டென மகிழ்ச்சி குடி கொள்ளத் தொடங்கியது.
மறுதின உதயத்தில் இருந்து கோதாவரி நதிக்கரையே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. காலாட்படைகளின் அணிவகுப்பும், புரவிகளின் குளம்படி சத்தமும் அப்பிராந்தியமெங்கும் புழுதியை கிளப்பிக் கொண்டிருக்க, வீரர்களுக்கு போரில் செயல்படுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப் பட்டுக் கொண்டிருந்தன.
பல்லவர்களது படைகளும், தந்திதுர்க்கனது படைகளும் தயாரான நிலையில் , உதயணனின் படைகளுக்காக காத்திருந்தது.
_ தொடரும்..
#அனுராஜ்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக