20.10.20 - ரேவா : 67 : நந்திபுர_முற்றுகை - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 20 அக்டோபர், 2020

20.10.20 - ரேவா : 67 : நந்திபுர_முற்றுகை



20.10.20



ரேவா


நந்திபுர_முற்றுகை_67


நந்திபுர அரண்மனையை ஒட்டியமைந்திருந்த உத்தியான வனம். நானாவித மலர்ச் செடிகளும், கொடிகளும் பலவித வர்ண மலர்களின் சுகந்தங்களை அப்பகுதியெங்கும் பரப்பிக் கொண்டிருக்க..பன்னீர் மரங்களும், பவளமல்லி மரங்களும் தங்கள் பூக்களை உதிர்த்து பூமியெங்கும் மலர் படுக்கை விரித்திருந்தது.  அங்கிருந்த பளிங்கு மேடையொன்றில் அமர்ந்திருந்த நந்திவர்மனும், ரேவாவும்  பல்லவரது சேனை வடக்கு திசை நோக்கிப் போயிருப்பது குறித்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள். 


ரேவா அவள் பிறந்து வளர்ந்த நர்மதை நதிக் கரை தீரத்தைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள். அவளது  கடிகையின் அனுபவங்களும், அங்கு அவள் பயின்ற காவியங்களில் இருந்தும் ஒன்றிரண்டு பாடல்களைக் கூறியதோடு,பல்லவரது கலைகளும், பல்லவ நாட்டின் மக்களின் நேசமும் தன்னைக் கவர்வதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.


நந்திவர்மனோ, அவள் பேசுவதையே இமை கொட்டாமல் கவனித்தவனாய், அவளது அழகில் லயித்துப் போயிருந்தான்.


" ரேவா..நீ தமிழை அழகாகப் பேசுவது ஆச்சர்யம் தான்.." என்றான் வியப்பு குரலில் தொனிக்க நந்திவர்மன்.


" இதிலென்ன வியப்பு..எனக்கு தமிழ் தாய்மொழியாக இல்லையென்றாலும், தமிழ் ஆசிரியர்களைக் கொண்டு எனது தேசத்தில் தமிழை நான் கற்றுத் தேர்ந்துள்ளேன். 


கடிகையில் எனது ஆசிரியர் கற்பித்தப் பாடலொன்று இன்னும் மனதை விட்டு அகலாதிருக்கிறது.


யாயும் ஞாயும் யாராகியரோ.?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்.?

யானும் நீயும் எவ்வழி யறிதும்..?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


இந்த குறுந்தொகைப் பாடலில் தான் எவ்வளவு செறிந்த கருத்துகள்.  தமிழ் இலக்கியம் ஆழ்ந்த பல கருத்துகளை அல்லவா உள்ளடக்கி வைத்திருக்கிறது.

எனக்கு சிறு வயதில் இருந்தே

இலக்கியத்தின் பால் ஆர்வம் வரவும், வடமொழி இலக்கியங்களும், அதைவிட சிறப்பையும் பெருமையும் வாய்ந்த தமிழ் இலக்கியங்களையும் கற்றுணர வேண்டுமென பேரவா எழுந்தது. எனவே கடிகையை நோக்கி, எனது தந்தையாருடன் வந்து விட்டேன்."


" வந்ததும் நல்லது தான்.." என்றான் மெல்ல..நந்திவர்மன்.


" எதற்கு.? " புரியாமல் கேட்டாள் ரேவா.


" இல்லையென்றால் உன்னை சந்திக்க முடியுமா..? இல்லை..இது போல் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கத் தான் முடியுமா...! " என்றான் .


இவனது வார்த்தைகளைக் கேட்ட அவளது கன்னம் குபீரெனச் சிவந்தது. ஏற்கனவே செந்தாமரை நிறத்தவள், கன்னம் சிவக்க நாணத்தோடு தலைகவிழ்ந்தாள். அவள் இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன,  "சீ..நீங்கள் மோசம் " என்று. ஏனெனில் அவனது கரமோ அப்போது அவளது இடையைத் தழுவிக் கொண்டிருந்தது.


காதலர்களின் தனிமையை கெடுப்பதற்கே வந்து சேர்ந்தவனாய் , சீராளன் வந்ததோடு,  "அரசரே, தளபதியாருக்கு கடுமையான சுரம் கண்டிருக்கிறது." என்றான் கவலையுடன்.


" என்ன..தளபதியாருக்கு கடுமையான சுரமா..நேற்று இரவு நன்றாகத் தானே இருந்தார்.." என்றவனாய் சட்டென எழுந்ததோடு, " ரேவா, நீ அறைக்குச் செல், நான் தளபதியாரை  சந்தித்து விட்டு வருகிறேன்." என்றவனாய், சீராளனைத் தொடர்ந்தான்.


மஞ்சத்தில் படுத்திருந்த தளபதியின் முகம் சோர்வாய் காணப்பட்டது. அவரை வைத்தியர் ஒருவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.


" சுரத்தின் வேகம் கூடுதலாக இருக்கிறது. நல்ல ஓய்வு தேவை." என்றவராய் , சில சூரணங்களை தேனில் குழைத்து அவரது நாவில் தடவியதோடு, நான் தரும் மருந்தை வேளாவேளைக்கு தர வேண்டும். சுரத்தின் வேகத்தில் பிதற்றல்களும் இருக்கும் பயப்படத் தேவையில்லை.." என்றவராய் விடைபெற்றார்.


" சீராளா..நீ காஞ்சிக்கு சென்று, தளபதி அவர்களின் மகளை இங்கு அழைத்துக் கொண்டு வந்து விடு. இவரது சுரம் குணமாகும் வரை நாமும் இங்கிருந்து நகர இயலாது. இரவும், பகலும் இவரை பொறுப்பாய் கவனித்துக் கொள்ள பூங்குழலி இங்கிருந்தால் நல்லது."


சீராளனும் அதையே சொல்ல எண்ணியிருந்தான்.ஆனால் நந்திவர்மனிடமிருந்து அந்த வார்த்தைகள் வந்ததும் சீராளனின் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.

ஆஹா..பூங்குழலியை காஞ்சியிலிருந்து இங்கு அழைத்து வரப் போவதே அவனுக்கு பெரு மகிழ்ச்சியை உருவாக்கியிருந்தது.


" சரி.." என்றவனாய் உடனே விடைபெற்றான்.


மறுநாள் இரவே பூங்குழலி நந்திபுரம் வந்து விட்டாள். அதுவரை மஞ்சத்தில் சோகமயமாய் விழுந்து கிடந்த பல்லவடி அரையனோ தனது மகளைக் கண்டதும் முகத்தில் புன்முறுவல் விகசிக்கக் கொஞ்சம் தெளிந்து காணப்பட்டார்.


பல்லவடி அரையனது மஞ்சத்தைச் சுற்றி நின்றிருந்த நந்திவர்மன், ரேவா, பூங்குழலி, சீராளன் போன்றோர்  அவரது முகத்தில் காணப்பட்டத்  தெளிவைக் கண்டதும் சற்று ஆசுவாசப் பட்டதோடு, " தளபதியாரே தற்போது தங்களது உடல் நிலை எப்படி உள்ளது..? " என்றான் நந்திவர்மன்.


" இப்போது பரவாயில்லை..சுரத்தின் வேகம் சற்று மட்டுப் பட்டிருக்கிறது. நாக்கு தான் சுவையறிய மறுக்கிறது. "


" என்ன செய்வது கடந்த இரண்டு தினங்களாக நீங்கள் உட்கொண்ட மருந்தின் வீர்யம் நாக்கில் தங்கியிருக்கும் அல்லவா..நன்கு ஓய்வெடுங்கள் சரியாகி விடும்." என்றவனாய் அவரை மெல்ல படுக்கையில் சாய்ந்து கொள்ள நந்திவர்மனும், சீராளனும் உதவினார்கள்.


அப்போது ஒரு வீரன்  அவசரமாய் உள்ளே நுழைந்தவனாய்.. " அரசருக்கு பணிவான வணக்கம்..கவலை தரும் செய்தி.."


" என்ன செய்தி..? "


" நந்திபுரத்தை முற்றுகையிட பாண்டியரது படையும், கங்கனது படையும் இணைந்து வருகிறது. பாண்டியரது படை இரண்டு காத தூரத்தில் தான் இருக்கிறது."


" என்ன..! " ஏக காலத்தில் அனைவரும் அதிர்ந்தார்கள்.


" நந்திவர்மா..இந்த இக்கட்டான வேளையில் எனது உடல் நலம் வேறு சங்கடத்தில் உள்ளது..இங்கு நமது படைகளின் எண்ணிக்கையும் குறைவு. மன்னரது ஆபத்துதவி படைகள் மட்டுந்தானே இங்கு தங்கியிருக்கிறது..இந்த முற்றுகையை எப்படி எதிர் கொள்வது..? " என்றார் பல்லவ தளபதி பல்லவடி அரையன்.


" தளபதியாரே, நீங்கள் ஓய்வெடுங்கள்..நான் அதற்கான வழிமுறைகளைப் பார்க்கிறேன்." என்றவனாய் சீராளனை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.


நந்திபுர அரண்மனையின் மற்றொரு அறையொன்றில. நந்திவர்மன் அமர்ந்திருக்க, சீராளனும், நந்திபுரக் கோட்டை தலைமைக் காவலனும் எதிரே நின்றிருந்தனர்.


" கோட்டைத் தலைவரே.. இந்த கோட்டையில் தற்போது உணவு தானியங்கள் இருப்பு எத்தனை நாட்களுக்கு தாங்கும். இந்நகர வாசிகள் மற்றும் படைவீரர்களை கணக்கிட்டு கூறுங்கள்." என்றான் பலத்த யோசனையோடு.


" அரசே..பதினைந்து நாட்களுக்கு தாங்கலாம்..அதற்கு மேல் சாத்தியமில்லை..தங்களுடன் வந்த படைவீரர்கள் ஐநூறு பேரும், இந்த கோட்டை பாதுகாவலுக்கென உள்ள நூறு பேர்களும் உள்ளனர். இங்குள்ள ஜனத்தொகை ஐயாயிரத்தைத் தாண்டாது."


" கோட்டைச் சுவரின் தன்மை, அதில் பொருத்தப் பட்டுள்ள விற்பொறி, வேற்பொறி எந்திரங்கள் நல்ல நிலைமையில் உள்ளனவா..? "


" அவை வாரந்தோறும் பழுதுபார்க்கப் பட்டு நல்ல நிலைமையில் தான் இருக்கின்றன. ஆயுத இருப்புகளும் கணிசமான அளவில் இருக்கின்றன..ஆனால்.."


" என்ன..ஆனால்..? " என இழுக்கிறீர் ..தயங்காமல் சொல்லுங்கள். கோட்டையின் பலமறிந்தால் தான் ,  #முற்றுகைப் போரில் துணிந்து இறங்க இயலும்." என்றான் நந்திவர்மன்.


" அரசே..பாண்டியரது சேனை பலம் வாய்ந்தது, எண்ணிக்கையும் அதிகம். கங்கனது படையும் இதனோடு இணைய விருக்கிறது. நமது சேனைகளோ அறுநூறு வீரர்களை மட்டுமே கொண்டிருக்கிறது..அது தான்.."


" ஓ..இது தான் கவலை கொள்ள வைக்கிறதா..?

கோட்டைத் தலைவரே , நம்மிடம் இப்போது படைகள் கைவசமில்லை. எனவே கோட்டைக்குள் இருந்தபடி முற்றுகையைத் தான் நீட்டிக்க வேண்டும்..அதற்குள் நமது படைத்தலைவர் உதயச்சந்திரனுக்கும் ஓலையொன்றை அனுப்பி இங்கு நம்முடைய படைகளை திருப்பி வர வைக்க வேண்டும்."


" என்ன பரிவேள்வியை பாதியில் நிறுத்தியா..?!"

என்றான் சீராளன்.


" வேறு வழியில்லை சீராளா..நமது மண்ணில் ஏற்பட்டுள்ள இக்கட்டினைக் களையவே முதலில் வழி காண வேண்டும் . பிற தேசத்து வெற்றியை எப்போதும் ஈட்டலாம். சீராளா..நான் தரும் ஓலையை கவனமாக நீ நமது படைத்தலைவர் உதயச்சந்திரனிடம் சேர்ப்பிப்பதோடு, அவரையும் , பல்லவ சேனைகளையும் விரைவில் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவரையில் பாண்டியர்களை நான் கோட்டையை நெருங்க விடாதவாறு பார்த்துக் கொள்கிறேன்." என்றான் நந்திவர்மன்.


" அரசே..இப்போது இங்கு தங்களுக்குச் சரியானத்  துணையும் இல்லை. தளபதி வேறு உடல்நலக் குறைவால் அவதியுறுகிறார்..இவ்வேளையில்  நானும் வெளிக் கிளம்புவது உசிதமான செயலாகப் படவில்லை.." என்றான் கவலை தொனித்தக்  குரலில் சீராளன்.


" கவலை வேண்டாம். பாண்டியனை நெருங்க விட மாட்டேன். ஆனால் காலம் தாழ்த்தாமல் நமதுப்  படைகளை அழைத்து வந்து விடு. நீ கிளம்ப ஆயத்தமாய் இரு. " என்றவனாய், ஓலையொன்றை எழுதி ஒரு குழலில் இட்டு சீராளனிடம் தந்து அவனை வழியனுப்பி வைத்தான்.


பாண்டியர்களின் பேரில் எரிச்சலாய் வந்தது சீராளனுக்கு. பூங்குழலியை இப்போது தான் அழைத்து வந்தான்..அவளிடம் சரிவர பேசுவதற்கு கூட வாய்ப்பில்லாமல் , உடனே நந்திபுரக் கோட்டையை விட்டு கோதாவரி நதி தீரத்திற்கு போக வேண்டுமென்றால் , எரிச்சல் வராமல் என்ன செய்யும். பாண்டியனை திட்டியபடி புரவியில் ஏறியவன், தனது கோபத்தை புரவியின் மேல் காட்ட..அது தலைதெறிக்க ஓடியது.


                       *            *             *


பின்னிரவு வேளை..


அடர்ந்த கானகத்தில் தங்களதுப் புரவிகளை மெல்லவே நடத்திப் போய்க் கொண்டிருந்தார்கள்  உதயச் சந்திரனும், சேந்தனும். பல்லவச்  சேனை முகாமிட்டு இருந்த திக்கில் இருந்து மேற்கு நோக்கி கோதாவரி நதிக்கரையின் மீதே போய்க் கொண்டிருந்தது அக் கானகப் பாதை. பெருவழிப் பாதையைத் தவிர்த்தவர்களாய், கானகத்தின் ஊடே உள்ளே நுழைந்து  வளைந்தும், நெளிந்தும்  சென்ற ஒத்தையடிப் பாதையில் ஒருவர்பின் ஒருவராக அவர்களது பயணம் தொடர்ந்தது. ஆங்காங்கு கேட்டுக் கொண்டிருந்த துஷ்ட மிருகங்களின் சத்தங்களை அலட்சியம் செய்தவர்களாய் முன்னேறிக் கொண்டிருந்தவர்கள் , உதயணனது  சேனை எங்கு முகாமிட்டிருக்கிறது என் பதை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் போய்கொண்டிருந்தார்கள்.


பல்லவர்களது  சேனைகள் பாசறை அமைத்து தங்கியிருந்த தொலைவில் இருந்து இரண்டு காத தூரத்தில் தான் சபர தேசத்து படைகள் முகாமிட்டிருந்தன. தூரத்தில் நெருங்குகையில் எரிந்து கொண்டிருந்த பந்தங்களும், வீரர்களின் கூச்சல்களும் படைகள் பாசறை அமைத்திருப்பதை உறுதி செய்தது. படைகளை தன் பார்வையால் அளந்தான் உதயச்சந்திரன். 


பல்லவரது சேனை அளவு இல்லை. சற்று குறைவான படை வீரர்கள் தான். கோட்டைக்குள் வேறு இருப்பதாக கூறினார்கள் அல்லவா..அனைத்தையும் சேர்த்தாலும் நமது படைபலத்திற்கு முன் குறைவு தான். என மனதிற்குள் எண்ணிக் கொண்டவன். படைகளில் புரவிகளை விட காலாட்படை வீரர்களே அதிகம் இருப்பதையும் நினைவில் இருத்திக் கொண்டான். அப்போது  தான் மையத்தில் இருந்த  ஒரு கூடாரத்தினை விட்டு வெளியேறிய காம்போஜ நாட்டு முதியவனைத் தொடர்ந்து, அவனோடு கூடாரத்தை விட்டு வெளி வந்த ஒருவர் அவனது முதுகில் தட்டிக் கொடுத்ததோடு, அவனது கையில் துணியாலான முடிப்பையும்  கொடுத்தார்.


அனேகமாக அது தான் உதயணனாக இருக்க வேண்டும். மன்னருக்கான புற அழகோடு காட்சி தந்தார் முடிப்பினைத் தந்தவர்.


முடிப்பினைப் பெற்றதும், இவர்கள் இருக்கும் திசை நோக்கி வரத் துவங்கினான் முதியவன்.

 

இருவரும் மரத்தின் இருட்டில் நன்கு பதுங்கிக் கொள்ள, கூடார வாசலில் நின்ற உதயணன் அப்போது யாரும் எதிர்பாராத அச்செயலைச் செய்தான்.தனது இடைக் கச்சையில் இருந்து குறுவாளை எடுத்தவனாய் முதியவனின் முதுகை நோக்கி எறிய, அது முதியவன் முதுகில் தஞ்சமடைய , அவன் முதுகில் பாய்ந்த கத்தியோடு இருவரும் ஒளிந்திருந்த கானகப் பகுதிக்குள் ஓடி வந்தான். உதயணனோ, வீரர்களை அனுப்பி அம் முதியவனை பிடித்து வர கட்டளையிட அப்பகுதி அல்லோகலப்படத் துவங்கியது.


கத்திக் காயத்துடன் கானகத்திற்குள் நுழைந்த முதியவனை வலுவான ஒரு கரம் பற்றி இழுத்ததோடு, அவனை வேறு திசையின் பக்கம் இழுத்துச் சென்றது.


_ தொடரும்..


#அனுராஜ்.


குறிப்பு : #முற்றுகைப் போர் என்பது  இலக்கியத்தில் உழிஞைப் போர் என வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages