12.11.20 - தென்குமரிக் கவிதைக்களம்

வெள்ளி, 13 நவம்பர், 2020

12.11.20






சுந்தரம்


பேச்சியம்மாள்


நல்ல தூக்கம் தூங்கி கொண்டிருந்தபோது,   “சட்”  என்று விழிப்பு வந்து விட்டது.  தண்ணீர் குடித்து மீண்டும் படுத்துக் கொண்டேன்.  ஆனால் தூக்கம் வராமல் பேச்சியம்மாள் சம்பந்தமே இல்லாமல்  நினைவுக்கு வந்தாள். எங்கள் குடும்பத்தோடு எந்த சம்பந்தமும் இல்லாவிடிலும், எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருந்தாள். 


நாங்கள் கிராமத்தில்  சிறு பிள்ளைகளாக  கோடை விடுமுறைக்கு பாட்டி  வீட்டுக்கு செல்லும்போது  எங்களுக்கு பல கதைகள் சொல்லித் தருவாள்.  விளையாடுவாள்.  அவளும் அவள் அம்மாவும் ஒரு பெரிய வீட்டின் பின்புறம்  காம்பௌண்ட்  சுவற்றை ஒட்டி   தடுப்பு வைத்து  சிறிய அறையில் தங்கிக் கொண்டிருந்தார்கள் .


 அவர்களுக்கும், மற்றும் கிராமத்தில் யார் கூப்பிட்டாலும் மறுக்காமல்  இருவரும் போய் வேலை செய்து அங்கேயே சாப்பிட்டு வருவார்கள்.


எனக்கும் பேச்சுக்கும் ஓரிரு வயது வித்தியாசம் இருக்கலாம்.  ஒருமுறை விடுமுறைக்கு போனபோது,


“ பேச்சி படிக்க வேண்டியதுதானே?”

  என்று கேட்டேன் ஏதோ ஜோக் கேட்டதை போல பலமாக சிரித்தாள்.


“ எனக்கு உன்னைமாதிரி  எல்லாம் படிப்பு வரலை  விஷ்ணு  படிச்சு நான் என்ன பண்ண போறேன் “


பம்பரம், தாயம், பல்லாங்குழி,  கலர் கலர் எல்லாம் விளையாடுவோம்.

பேச்சிக்கு கலர் கலர் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.


 அதுவும் வாட்கலர்? என்று அவளிடம் கேட்டால்,  எப்போதும் பச்சை கலர் என்பாள். நாங்கள் அவள் பச்சை கேட்பாள் என்று இலைகளை ஜோப்பில் வைத்திருப்போம்.  அப்போது அவள் இல்லாத பச்சை கலர் சொல்வாள்.   கிளிபச்சை  அல்லது பாசி பச்சை.

 

அதென்ன பாசி பச்சை பேச்சி?


நம்ம கோயில் குளத்தில் படிக்கட்டில் மீன் சாப்பிட வருமே? 


என்று சொல்லி அழைத்து போய் காட்டினாள். 


ஒருமுறை விளையாடும்போது  அவள் சொல்லும் பச்சைக்கலர்  சொல்ல அவள் ஓடிப்போகாமல் நின்றுகொண்டிருத்தாள்.


“ நீ அவுட்”  என்றபோது  சிரித்தபடி அவளது கையை காட்டினாள் . பேச்சியம்மாள் என்று பச்சை குத்தி இருந்தது ..


அவளுக்கு பாசி பச்சைக்கலர் ரொம்ப பிடிக்கும் என்றும் கண்ணாடி வளையல் பிடித்தாலும் உடைந்து விடும் என்பதால் அம்மா வாங்கி தருவதில்லை என்று சொன்னதால் ஒருமுறை  கோடை விடுமுறைக்கு வரும்போது  அவளுக்கு பாசி பச்சை கலரில் கண்ணாடி வளையல்கள் ஆறு வாங்கி வந்து கொடுத்த போது என்னுடைய வயது பனிரெண்டு. அவளுக்கு பதினான்கு இருக்கலாம்.


“ நல்லா  இருக்கு.. கோமதிக்கா  வாங்கினே?  


“கோமதிக்கு அப்பா வாங்கி தருவார் உனக்கு யார்  இருக்காங்க  பேச்சி  அதுதான் நான்  வாங்கிட்டு வந்தேன் .”


அவள் என்னை தீர்கமாக  பார்தாள்  

 

“இந்தா  வேண்டாம் விஷ்ணு  அம்மாவுக்கு பிடிக்காது எந்த ஆம்பிள  எது கொடுத்தாலும் வாங்கிக்க கூடாதுனு சொல்லி இருகாங்க”


“நான் கொடுத்தால் கூடவா?”


“ நீ ஆம்பிளைதானே?”


இப்போது யாராவது இந்த கேள்வி கேட்டால் கோபப்படும் மனது அப்போது ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.


பெரிய வகுப்பு போன பின்னர் கிராமத்திற்கு போய் வருவது நின்றது.

பாட்டி  இறந்து விட,  வீட்டை விற்று விட்டனர்.   நான்  அதன் பிறகு ஓரிரு முறை மட்டுமே சென்றிருந்தேன்  அவள் அம்மாவும் இறந்து விட பேச்சி  

மட்டுமே.....  அவளுக்கு கல்யாணம் செய்து கொள்வதிலும் நாட்டம் இல்லை ஆனால்  பச்சிளம் குழந்தைகளை நன்கு பார்த்து கொண்டாள்  எனக்கு இப்போ நாற்பது பேரன் பேத்திகள் என்பாள்.   


எனது மகனும் மருமகளும் பேரனும் வெளிநாடு சென்று தங்க முடிவெடுத்ததால்  கிராமத்திற்கு சென்று அம்மனை கண்டிப்பாக தரிசிக்க வேண்டும் என்று சொன்னேன்.   என் மனைவிக்கு இது  பிடிக்கவில்லை. ஆனால் என் பிடிவாதம் வென்றது.


“ அங்கு யார் இருக்காங்க?  போனா ஹோட்டல்ல தான் திங்கணும் எனக்கு பிடிக்காது”


“ பரவாயில்லை நான் உனக்கு வேற  ஏற்பாடு  பண்ணித்தரேன்”


“ எப்படி”


 நான் பதில் சொல்லவில்லை    .

 

பேச்சியம்மாளிடம் என் மனைவிக்கு மட்டும் செய்து தரச்சொல்லி  ஹோட்டல் அறையில்  கொண்டு  கொடுத்தேன்.


“ ரொம்ப நல்லா  இருக்கு  ஒரு வாரம் வேணும்னாகூட தங்கலாம்” என்றாள் 


 கார் எடுத்து கொண்டுபோய்  பேச்சியம்மாளுக்கு பாசி பச்சைக்கலரில்  புடவையும்  அதே கலரில் கண்ணாடி வளையலும்  வாங்கிக் கொண்டு வந்தேன் 


“பேச்சி வாங்கிக்க”


“ என்னது”


சொன்னேன்..


“ விஷ்ணு  நீ சின்ன பையனாவே  இருக்கயே  மாறவே இல்லை...”


“என்னாச்சு?”


“ எனக்கு வேண்டாம்”


“ பேச்சி,  இப்போ  உங்க அம்மா இல்லையே..  யாரும் திட்ட மாட்டாங்க”


விஷ்ணு, போலீஸ் சிக்னலில் நின்னுட்டு இருந்தா ஒரு மாதிரி.. இல்லேன்னா ஒரு மாதிரினு பட்டணம் உன்னை  மாத்தி இருக்கலாம். நான் அப்படியில்லை...   சரி.. நீ இதை  வாங்கிகிட்டு வந்தியே..   உன் மனைவிக்கு தெரியுமா?


“ தெரியாது..  அப்ப.. நீ என்னை சந்தேகப்படறயா?”


“ விஷ்ணு உன்னை பத்தி எனக்கு தெரியும்.. ஆனா ஊர் உலகம் என்ன சொல்லும்?  நீயும் தாத்தா ஆயிட்டே.. நானும் பாட்டி ஆயிட்டேன் ஆனாலும் ஊர் வாயை மூட முடியாது..  நீ உன் மனைவி  கிட்ட சொல்லாதது காரணம் தேவையில்லாத பிரச்சனை வேண்டாமுன்னுதானே?”


“ ஆமாம்”


“ அப்ப பிரச்சனை வரும் அப்படிங்கற குற்ற உணர்வோடு எதுக்கு விஷ்ணு?  உன் விகல்பம் இல்லாத மனசு எனக்கு தெரியும்.  வேண்டாம் விஷ்ணு..  எனக்கு புதுசா கிடைக்கிற நிறைய புடைவைகளை  முதியோர் இல்லத்துக்கு கொடுத்திடறேன் எனக்கு நாலு இருக்கு போதும்..”


“இனி நான் வாங்கி வரலை உனக்கு என் மேல் அன்பு இருந்தா இப்ப வாங்கிக்க...”  


“ கொடுத்தாதான் அன்புன்னு இல்லை விஷ்ணு”


“ சரி இந்தா”


“ நான் இன்னும்  குளிக்கலை சாமி நடையில் வச்சிட்டு போ”


“ வேற யாருக்கும் கொடுக்க கூடாது”


“ சரி”  சிரித்தாள்.


“எதுக்கு சிரிக்கிறே?”


“ என் கண்ணுக்கு அதே சின்ன வயசு விஷ்ணுவா தெரியறே”  


எந்த உள்ளுரணவு என்னை அன்று அப்படி தீர்க்கமாக அழைத்து சென்றதோ தெரியவில்லை.. வந்து இருபது நாட்கள்கூட ஆகவில்லை ..பேச்சியம்மாள் 


ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டாள் என்று தகவல் வர, உடனே கிளம்பி சென்றேன்..


 அங்கே கிராமமே கூடி அழுது கொண்டிருந்தது.. எனக்கு வழி விட்டார்கள்.. நான் வாங்கி கொடுத்திருந்த பச்சை வளையல்கள் அணிவித்து கொண்டிருந்தனர். பாசிகலர் பச்சை  புடைவையால் போர்த்தினர்.


கடைசி வரை அவளாக எடுத்து அணியவில்லை ..


அணியாமல்  என்னை  ஏமாற்றவும் இல்லை .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages