சுந்தரம்
06.01.21
ஜன்னல்
நான், அம்மா, அண்ணா, தங்கை கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தோம்.
' அம்மாவுக்கு அடுத்து ஆடவேண்டியது அண்ணா பாலு. அம்மாவுக்கு தோதாக ரெட் அண்ட் பாலோ இருந்தாலும், அம்மா வேண்டும் என்றே மைனஸ் போட்டு ஒரு பிளாக் காயின் எடுத்து வைத்து பாலுவிடம் ஸ்ட்ரைக்கரைக் கொடுக்க, நான் கொதித்துப் போனேன் .
“அம்மா அவனுக்கு எதுக்கு விட்டுக் கொடுத்தே அவன் உன்னோட செல்லம்னு தானே”
“போடா எனக்கு நீங்க எல்லோரும் ஒருமாதிரிதான்”
அம்மாவுக்கு பாலுவிடம் தனியாக ஒரு பாசம் இருக்கத்தான் செய்தது. அதுதான் எங்களுக்கு புரியாத மர்மமாக இருந்தது
.அடுத்து ஆடிய பாலு ரெட் அண்ட் போலோ கச்சிதமாகப் போட்டு முடித்தான் .
கிரிக்கெட் விளையாடினால் அவனை ஓட விட மாட்டாள்.
கஷ்டமான வீட்டு வேலைகளை எங்களுக்குத்தான் தருவாள். அவனுக்கு எங்கள் மீது பாசம் இருந்தாலும், அநியாயத்துக்கு அவனும் அம்மாவிடம் ரொம்ப ரொம்ப ஒட்டுதலாக இருப்பான்.
இவ்வளவு ஏன் அம்மா குளித்து விட்டு வருவதற்குள் அம்மா கட்டிக்கொண்டு போகக்கூடிய சேலையில் முன்னும் பின்னும் கொஞ்சம் இடம் விட்டு நடுவில் அழகாக கொசுவம் வைத்து துணிக்கு போடும் கிளிப் போட்டு வைத்திருப்பான்..
அம்மாவின் வாட்டர் கேனில் தண்ணீர் பிடித்து வைத்து டிபன் டப்பாவில் சாப்பாடு குழம்பு ஊற்றி துடைத்து அழகான ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து கூடையில் வைத்து விடுவான்.
நாங்கள் ஸ்கூல் விட்டு வந்ததும் விளையாடப் போனால் இவன் உலர்ந்த துணிகளை மடித்து வைத்து காபி போட்டு எங்களுக்கு தந்து, அம்மாவுக்கு சூடாக பிளாஸ்கில் விட்டு வைத்து விட்டு ஹோம் ஒர்க் பண்ணிக்கொண்டு இருப்பான். அம்மா வருவதற்கு லேட் ஆனால் அவனே விளக்கு ஏற்றி வைத்து விடுவான்.
நவராத்திரி வந்து விட்டால் அம்மா ஒரு புது உற்சாகத்தோடு நடந்து கொள்வாள் . ஆபீஸ் போவதற்குள் நைவேத்தியம் வைத்து பூஜை செய்து விடுவாள்.
பொம்மைகளுக்கு அம்மாவும், பாலுவும் பேப்பரில் செய்த உடைகளை அணிவிப்பார்கள் . பாலு தங்கலர் பேப்பர் நிறைய வாங்கி வருவான். கலர் பேப்பரில் இருபுறமும் பார்டர் வருவது போல ஒட்டி அசல் பட்டு வேட்டி, பட்டுப் புடவை போல தயார் பண்ணி விடுவான். பேப்பர் பஞ்சிங் மெஷினில் ரவுண்டு ரவுண்டாக கட் பண்ணி அந்த கலர் பேப்பரில் கோல்டன் ரவுண்டு ஓட்டுவான்.
ஒருமுறை அம்மாவுக்கு ஆஃபிஸில் ஆடிட்டிங் நடந்துகொண்டிருக்கும் வேளையில் பாலுவுக்கு கடுமையான காய்ச்சல். லீவு போட முடியாத சூழல். அப்பா வெளியூரில் வேலை. அம்மா கொடுத்த மாத்திரையைப் போட்டுக் கொண்டவன் அம்மா காலையில் கட்டிக் கொண்டு அவிழ்த்துவிட்டுச் சென்றிருந்த சேலையைப் போர்த்திப் படுத்துக் கொண்டான்.
“ என்னடா இப்படி பண்றே?”
“ அம்மா வாசம் வருதுடா அம்மா என்கூடவே இருக்கறாப்போல இருக்குடா “
மாலையில் வந்த அம்மா அவனருகில் செல்ல மெல்ல முறுவலித்தான். அம்மாவின் ரவிக்கையின் கைப்பகுதியில் முழங்கைக்கு மேல் பகுதியை இருக்கைகளில் பிடித்துக் கொண்டான் . ஜில் என்று இருந்தது. காய்ச்சல் உடனே குறைவது போல அவனுக்கு தோன்றியது..
அவன் கை அனலாக கொதிக்க, டாக்டரிடம் கூட்டிச் சென்றாள் .
அவனுக்கு என்ன பிரச்சனை என்று தெரிவதற்கு முன்னரே கடுமையான காய்ச்சலில் அவன் எங்களை விட்டு சென்றுவிட , எங்களைவிட அந்த இழப்பு அம்மாவை கடுமையாக தாக்கி மனநலம் பாதிப்படையச் செய்தது .
அம்மாவை தவிர அப்பாவிற்கு கூட அண்ணா பாலுவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.
அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொள்ளக் கூடிய நிலையில் அம்மாவும் இல்லை.
நாங்கள் வசித்தது வாடகை வீடுதான் . பாலு போன பின்பு வீடு தலைகீழாக மாறிவிட்டது. '
பொறுப்பில்லாமல் இருந்த நான், நல்ல விதமாக நடந்து கொண்டேன். தங்கை சமையல் செய்வாள். அப்பா இந்த ஊரிலேயே வேலை தேடிக் கொண்டார் .
நான் காலேஜ் போய் கொண்டிருந்தபோது அம்மா வீட்டிலிருந்த ஜன்னல் வழியே, என்னையும், தங்கையையும் பார்த்துக் கொண்டிருப்பாள் . கட்டிலோடு அம்மாவை அப்பா கட்டி வைத்து இருந்தார்.
மாலை கொஞ்ச நேரம் அம்மாவின் அறையில் இருப்போம். சற்று தள்ளி அமர்ந்து வீட்டுப் பாடம் படித்துக் கொண்டிருப்போம் . அப்பா வந்து அம்மாவை கவனித்துக் கொள்வார்.
பாலுவின் இழப்பு ஒவ்வொரு நாளும் எங்களை வேதனைப் படுத்திக் கொண்டுதான் இருந்தது. ஒரு நாள் நானும் தங்கையும் வெளியில் காலேஜ் போகும் போது அம்மா ஜன்னல் வழியே எங்களைப் பார்த்து கத்தினாள் . ஜன்னல்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தாள் . திரும்பி வந்தால் பேசாமல் இருந்தாள். மீண்டும் சென்றால் கத்த ஆரம்பித்தாள்.
அப்பா எங்களை சமாதானப் படுத்தி காலேஜ் அனுப்பி வைத்தார்.
மாலை காலேஜ் முடிந்து வரும்போதே வீட்டு வாசலில் கூட்டம். என்னவோ ஏதோ என்று ஓட்டமும் நடையுமாக ஓடிவந்தோம். பாலுவின் நினைவோ, அல்லது அவனது வேண்டுதலோ, அம்மாவும் அவனை நோக்கி பயணமானாள்.
அன்று அவளுக்கு எதுவோ தெரிந்திருக்கிறது. எங்களை காலேஜ் போக வேண்டாம் என்று சொல்ல நினைத்திருப்பாளோ? என்னவோ? மனதில் என்ன நினைவுகளோ?
ஒரு மாதம் கழித்து வீட்டு ஓனர், வீட்டை விற்கப் போவதாகவும், எங்களை வீட்டை காலி பண்ணி கொடுக்கச் சொன்னார்.
அம்மாவின் நினைவுகளும் அந்த வீட்டில் நாங்கள் அனைவரும் உறவாடிய நினைவுகளும் வந்து மோதின.
வீட்டை வாங்கிக்கொள்ள கூடிய நிலையில் நாங்கள் இல்லை. மிக்க வருத்தத்துடன் வீட்டை காலி செய்து கொடுத்தோம்.
வாரம் ஒரு நாள் அந்த வீட்டின் முன்புறம் வழியாக சென்று எங்கள் நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டு வருவோம் .
அன்றும் அப்படி செல்லும் போது வீட்டை இடித்துக் கொண்டிருந்தார்கள். ஜன்னல்கள் தனியே கழற்றி வைத்திருந்தார்கள்.
நான் தயங்கி, தயங்கி வீட்டு உரிமையாளரிடம், அம்மா ஜன்னல்களைப் பிடித்துக் கொண்டு எங்களைப் பார்த்த காட்சியை சொல்லி, அந்த ஜன்னல்களை மட்டும் விலைக்கு தருமாறு கேட்டுக் கொள்ள , அவர் எங்கள் நிலை அறிந்து ஜன்னல்களை இலவசமாகவே கொடுத்தார்.
இப்பவும் நான் வேலைக்கு போகும் போது அந்த கழற்றி வைத்துள்ள ஜன்னல்களைப் பார்ப்பேன். அம்மா என்னைப் பார்த்து, டாடா காட்டுவது போல் தோன்றும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக